அரவிந்த் குப்தா இணையதளத்தில் நூற்றுக்கணக்கான நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை தினமும் துழாவி வருகிறேன். அதில் இன்று கண்டடைந்த நூல் அமர் சித்ர கதாவின் பாபாசாகேப் அம்பேத்கர் என்னும் நூல்.
சில மனித முகங்கள் தீவிரமான வசீகரம் கொண்டவை. அம்பேத்கரின் முகம் அத்தகையது. இன்னும் நாவில் மொழி படியா குழந்தையின் முகத்தைக் கொண்டிருப்பவர் அம்பேத்கர். தன் முதிய வயதில் கூட அதே குழந்தை முகத்தைக் கொண்டிருந்தார்.
எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் அம்பேத்கரின் வாழ்க்கை என்பது வாசிப்பவர் நெஞ்சை இரங்கச் செய்வது. விடாமுயற்சியின் மனித உருவம் அம்பேத்கர். மானுடன் அடைய சாத்தியமான ஆக உன்னதமான ஆகப் பெரிய மனோநிலையை தனது வாழ்நாளில் தன்னியல்பாக அடைந்தவர் அம்பேத்கர். புத்தர்பிரானின் அருள் அம்பேத்கரை நிறைத்தது நம் நாட்டின் நல்லூழ்.
அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாகபுரியின் தீக்ஷா பூமிக்குச் சென்றிருக்கிறேன். அந்த நினைவுகள் எப்போதும் புனிதம் மிக்கவை.
சங்கம் சரணம் கச்சாமி
***