Saturday, 15 November 2025

சிராக் பாஸ்வான் : நம்பிக்கை நட்சத்திரம்

 

பிராந்தியப் பார்வையைத் தாண்டி தேசம் குறித்த முழுமையான பார்வையை சிந்தனையைக் கொண்டிருக்கும் தேசியக் கட்சிகள் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொள்வேன். ஜனநாயகம் மட்டுமே வறிய நிலையில் இருக்கும் நாட்டின் கடைசி மனிதனுக்கும் வாக்குரிமையை அளித்து ஆட்சியில் அந்த மனிதனுக்கு இருக்கும் பங்கை உறுதிப்படுத்துகிறது. வாக்குரிமை கிடைத்து விடுவதால் அவனுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறதா என்பது எப்போதும் எழுப்பப்படும் கேள்வி எனினும் அதற்கான பதில் ஜனநாயகம் மட்டுமே அவனுக்கு குறைந்தபட்சம் வாக்குரிமையை அளித்து அதனை ஒரு முதற்தொடக்கமாக நிலைநிறுத்துகிறது என்பதே. எனது அரசியல் புரிதலில் நான் தேசிய கட்சிகளின் மீது நம்பிக்கை கொள்வதற்கு காரணம் அவையே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை ஜனநாயகத்தின் உயர் அதிகாரத்துக்குக் கொண்டு வந்துள்ளன என்பதே. இந்திய தேசிய காங்கிரஸ் (இ) அன்றும் இன்றும் பல பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை தாம் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களாக ஆக்கியிருக்கிறது. சஞ்சீவையா மற்றும் அஞ்சையா என்ற இரண்டு பட்டியல் சாதியைச் சார்ந்த தலைவர்களை ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது. போலா பஸ்வான் சாஸ்திரி என்னும் பட்டியல் சாதியைச் சார்ந்த தலைவரை பிகாரில் காங்கிரஸ் முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது. மகாராஷ்டிராவில் முதலமைச்சராயிருந்த சுஷில் குமார் ஷிண்டே என்னும் காங்கிரஸ்காரர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு வழங்கிய பெரும் பங்களிப்பு இந்த நிகழ்வுகள்.பட்டியல் சாதியைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களையும் பட்டியல் பழங்குடியினர் சாதியைச் சார்ந்த திரௌபதி முர்மு அவர்களையும் நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது பா.ஜ.க. இந்த நிகழ்வுகள் பா.ஜ.க நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு வழங்கிய பெரும் பங்களிப்புகள். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பட்டியல் சாதியினர் மொத்த வாக்காளர்களில் 18 லிருந்து 23 சதவீதம் வரை இருக்கின்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதில் பெரும் முனைப்பு காட்டுகின்றனர். நாட்டின் உழைப்பாளர்களான விவசாயத் தொழிலாளர்களான பட்டியல் சாதி மக்கள் பொருளியல் தன்னிறைவைப் பெற்றால் மட்டுமே ஜனநாயகம் அவர்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது என்று பொருள். நாம் - நமது தேசம்- அதனை நோக்கி மெல்ல பயணிக்கிறோம். இன்னும் விரைவாகப் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.   ( இந்திய அரசியல் என்பது இடைநிலை சாதிகளின் அதிகார அரசியல். முன்னர் அது முன்னேறிய சாதிகளின் அதிகார அரசியலாக இருந்தது. இப்போது இடைநிலை சாதிகளின் அதிகார அரசியலாக மாறியிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் (இ) பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை உயர் அதிகாரத்துக்கு கொண்டு வந்துள்ளது என்பதைப் பதிவு செய்யும் அதே நேரத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவரிடம் காங்கிரஸ் எவ்விதம் மோசமான முறையில் நடந்து கொண்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆந்திரப் பிரதேசம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து காங்கிரஸை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் மாநிலமாக இருந்தது. நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி கண்ட போது கூட ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமாக வெற்றி பெற்றது. அத்தகைய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்துக்கு நாட்டின் பிரதமராயிருந்த இந்திரா காந்தி வருகை புரிந்தார். அப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நெருக்கடியில் கோபமடைந்த ராஜிவ் காந்தி ( இந்திராவின் மகன் - அப்போது அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை) ஆந்திரப் பிரதேச முதலமைச்சரான பட்டியல் சாதியைச் சார்ந்த அஞ்சையாவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் 5 கோடி ஆந்திர மக்களின் சுயமரியாதைக்கு இழுக்கு எனக் கூறிய என்.டி. ராம ராவ் ‘’தெலுங்கு தேசம்’’ என்னும் கட்சியைத் தொடங்கி காங்கிரஸை அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு ஆட்சிக்கு வந்தார். ) 

