நூல் : கல்லெழும் விதை
பக்கம் : 282
ருஷ்ய மொழியில் ‘’ராதுகா’’ என்றால் வானவில் என்று பொருள். சோவியத் யூனியன் ’’ராதுகா பதிப்பகம்’’ என ஒரு பதிப்பகத்தை நடத்தியது. உலகின் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான நூல்களை அப்பதிப்பகம் வெளியிட்டது. ராதுகா பதிப்பகத்தின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. கெட்டியான அட்டை, தடிமனான தாள்கள், அழுத்தமான அச்சமைப்பு ஆகியவை அந்நூல்களின் சிறப்பம்சங்கள். அந்நூல்களின் வடிவமைப்பே அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டக்கூடியவை. ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘’Mathematics can be fun'' என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. அந்நூலின் பல புதிர்கள் பல தகவல்கள் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிந்திப்பதற்கு இனிமையானவை .
அதில் ஒரு புதிர் வரும் : நம் முன் ஒரு சதுரங்கப் பலகை இருக்கிறது. அதில் 8 X 8 என்ற அளவில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இரண்டு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் நான்கு தானியம் வைக்கப்படுகிறது. இவ்விதம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே சென்றால் 64 வது கட்டத்தில் எத்தனை தானியங்கள் இருக்கும் என்பது புதிர்.
அந்த புதிருக்கான விடைய அளித்திருப்பார்கள் . அதாவது ஆழி சூழ் உலகு முழுவதையும் மேலும் ஆழியின் பரப்பளவையும் கோதுமை வயலாக்குவதுடன் சந்திரனின் பரப்பு முழுவதையும் கோதுமை வயலாக்கினால் எவ்வளவு கோதுமை விளையுமோ அவ்வளவு கோதுமையை சதுரங்கப் பலகையின் கடைசி கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பார்கள். முதல் கட்டம் ஒரு கோதுமை தானியம் என்பது 2ன் அடுக்கு பூஜ்யம். 64 வது கட்டம் என்பது 2ன் அடுக்கு 64. அது அத்தனை அதிகமானது.
எனக்கு இந்த புதிர் அளித்த இனிமை என்பது அளப்பரியது.
அத்தகைய இனிமையை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு தாவரவியல் நூல் ஒன்றை வாசித்து இன்று அடைந்தேன். அந்த நூலின் பெயர் ‘’கல்லெழும் விதை’’. அதன் ஆசிரியர் அறிஞர் லோகமாதேவி. உண்மையில் அவரது இந்த நூலை தாவரவியல் நூல் என்று மட்டும் குறிப்பிடுவது அந்நூலின் முழுமையான பெருமையை எடுத்துரைக்காது ; அந்நூல் அறிவியல் நூல். இருப்பினும் அதில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், புவியியல் ஆகியவையும் உள்ளன.
காஃபி குறித்த அத்தியாயமே நூலின் முதல் அத்தியாயம். காஃபி பயிர் குறித்து ஏகப்பட்ட சுவாரசியமான நுண்ணிய விவரணைகள் இதில் உள்ளன. இந்திய தேசத்துக்கு காஃபி பயிர் வந்தது குறித்து உலவும் கதை ஒன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவியொருவர் மெக்காவுக்கு செல்கிறார். அங்கே அளிக்கப்படும் பானம் அவர் அதுவரை அருந்தியிராதது. அந்த பானத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடன் இந்தியாவுக்குக் கொண்டு வர எண்ணுகிறார். ஆனால் அந்த பானம் எந்த தாவரத்தின் கொட்டையிலிருந்து தயாராகிறதோ அதனை அராபியர்கள் அதன் பச்சைத்தன்மையை நீக்கி வறுத்தே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த பானத்தின் கொட்டை தங்கள் வழியே வேறு எந்த நாட்டுக்கும் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். சூஃபி துறவி எப்படியோ அந்த தாவரத்தின் ஏழு பச்சைக் கொட்டைகளை தன்னுடைய நீண்ட அடர்த்தியான தாடியில் மறைத்து இந்தியாவின் மேற்குக் கரைக்கு சிக்மகளூருக்குக் கொண்டு வந்து விடுகிறார். அந்த 7 கொட்டைகள் முளைக்க வைக்கப்பட்டே இந்தியாவில் காஃபி உற்பத்தி துவங்கியது என்கிறார் நூலாசிரியர். கர்நாடகாவின் பிரபலமான காஃபித்தூள் நிறுவனங்களும் காஃபி கடைகளும் நீண்ட அடர்தாடி கொண்ட சூஃபி ஒருவரின் படத்தை தங்கள் சின்னமாக வைத்திருப்பதை சுட்டுகிறார் ஆசிரியர்.
