சென்ற வாரம் நானும் நண்பர் கடலூர் சீனுவும் ஏதேனும் ஒரு பயணம் நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். நாங்கள் உத்தேசித்திருந்த நாளில் எங்களால் அந்த பயணத்தை நிகழ்த்த இயலவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னால் அவரிடம் பேசிய போது நிலுவையில் இருக்கும் பயணத்தை திங்களன்று நிகழ்த்துவோம் என்று கூறினார். நாங்கள் இருவருமே பயணிப்பவர்கள். ஆனால் நாங்கள் சந்தித்துக் கொள்வதில் எங்களுக்கு சில சிறு தடைகள் உண்டு. எனது ஊருக்கும் சீனுவின் ஊருக்கும் இடையிலான தூரம் 95 கி.மீ. அவர் இங்கு வந்தாலோ நான் அங்கு சென்று திரும்பினாலோ போவதும் வருவதும் 190 கி.மீ என்றாகி விடும். எனவே நாங்கள் எங்கள் இருவருக்கும் ஏறக்குறைய சம தூரத்தில் இருக்கும் சிதம்பரத்தில் சந்திப்போம். சிதம்பரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பிச்சாவரம், கொடியம்பாளையம், திருச்சோபுரம், காட்டுமன்னார் கோவில், குள்ளஞ்சாவடி, பெருமாள் ஏரி, வடலூர் ஆகிய பகுதிகளில் பலமுறை சுற்றியிருக்கிறோம். இவை மட்டுமன்றி புதுவை, திண்டிவனம் பகுதிகளிலும் சுற்றியிருக்கிறோம். எங்கள் பிராந்தியங்களிலிருந்து வெளியே எங்காவது சென்றால் தான் புதிய பயணம் என்னும் நிலை.
இன்று காலை 10 மணிக்கு கடலூரில் புறப்படுகிறேன் என்றார் சீனு. நான் அவரை காலை 8.30க்கு புறப்படுங்கள் என்று சொன்னேன். 8.40க்கு ஃபோன் செய்து கிளம்பி விட்டாரா என்று கேட்டேன். ஆலப்பாக்கம் ரயில்வே கேட் தாண்டி விட்டேன் என்றார். நான் காலை உணவை அருந்தியிருக்கவில்லை. அவசரமாக 4 தோசைகளை சாப்பிட்டு விட்டு தலையில் ஹெல்மட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். சீர்காழி தாண்டியதும் ஃபோன் செய்தேன். அவர் அப்போதுதான் சிதம்பரம் தேரடி கீழவீதி நிறுத்தத்தில் இறங்கியிருந்தார். ‘’சீனு ! கொஞ்சம் சிரமம் பாக்காம சீர்காழி பஸ்ல ஏறி கொள்ளிடன் பஸ் ஸ்டாப்ல இறங்கிடுங்க. நான் 10 நிமிஷத்துல அங்க இருப்பன். உங்களுக்கும் 10 நிமிஷம்தான் ஆகும்.’’ நான் சில நிமிடங்களில் அங்கு சென்று விட்டேன். சீனுவும் ஒரு பேருந்தில் வந்திறங்கினார். நான் வேட்டி சட்டை உடுத்தியிருததாலும் தலையில் ஹெல்மட் அணிந்திருந்ததாலும் என்னை சீனுவால் அடையாளம் காண முடியவில்லை. நான் எங்கே என்று கேட்க தனது அலைபேசியை எடுத்தார். நான் அவரைக் கூப்பிடுவதைக் கண்ட பாதசாரி ஒருவர் சீனுவிடம் உங்களை எதிர்ப்பக்கத்தில் இருக்கும் ஒருவர் கூப்பிடுகிறார் என்று கூறினார். சீனுவும் நானும் சந்தித்துக் கொண்டோம். சீனு எனக்காக ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலையும் மேலும் சில நூல்களையும் வாசிக்கக் கொண்டு வந்திருந்தார். நம் கைகளுக்கு வந்தடைய புத்தகமும் பயணிக்கிறது என்பது எத்தனை மகத்துவம் கொண்டது என்ற சிலிர்ப்பு உருவானது.