பொருளியல் அடுக்கில் கீழ் இடத்தில் இருக்கிறார்கள் பட்டியல் சாதிகள். அவர்கள் உழைப்பாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் இருப்பதால் சமூகத்தின் பொருளியல் சுழற்சியில் அவர்களின் இடம் கடைசி இடமாகவே இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்துள்ள 75 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் இந்த விஷயத்தில் நடந்திருப்பினும் இன்னும் அதிக மாற்றங்கள் எப்போதும் தேவைப்படுகின்றன. பட்டியல் சாதி மக்கள் சுயதொழிலிலும் வணிகத்திலும் கணிசமான அளவு ஈடுபடும் நிலை எப்போது ஏற்படுகிறதோ அப்போதே அவர்களின் தன்னிறைவு எட்டப்பட்டதாகப் பொருள். 

இடைநிலை சாதிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அரசியலும் இந்திய அதிகார வர்க்கமும் பட்டியல் சாதியினருக்கு என்ன செய்து விட விரும்பும் என்பது மிகப் பெரிய கேள்வியாக இருப்பினும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனைக் குறைந்தபட்சம் பட்டியல் சாதியினர் பெறுவது கூட இடைவிடாமல் இந்திய அதிகார அரசியலில் நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும். 

நடந்து முடிந்த பிகார் தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்ட 29 இடங்களில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் என்னவெனில் லோக் ஜனசக்தி வெற்றி பெற்றுள்ள 19 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே பட்டியல் சாதியினருக்கான ரிசர்வ் தொகுதிகள். மீதி 15 இடங்களும் பொதுத் தொகுதிகள் ஆகும். பிகாரின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 243. அதில் பட்டியல் சாதியினருக்கான ரிசர்வ் தொகுதிகள் 40. 

நாடும் சமூகமும் பட்டியல் சாதியினருக்கு தனிக் கவனம் அளிக்க வேண்டும். அந்த தனிக் கவனம் அவர்களுக்கு அளிக்கப்பட எல்லா விதமான சமூக, அரசியல், பொருளாதார காரணங்களும் இருந்து கொண்டேயிருக்கின்றன. நாட்டையும் சமூகத்தையும் காணும் அவதானிக்கும் எவராலும் இதனை அறிய முடியும் ; உணர முடியும். 

தமிழ்நாடும் பிகாரும் சட்டப் பேரவை உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏறக்குறைய சமமானவை. பிகாரின் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 243. தமிழகத்தில் 234. பிகாரின் ரிசர்வ் தொகுதிகள் 40. தமிழகத்தின் ரிசர்வ் தொகுதிகள் 42. பிகாரில் பட்டியல் சாதியினர் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் இருக்கின்றனர். தமிழகத்தில் பட்டியல் சாதியினர் 25 சதவீதத்தினர் இருக்கின்றனர். 

தமிழகத்தில் பட்டியல் சாதியினர் முன்னேற்றத்தை தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ள பட்டியல் சாதியைச் சார்ந்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் அரசியலை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பட்டியல் சாதி மக்களுக்கு அதனால் பலவிதமான நன்மைகள் நிகழும். சிராக் பாஸ்வான் பொதுத் தொகுதிகளில் தனது கட்சி சார்பாக பல பட்டியல் சாதி அல்லாத வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறார். அதன் மூலம் மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் வலுவான ஒரு சக்தியாக நிலைகொண்டுள்ளார். தமிழகத்துக்கும் சிராக் பாஸ்வான் போன்ற ஒரு தலைவர் தேவை.