Monday, 17 November 2025

நாமரூபம்

 


எனது நண்பர் ஒருவர் கடைவீதியில் கடை வைத்திருக்கிறார். அவர் கடையில் ஐந்து பணியாளர்கள் பணி புரிகின்றனர். எனது வாகனம் ரயில் நிலையத்தில் ‘’பார்க்’’ செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நான் ரயிலில் திரும்பாமல் பேருந்தில் திரும்பி விட்டேன். பார்க்கிங் செய்த வாகனத்தை எடுத்து வர வேண்டும் ; எனது நண்பர் கடைக்குச் சென்று அவர் பணியாளர் ஒருவரை என்னுடன் அனுப்பச் சொன்னேன். நண்பரும் அவ்விதமே செய்தார். நண்பரின் இரு சக்கர வாகனத்தில் நாங்கள் இருவரும் பயணித்தோம். 

அந்த பணியாளர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் என யூகித்தேன். 

‘’தம்பி ! கடைக்கு புதுசா வேலைக்குச் சேந்தியா? உன்னை நான் பாத்தது இல்லயே?’’

‘’ஆமாம் சார் ! ஒரு வாரம் ஆகுது’’

‘’ஓ அப்படியா! உன் பேரு என்ன?’’

‘’திருமாவளவன்’’

’’உன் பேருக்கு என்ன அர்த்தம்?’’

அந்த தம்பி யோசித்தான். ‘’இது ஒருத்தரோட பேரு. தமிழ்நாட்டுல இருக்கற கட்சித் தலைவர் ஒருத்தரோட பேரு’’ 

‘’நீ சொல்ற பதில் சரிதான் தம்பி . உனக்கு அவரோட பேரை வச்சிருக்காங்க. உனக்கு இப்ப 21 வயசு இருக்குமா. நீ பொறந்தப்ப அவரு தமிழ்நாட்டுல ஒரு பெரிய ஃபோர்ஸ்ஸா வளந்துட்டு இருந்தாரு. அவர் மேல இருக்கற அபிமானத்துல உனக்கு அவரோட பேரை வச்சிருக்காங்க. அவருக்கு இப்ப 60 வயசு இருக்குமா ? அறுபது வருஷம் முன்னாடியே அவருக்கு ‘’திருமாவளவன்’’னு பேரு வச்சிருக்காங்களே அது யாரோட பேரு?’’

தம்பி நான் சொன்ன கோணத்தில் யோசித்திருக்கவில்லை. 

‘’அதாவது தம்பி , காவிரி பாயற பகுதி எல்லாமே ரொம்ப வளமான பகுதிகள். அதனால காவிரி பாயற சோழநாட்டுக்கு வளநாடுன்னு பேரு. வளநாட்டை ஆட்சி செய்யறதால சோழ அரசர்களுக்கு ’’வளவன்’’னு பேரு உண்டு. மாவளவன் அப்படின்னா பெரிய நாட்டை ஆள்றவன்னு அர்த்தம். திருமாவளவன் அப்படின்னா செல்வமும் வளமும் கொண்ட சோழ நாட்டுக்கு அரசன்னு அர்த்தம். திருமாவளவன் என்னும் பேரு சோழ அரசர்களைக் குறிக்கும் பேர் என்றாலும் அது கல்லணை கட்டிய கரிகாற்சோழனை சிறப்பிச்சு சொல்லப்படற பேர்’’

தம்பிக்கு தன் பெயருக்கு பின்னால் இவ்வளவு பெரிய விளக்கம் இருக்கிறதா என்னும் வியப்பு. 

‘’தம்பி ! எந்த இண்டர்வியூக்கு போனாலும் முதல்ல கேக்கற கேள்வி இண்ட்ர்வியூ அட்டண்ட் பண்றவரோட பேருக்கு என்ன அர்த்தம் என்பதாகத்தான் இருக்கும். திருமாவளவன் மாநிலக் காவல்துறைல ‘’ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்’’ல வேலை செஞ்சார். அப்ப அந்த வேலைக்கு ஒரு இண்டர்வியூ நடக்குது. அவரை இண்டர்வியூ செய்யறவர் ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட் அறிஞரான சந்திரசேகர் என்பவர். அவர் திருமாவளவன் கிட்ட கேட்ட முதல் கேள்வி திருமாவளவன் யாரோட பேர் என்று. அதுக்கு கல்லணை கட்டிய கரிகாற்சோழனோட பேருன்னு திருமா பதில் சொல்றார். இதை அவரு விகடன் டிவி இண்டர்வியூல சொல்லியிருக்கார்.’’

பெயருக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்களா என தம்பி மேலும் வியந்து மௌனமாக இருந்தான். 

‘’உன்கிட்ட இன்னொரு கேள்வி கேக்கறன்?’’

தம்பி இவர் என்ன கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் என எண்ணியிருப்பான். இருந்தாலும் ‘’கேளுங்க சார்’’ என்றான். 



‘’அம்பேத்கருக்கு அவரோட பெற்றோர்கள் வச்ச பேரு என்ன?’’

தம்பி ‘’அம்பேத்கர்’’ என்றான்.

‘’இல்லை. அவரோட பெற்றோர் அவருக்கு வச்ச பேரு பீமராவ். அவர் ரொம்ப நல்லா படிக்கக்கூடியவர். சின்ன வயசுலயே அவருக்கு படிப்பு மேல நிறைய ஆர்வம் இருந்தது. அவர் ரொம்ப நல்லா ஸ்கூல்ல படிச்சார். அந்த காலகட்டத்துல நம்ம சமூகத்துல மனுஷங்களுக்கு ஜாதிவெறி ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சு. இப்பவும் இருக்கு. ஆனா பொது இடத்துல வெளிக்காட்ட முடியாம உள்ளுக்குள்ள அமுக்கி வச்சுக்கிறாங்க. அவரை எல்லா ஸ்டூடண்ட்ஸ் போலயும் பெஞ்ச்ல ஒக்காந்து பாடம் கேட்க அனுமதிக்க மாட்டாங்க. அவர் தரையிலதான் ஒக்காரணும். மத்த ஸ்டூடண்ட்ஸ் கிட்ட இருந்து தள்ளி தான் இருக்கணும். அப்போ அவரோட ஸ்கூல் க்கு ஒரு ஆசிரியர் வந்தார். அவர் பிறப்பால் பிராமண ஜாதியை சேர்ந்தவர். அவர் மனசுல ஜாதி வேறுபாடு கிடையாது. கடவுள் படைக்கற ஜீவராசிகள்ள ஒன்னா இருக்கற மனுஷங்க கிட்ட வித்தியாசம் பாக்கறது கடவுளை அவமதிக்கறதுன்னு அவர் நினைச்சார். பீமராவ் படிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். பீமராவ்வை தினமும் தன்னோட சேர்ந்து மதிய உணவு சாப்பிடச் சொன்னார். அவருக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார். அந்த ஆசிரியரோட பேருதான் அம்பேத்கர். அவரோட ஞாபகமா பீமராவ் தன்னோட பேரோட தன்னோட ஆசிரியர் பெயரையும் சேர்த்துக்கிட்டார். பீமராவ் அம்பேத்கர். பி. ஆர். அம்பேத்கர்.’’

நாங்கள் சென்று சேர வேண்டிய இடம் வந்தது.