‘’சீனு ! நாம கொடியம்பாளையத்துல இருந்து கொள்ளிடம் ஆத்துக்கு மறுகரையில இருக்கற பழையாரைப் பாத்தோம்ல இன்னைக்கு பழையார்லயிருந்து கொடியம்பாளையம் பாக்கப் போறோம்’’.
பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றோம்.
வானம் முழுதும் மேகமூட்டமாயிருந்தது. சூரியனே இல்லை. சூழல் கருக்கல் பொழுதைப் போலவே இருந்தது. அவ்விதமான சூழல் எவருடைய மனத்தையும் இளகச் செய்யும். உற்சாகம் கொள்ளச் செய்யும்.
சீனுவிடம் நான் கேட்டேன். ‘’சீனு ! தமிழ்நாட்டுல அடுத்த 20 வருஷத்துல மக்களை சமூகத்தை ஆக்கபூர்வமான திசைக்குக் கொண்டு போற சமூக அமைப்பு ஏதேனும் உருவாகுமா?’’
சீனு கொஞ்ச நேரம் யோசித்தார். ‘’ அடுத்த 20 வருஷத்துல உருவாகுமான்னு தெரியல. ஆனா 20 வருஷத்துக்கு அப்புறம் நிச்சயம் உருவாகும்’’. அவர் ஏன் அவ்வாறு அபிப்ராயப்படுகிறார் என்பதற்கான காரணங்களை விரிவாகச் சொன்னார். ’’நுகர்வு மனநிலை உருவாகி நிலை கொண்டிருக்கு. இன்னும் பதினைஞ்சு இருபது வருஷம் அதுதான் ஓடும். அதுக்கப்பறம் தான் அதோட பெருந்தீமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். அப்ப அதுல இருந்து மீள மக்கள் நினைப்பாங்க’’. சீனு சொன்னதை மனதுக்குள் அலசி பார்த்தேன்.
சின்ன சின்ன கிராமங்கள் வழியாகச் சென்று பழையாரை அடைந்தோம். அங்கிருந்து கொடியம்பாளையத்தைப் பார்த்தோம். மேட்டூரில் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுவதால் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக நீர் திறக்கப்பட்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அங்கே கொள்ளிடக் கரையில் 1 மணி நேரம் இருந்தோம். பின்னர் அங்கிருந்து கூழையார் என்ற ஊருக்குச் சென்றோம். அந்த பாதை அரசின் காப்பு வனப்பகுதி. சவுக்கு மரங்கள் சாலையின் இருமருங்கிலும் வளர்க்கப்பட்ட ரம்யமான பகுதி. ஒரு சவுக்குத் தோப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஏதோ ஒரு இடத்தில் பாதை தவறி மீண்டும் பிரதான சாலைக்கு வந்து விட்டோம். அங்கிருந்து சிதம்பரம் சென்றோம்.
சிதம்பரம் சென்றால் நாங்கள் ஒரு உணவகத்தில் சப்பாத்தி உண்போம். அது ஒரு சிறு உணவகம். அதனை நடத்துபவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டிலிருந்து அங்கே செல்வேன். வாடிக்கையாளராக என்னை அவர்களுக்குத் தெரியும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கடை உரிமையாளரின் மகன்கள் சிறுவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் தான் கடையை நடத்துகிறார்கள். தந்தை அவ்வப்போது அவர்கள் பூர்வீகமான ராஜஸ்தானுக்கு சென்று விடுகிறார். ‘’இந்த கிளைமேட்டுக்கு சப்பாத்தி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சன். கரெக்டா இங்க வந்துட்டோம்’’ என்றார். நான் ‘’உள்ளுணர்வு’’ என்றேன். ‘’சீனு! பீடா போடறீங்களா’’ என்று கேட்டேன். ‘’பீடா போட்டால் எனக்கு மயக்கம் வரும் ‘’ என்றார். ‘’ஸ்வீட் பீடாவுக்கே மயக்கம் வருமா’’ என்றேன். ஆமாம் என்றார். அந்த கடையில் அவர்கள் வைத்திருக்கும் வெற்றிலை கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். இது எந்த ஊர் வெற்றிலை என்று கேட்டேன். இது கல்கத்தாவில் இருந்து வருகிறது என்று சொன்னார். ‘’கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்னை வந்து அங்கிருந்து முழு தமிழ்நாட்டுக்கும் டிஸ்ட்ரிபியூட் ஆகும்’’ என்றார்.
