Sunday, 16 November 2025

மழையுடன் வாழ்தல்

 இன்று காவிரி கடைமுகம். ஐப்பசி மாதம் முழுமையும் மயிலாடுதுறையில் தங்கி முப்பது நாளும் காவிரியில் நீராடும் வழக்கம் தமிழகத்தில் பலருக்கு இருந்திருக்கிறது. இப்போது ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் நீராடும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் ஐப்பசி மாதத்தில் ஏதேனும் ஒருநாள் காவிரியில் நீராடுகிறார்கள். இன்று காலைப் பொழுதில் சற்றே பெரிய கட்டுரை ஒன்றை எழுத வேண்டியிருந்தது. மதியம் வரை அந்த பணி நீடித்தது. அப்பணி முடியும் சமயம் இங்கே மழைப்பொழிவு துவங்கியது. என்னுடைய தொழில் நிமித்தமாக சில ஆவணங்களை ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. கடைத்தெருவுக்குச் சென்று ஞாயிறன்றும் திறந்திருந்த கடை ஒன்றில் அப்பணியை அளித்து விட்டு வந்தேன். வரும் போது நல்ல மழை. மழையில் முழுமையாக நனைந்தேன். மழையில் நனைவதும் நதி நீராட்டுதான் என எண்ணினேன். மனிதர்கள் எந்த அளவு மழையுடன் இணைந்திருக்கிறார்களோ அந்த அளவு மனிதர்களை நலம் சூழ்ந்திருக்கும் என எண்ணிக் கொண்டேன்.