நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷார் நம் நாட்டின் பொருளியலைச் சுரண்டிக் கொண்டிருந்தனர் ; நம் நாட்டின் பொருளியலை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷார் நம் நாட்டின் மீது நிகழ்த்திய பொருளியல் சுரண்டலால் - பொருளியல் கொள்ளையால் மிகவும் பாதிப்புக்குள்ளானது நம் நாட்டின் சாமானியர்கள் ; விவசாயத் தொழிலாளகள் ; சிறு விவசாயிகள் ; கைவினைஞர்கள் ; சிறு விவசாயிகள் ஆகியோரே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை முப்பது கோடி எனில் அதில் 99.99 சதவீதம் பேரை பிரிட்டிஷ் அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டியது. உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு கொள்ளை லாபத்தால் விற்கப்படுவது இந்த காலகட்டத்தில் மிகத் தீவிரமாக இருந்தது. செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்களால் இந்தியர்கள் கோடிக்கணக்கில் மடிந்தனர். ’’தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற ‘’ தேசம் என பாரதி நம் நாட்டின் அன்றைய நிலையை எடுத்துக் கூறுகிறான்.
நாடு சுதந்திரம் பெற்று நாம் நம் குடிகள் அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டோம். அந்தப் பணி எளிய ஒன்றாக இருக்கவில்லை ; ஒவ்வொரு நாளும் சவால் மிக்கதாகவே அப்பணி இருந்தது. உணவு உற்பத்தியைப் பெருக்கி பதுக்கலைத் தடுத்து நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை நாம் உறுதி செய்தோம். இருபதாம் நூற்றாண்டின் மைய காலகட்டத்திலும் கடைசி இருபது ஆண்டுகளிலும் இந்தியாவின் சாமானிய குடும்பங்களுக்கு தன் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மாத ஊதியம் கிடைக்கும் ஒரு வேலை என்பதே மிகப் பெரிய கனவாக இருந்தது. அந்த கனவையே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் கண்டு கொண்டிருந்தது. அந்த கனவை நோக்கியே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் சென்று கொண்டிருந்தது. பசியிலிருந்து விடுபட்டு இருத்தலே ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் இலட்சியமாக இருந்தது. பசிக்கு உணவு என்னும் உணர்வுப் பேரலையில் ‘’சத்தான உணவு ஆரோக்கியமான உடல் நோய்மையற்ற வாழ்க்கை ‘’ என எந்த விஷயத்தின் மீதும் யாருக்கும் கவனம் இருக்கவில்லை.
ஒவ்வொரு சாமானிய இந்தியன் வயிற்றிலும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருந்த பசித்தீயே அவன் வாழ்வை எண்ணங்களை செயல்களை தீர்மானித்துக் கொண்டிருந்தது. முற்றிலும் எதிர்மறையான இந்த சூழலிலிருந்து தேசத்துக்காகவும் தேச மக்களுக்காகவும் தேச நலனுகாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் இந்தியர்களின் நிரை உருவான காலகட்டமும் இதுவே. பெரும் கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் விளையாட்டு வீரர்களும் இந்த காலகட்டத்திலிருந்தே உருவாகி வந்தனர். அவ்விதம் உருவாகி வந்தவர்களில் முக்கியமானவர் பி.டி. உஷா.
பி.டி. உஷா என்பது ஒரு பெயரல்ல ; அது கோடானுகோடி எளிய இந்தியர்களின் நம்பிக்கைகளின் அடையாளம். கேரளத்தின் எளிய கிராமம் ஒன்றிலிருந்து எழுந்து வந்த உஷா அவர்களின் சூழலை இருநூறு ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சி சூழலிலிருந்தும் நமது சமூக மனநிலையிலிருந்தும் துவங்கினால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
தடகளப் பயிற்சிக்கான எந்த உள்கட்டமைப்பும் அவர் உருவான காலகட்டத்தில் கிடையாது. ஒரு விளையாட்டு வீரரைப் புரிந்து கொள்ளும் ஒரு விளையாட்டு வீரருக்கு மதிப்பளிக்கும் சமூகச் சூழல் நம்மிடம் இல்லை. அவர் ஒரு தடகள வீரராக தன்னை எண்ணிக் கொள்ள ஒரு தடகள வீரராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஒரு தடகள வீரராகச் செயல்பட அவர் தடைகளை மட்டுமே தன் வாழ்வில் கண்டிருப்பார். அவர் ஓர் ஒளி பொருந்திய ஆளுமையாக அடையாளம் காணப்படுவதற்கு அவர் அந்த தடைகளை பொறுமையாக உடைத்து முன்னேறி தனது இலக்கை அடைந்ததே காரணம். அதற்காக அவர் தாங்கிய வலிகள் அவரை மகத்தான ஒருவராக ஆக்கியிருக்கின்றன.
என்னுடைய பால பருவத்திலிருந்து அவர் பெயரை அடிக்கடி கேட்டிருக்கிறேன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. அவருடைய ஆட்டோகிராஃபை கேட்டு பெற்றுக் கொண்டேன். அவரது அசாத்தியமான உடல் வலிமையை நேரில் கண்ட போது பெருவியப்பு ஏற்பட்டது.
இன்று இந்தியர்களாகிய நாம் வறுமையை வென்றிருக்கிறோம். உணவுத் தன்னிறைவு பெற்ற நமது நாடு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. இன்று இந்தியர்கள் உணவுக்காக மிகப் பெரிய அளவில் செலவு செய்கின்றனர். ‘’உடல் பருமன்’’ இன்றைய இந்தியர்களின் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளில் முக்கியமானதாக உருவாகியிருக்கிறது. பசி எவ்விதம் ஒரு தீமையோ அதை விட ‘’மிகை உணவு’’ என்பது தீயது.
’’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் ; இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ள்வே வந்திருக்கிறோம் ‘’ என்றார் சுவாமி விவேகானந்தர். ‘’வலிமை கொள்க’’ என்பது வேதாந்தம் மானுடத்துக்கு வழங்கும் அறைகூவல்.
பி.டி உஷா தடகளத் துறையில் தான் வழங்கிய பங்களிப்புக்காக நாட்டின் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையையும் அவருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வழங்கியுள்ளது. அர்ப்பணிப்பும் தலைமைப் பண்பும் கொண்ட மனிதரான பி.டி. உஷா வின் வழிகாட்டுதல் இன்றைய தடகள வீரர்களுக்கு கிடைப்பது நாட்டின் நல்லூழ்.