சிதம்பரத்திலிருந்து கண்ணன்குடி, பண்ணப்பட்டு, நெடுஞ்சேரி ஆகிய சின்னஞ்சிறிய கிராமங்களைக் கடந்து கந்தகுமாரன் என்ற ஊரில் வீர நாராயண ஏரிக்கரையை அடைந்தோம். ஏரிக்கரையில் இருந்த அரச மரம் ஒன்றின் நிழலில் சீனு அமர்ந்து கொண்டார். நான் படுத்துக் கொண்டேன். எனக்கு காலையிலிருந்து வண்டி ஓட்டிய களைப்பு இருந்தது. அவர் அமர்ந்த வண்ணமும் நான் கிடந்த வண்ணமும் இருந்தாலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
‘’வீர நாராயண ஏரி ஆயிரம் வருஷமா மனுஷ குலத்துக்கும் இன்னும் பல ஜீவராசிகளுக்கும் பயன் கொடுக்குது. கல்கி கிருஷ்ணமூர்த்தி தன்னோட எழுத்தால இதோட இருப்பை கோடிக்கணக்கான மக்களோட மனசுக்கு கொண்டு போய்ட்டார். அட்சரங்களோட உலகத்துல வீர நாராயண ஏரியை பதிட்டை செய்துட்டார் கல்கி’’ என்றேன்.
‘’பொன்னியின் செல்வன் ல ‘’புது வெள்ளம்’’ அத்தியாயம், ஆடிப் பெருக்கு இந்த ரெண்டுமே ரொம்ப மங்களகரமான விஷயம். வீர நாராயண ஏரி குறிச்ச நினைவையே மங்களகரமான ஒன்னா கல்கி ஆக்கிட்டார்’’.
கொள்ளிடத்தில் சீனுவை சந்தித்த கணத்திலேயே எனது வழக்கப்படி அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன். அதனை ஆன் செய்து வெளி மாநிலத்தில் இருக்கும் வங்கி அதிகாரியான நண்பனுக்கு ஃபோன் செய்தேன். ‘’தம்பி ! நேத்து நான் உனக்கு வேர்டு ஃபார்மட்ல ஒரு சிறுகதை அனுப்பினன்ல. அதை இப்ப உனக்கு ஒரு மெயில் ஐ டி எஸ்.எம்.எஸ் பண்றன். அதுக்கு ஃபார்வர்டு செய்’’ என்றேன். சீனுவின் மெயில் ஐ டி கேட்டு நண்பனுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினேன். நண்பன் அதனை ஃபார்வர்டு செய்தான். நேற்று எழுதிய மகாபாரத பின்னணி கொண்ட கதை. சீனு அதனை வாசித்தார். அவருக்கு அந்த கதை பிடித்திருந்தது. எனக்கு அது மகிழ்ச்சி அளித்தது. வீர நாராயண ஏரிக்கரையில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை வாசிக்கவும் அது குறித்து பேசவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அங்கே ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தோம். பின்னர் காட்டுமன்னார்குடி சென்றோம். முட்டம் மணல்மேடு வழியே வைத்தீஸ்வரன் கோவில் வந்து சேர்ந்தோம். அவரை சிதம்பரம் பேருந்தில் ஏற்றி விட்டு நான் ஊர் வந்து சேர்ந்தேன்.