Wednesday, 19 November 2025

காவியகர்த்தா


 
படைப்போன் அகத்தில்
கணமும் உயிர்பெறுகின்றன கோடானுகோடி உயிர்கள்
அவனுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகளே
இருப்பினும்
சில ம்கவுகள் 
தன்னைப் போல் படைக்க இருப்பதை
அகக்காட்சியில் கண்டு 
புவியில் அவை பிறக்கும் முன்னே
அவற்றுக்கு மேலும் மேலும் ஆசியளிக்கிறான்
படைப்போன்

படைப்போன் மேலும் மேலும் ஆசியளிக்கும்
குழந்தைகள் 
யாரெனக் காண்பதில் எப்போதும் ஆர்வம்
சொல்லரசிக்கு
படைப்போன் தேர்வை
மேலும் தேர்ந்து
அம்மகவுக்கு
தன் ஆசியையும் தருகிறாள்
சொல்லன்னை

எல்லா அன்னையரையும் போலவே
சொல்லன்னைக்கும்
மகவைக் குறித்த விசனங்கள்
சொல்லின் உலகம் பெரிதும் அருவமானது
புறத்தினும் அகத்தில் வியாபிப்பது
மானிட உயிர்கள்
கண்ணால் காண்பதையும்
திட்டவட்டமான பொருள் உலகையும்
மட்டுமே 
உலகம் என்றும்
வாழ்க்கை என்றும்
கொள்வார்கள்
படைப்போன் ஆசி பெற்ற
தன் ஆசி பெற்ற
மகவு
மானிடச் சூழலுடன்
இயல்பாகப் பொருந்திக் கொள்ள வேண்டுமே
என்னும் விசனத்துடன்
எப்போதும் இருந்தாள் சொல்லன்னை
அம்மகவு மண்ணில் பிறப்பதற்கு முன்பிருந்தே

சொல்லை ஆராதிக்கும் மானிடப் பெண்ணின்
கருப்பையில்
அம்மகவை உதிக்க வைத்தான் படைப்போன்
அம்மகவின் மானிட அன்னைக்கு
அம்மகவு சொல்லின் உலகத்தில் மட்டுமே சிறப்பாக இருக்கும்
என்பது  
மூட்டமாகத் தெரிந்திருந்தது
சொல்லன்னை கொண்ட விசனம் மானிட அன்னைக்கும்
மானிடச் சூழலில் தன் மகவு பொருந்தியிருப்பது குறித்து

புவிக்கு வந்த அம்மகவு
இந்த உலகைப் பார்த்துக் கொண்டேயிருந்தது
பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டேயிருக்கும்
இந்த உலகத்தில் 
இந்த உலகத்தை
இதை விடவும் சிறப்பான அழகான உலகத்தை உலகங்களை
படைக்கத் தொடங்கியது 
படைப்போன் புன்னகைத்தான்
அகத்தில் நிகழ்வதை சொல்லில் அம்மகவு வடிக்கத் தொடங்கியதும்
சொல்லன்னையும் புன்னகைத்தாள்

படைப்பவர்களுக்குரிய நிலையின்மை 
மகவாயிருந்து பாலனாகி இளைஞனான அவனைச் சூழ்ந்தது
அவன் அலையத் துவங்கினான்
அனாதி காலமாக அலைந்து திரிந்தவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி
அனாதி காலமாக துறந்து கொண்டேயிருப்பவர்களின் நிலம் அவன் ஜன்மபூமி

ஊழ் அவனை நல்லாசிரியர்களிடமும் கொண்டு சென்றது
துறவியாயிருந்த ஒரு நல்லாசிரியர் சொன்னார் :
‘’நீ உண்மையை அறிவாயென்றால் அது கற்பனை வழியாகவே’’

தன் தீரா அலைச்சலில்
தன் தீரா நகர்வுகளில்
அவன் மேலும் மேலும் மேலும் என
நல்லாசிரியர்களைக் கண்டு கொண்டேயிருந்தான்
மொழியில் தன் படைப்புகளை வடித்துக் கொண்டேயிருந்தான்

அவன்
தன் படைப்புகளை வடித்த மொழி 
உலகில் கோடானுகோடி மானிடர் அறிந்தது
இருப்பினும்
அவன் சொற்கள் சிலருக்கே புரிந்தது
எமக்குத் தொழில் படைத்தல்
என 
படைத்துக் கொண்டேயிருந்தான்

தன் சொற்களால்
அவன் 
பல கடவுள்களைப் படைத்திருக்கிறான்
கடவுள்களை மானிட மொழியில் பேச வைத்திருக்கிறான்
ஞானிகளை தீர்க்கதரிசிகளை மீண்டும் உருவாக்கியிருக்கிறான்

அவன் சொற்கள்
மானிடர் பலருக்கு 
இதமளித்தது
நம்பிக்கையளித்தது

ஆதி மானிடன் கண்டறிந்த முதல் தீச்சுடர்
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு
என
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சென்று கொண்டேயிருப்பது போல
அவன் சொற்கள்
செல்லத் துவங்கின

அவன் குறித்து
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தாள்
சொல்லன்னை

***