நேற்று ‘’கல்லெழும் விதை’’ நூல் வாசித்ததிலிருந்து மிக உற்சாகமாக இருந்தேன். பால பருவத்தின் உணர்வுகளை அப்புத்தகம் நினைவுபடுத்தியதால் உற்சாக உணர்வு ஏற்பட்டிருக்கலாம். பாலர்களின் உலகம் என்பது மாசற்றது. கற்பனைகள் மிகுந்தது. நம்பிக்கையும் செயலூக்கமும் கொண்டது. மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டிருக்கும் பாலர்கள் அதனை பின்னாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதை நாம் லௌகிகம் என்று சொல்லலாம் என்று பட்டது. லௌகிகத்தில் ஈடுபட்டிருப்பினும் உற்சாகமும் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டவர்கள் ஆசியளிக்கப்பட்டவர்கள். அவ்விதமான ஆசியை வாழ்க்கை என்று சொல்லலாம்.
நேற்று எழுதிய பதிவுக்குப் பின் இன்று காலை எழுந்ததும் ராதுகா பதிப்பக நூல்கள் ஏதும் இணையத்தில் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். சில நூல்கள் இருந்தன. அவற்றை சில பக்கங்கள் புரட்டினேன். அதன் பின்னர் அரவிந்த் குப்தா இணையதளத்துக்குள் சென்றேன். அங்கே சிறுவர்களுக்கான பல மொழி புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன.
அதில் இருந்து ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து உள்நுழைந்தேன். தேசிய புத்தக நிறுவனம் வெளியிட்ட ஆபிரகாம் லிங்கன் குறித்த சிறுநூல் அது. அதனை வாசித்தேன். எனக்கு ஆபிரகாம் லிங்கனை மிகவும் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே. இந்த நூல் 40 பக்கம் கொண்டது. படக்கதை வடிவில் லிங்கனின் வாழ்க்கை அதில் இடம்பெற்றிருந்தது. அத்தனை புத்தகங்களில் ஏன் லிங்கன் குறித்த நூல் நோக்கி முதலில் சென்றேன் என்பதை யோசித்துப் பார்த்தேன். ’’மக்களால் மக்களுக்காக மக்களுடைய’’ அரசாங்கம் என்று ஒரு ஜனநாயக அரசு குறித்த கனவை பிரகடனத்தை முழங்கியவர் என்பதாலா? எத்தனையோ அரசு அதிகாரிகளுக்கு ஒரு குடிமகனாக இதனை எழுதுகிறேன் ; இந்த விஷயத்தைத் தெரிவிக்கிறேன் என பல தபால்கள் எழுதியிருக்கிறேன். அவை அனைத்துக்கும் லிங்கன் சொற்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தான் காரணமா? மனிதனை மனிதன் அடிமை செய்யும் இழிநிலையை தான் அதிகாரத்துக்கு வந்ததும் துணிச்சலாக ஒழித்தவர் லிங்கன். அவர் புகழ் என்றும் இருக்கும்.
அடுத்த நூல் ‘’Gandhi in pictures'' . இதுவும் ஒரு சிறுநூல். காந்தியின் வாழ்க்கை படங்களாக வரையப்பட்ட நூல்.
மூன்றாவதாக ‘’காகா காலேகர்’’ சரிதம். காந்தியின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர் ‘’காகா காலேகர்’’. நம் நாட்டின் நதிகள் அனைத்துக்கும் பயணம் செய்து நம் நாட்டின் நதிகளைக் குறித்து ‘’ஜீவன் லீலா’’ என்னும் நூலை அவர் எழுதியிருக்கிறார். அதனை நான் வாசித்திருக்கிறேன். அவருடைய சரிதையில் 40 பக்கங்கள் படித்தேன். உணர்ச்சிகரமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. 250 பக்க நூல் அது. இன்று வாசிக்க வேண்டும்.