மெக்காவில் ஹஜ் பயணம் வரும் யாத்ரிகர்களுக்கு காஃபி அளிக்கப்படுகிறது. திடீரென காஃபி ஒரு போதைப்பொருள் என ஒரு கருத்து பரவுகிறது. அரேபிய அரசாங்கம் காஃபியை நாடு முழுவதும் தடை செய்கிறது. காஃபி தடை செய்யப்பட்டதைக் கண்டித்து அரேபியா முழுவதும் மக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். பின்னர் அரேபிய அரசாங்கம் காஃபி தடையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கிறது.
மேற்படி இரு சம்பவங்களும் பொது யுகம் 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடும்!
நீலகிரி மலைப்பகுதியில் பழங்குடிகள் ‘’ஆரோக்கியப் பச்சை’’ என்னும் தாவரத்தை ஆற்றல் தரும் உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றம் சென்ற குழு ஒன்று அந்த தாவரத்தின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது. ‘’ஜீவனி’’ என்ற பெயரில் அந்த தாவரத்தின் பொடி பல்வேறு சவால்களை சமாளித்து விற்பனைக்கு வருகிறது. இதைக் குறித்த கட்டுரை நூலின் இரண்டாம் அத்தியாயம்.
பாப்பரஸ் என்ற தாவரம் பதப்படுத்தப்பட்டு அதில் மனிதர்கள் மசி கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த விபரத்தை கிளியோபட்ரா வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஒன்றிலிருந்து தொடங்கி மூன்றாம் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
வினாடி வினாக்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி ‘’ சாக்ரடீஸுக்கு அளிக்கப்பட்ட நஞ்சின் பெயர் என்ன?’’ என்பது. ஹெம்லாக் என்பது அந்த வினாவுக்கான விடை. ஹெம்லாக் தாவரம் குறித்த கட்டுரையில் ஒட்டு மொத்த சாக்ரடீஸின் வாழ்வை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதனை வாசிப்பவர்கள் சாக்ரடீஸையும் மறக்க மாட்டார்கள்; ஹெம்லாக்கையும் மறக்க மாட்டார்கள்.
சில ஜப்பானிய உணவு வகைகளைக் குறித்த அத்தியாயங்களை வாசிப்பவர்களை ஜப்பான் தேசத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களாகவும் தன் சொற்களின் மாயத்தால் ஆக்கி விடுகிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிப்பவர்களில் கணிசமானோர் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் இந்த உணவு வகைகளுக்காகவேனும் வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பான் செல்வார்கள் என்று துணிந்து சொல்லலாம் !
தர்ப்பை புல் குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் மிகச் சிறப்பானது.
லினன் துணி குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் இந்நூலின் உச்சம்.
குற்றப் புலனாய்வுத் துறையில் தாவரவியல் எவ்விதம் உதவியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தந்தது.
அரிசி, கடுகு, அன்னாசி, சோற்றுக்கற்றாழை ஆகிய்வை குறித்தும் சிறப்பாக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நூலை வாசித்த பின் எந்த வாசகனும் இதுவரை பார்த்த கவனித்த புரிந்து கொண்ட உள்வாங்கிக் கொண்ட எண்ணிக் கொள்ளும் தாவர உலகத்துக்கும் இனி அவன் காணப் போகும் கவனிக்க இருக்கும் புரிந்து கொள்ள இருக்கும் உள்வாங்க இருக்கும் எண்ணப் போகும் தாவர உலகுக்கும் பெரும் தூரம் இருக்கும்.
சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்துக்கும் 64ம் கட்டத்துக்கும் இருக்கும் தூரத்தைப் போல !