தமிழ் ஓர் உயர்தனிச்செம்மொழி. இருப்பினும் தமிழின் உரைநடை இலக்கியம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மட்டுமே தோன்றத் தொடங்கியது. அச்சு ஊடகம் மூலம் உரைநடை பரவலாக மக்களைச் சென்றடையத் தொடங்கிய பின்னர் இலக்கியப் படைப்பாளிகள் உரைநடையில் தங்கள் படைப்புகளை எழுதத் தொடங்கினர். தமிழில் பாரதி எழுதத் துவங்கியதற்கு சற்று முன்னர் உரைநடை இலக்கியம் தொடங்கியிருந்தாலும் பாரதியை நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாகவும் தலைமகனாகவும் கொள்வது மரபு. மொழி என்பது கோடானுகோடி மக்கள் அறியும் பேசும் அன்றாடம் புழங்கும் ஒன்றாயினும் மொழியின் சாரமான பகுதி என்பது அந்த மொழியின் இலக்கியப் படைப்பாளியின் இலக்கியப் படைப்பே. ஆதலால் தான் உலகெங்கும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது. இலக்கியம் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குக் கிடைக்கும் இலக்கியப் பிரதிகளைக் கொண்டு மதிப்பிடுகையில் தமிழ் குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையானது என்பதை உணர்கிறோம். புறவயமான ஆய்வுகளும் இதனை உறுதி செய்கின்றன. இந்த 2500 ஆண்டுகளில் கடைசி 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 2350 ஆண்டுகள் தமிழில் செய்யுளே படைப்பு வடிவமாக இருந்திருக்கிறது. கவிதை செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. பாரதி செய்யுள் வடிவிலும் தனது கவிதைகளை எழுதியிருப்பதாலும் செய்யுள் நடைக்கு அப்பால் வசன நடையிலும் கவிதைகளை எழுதியிருப்பதாலும் கதை, கட்டுரை ஆகியவற்றை எழுதி உரைநடை இலக்கியத்திலும் தடம் பதித்ததாலும் நாளிதழ்களின் ஆசிரியராக இருந்து இதழியலிலும் பங்காற்றியிருப்பதாலும் பாரதியை நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாகவும் தலைமகனாகவும் கொள்கிறோம்.
மரபிலக்கியம்
அதனை நாடிச் சென்ற மிகச் சிலரால் மட்டுமே பயிலப்பட்டது. அந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் மக்கள்தொகையில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே மரபிலக்கியக்
கல்வியை நோக்கிச் சென்றிருக்க முடியும். அதனை ஆசிரியர் ஒருவரிடம் சென்று அவரிடம் உடனிருந்து
மாணவர்கள் கற்றிருக்கின்றனர். அந்த கல்விநிலையங்களுக்கு அரசுகள் ஆதரவு அளித்திருக்கின்றன.
அரச ஆதரவும் சமூக ஆதரவும் இருந்ததால் தமிழ் இலக்கியக் கல்வி பல்லாயிரம் ஆண்டுகளாக முன்நகர்ந்து
வந்திருக்கின்றது. சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள்,
சிற்றரசர்கள், வேத பாடசாலைகள், சமணத் துறவு நிலையங்கள், பௌத்த துறவு சங்கங்கள், சைவ
ஆலயங்கள், வைணவ ஆலயங்கள், வைணவ மடங்கள், சைவ மடங்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி
ஆகியவை தமிழின் 2500 ஆண்டு கால வரலாற்றில் தமிழின் மொழிக்கல்வியும் இலக்கியக் கல்வியும்
தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவதற்கு ஆதரவளித்தவர்களும் அதன் காரணமும் ஆவர்.
இந்த நீண்ட வரலாற்றுப் பின்னணி தமிழகத்துக்கு இருக்க பல்வேறு உலகளாவிய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் அச்சு ஊடகம் தமிழகத்துக்கு வருகிறது. அச்சு ஊடகம் தமிழில் அறிமுகமாகும் அதே காலகட்டத்தில் தான் ஏறக்குறைய உலகின் எல்லா பகுதிகளிலும் அச்சு ஊடகங்கள் அறிமுகமாகின்றன. உலகின் சாமானியர்கள் பெரிய அளவில் அடிப்படைக் கல்வி பயின்று எழுத்தறிவு அடைவது இந்த காலத்திலேயே. பலர் கல்விக்குள் வந்து எழுத்தறிவு பெற்று வாசிக்கத் தொடங்குவதால் இதழ்கள் வெளிவரத் தொடங்குகின்றன. அச்சு நூல்கள் வெளிவரத் துவங்குகின்றன. அப்போதும் உலகின் தொன்மையான நூல்கள் அச்சு நூல் வடிவில் வருவதும் முன்னர் அதனைப் பயின்று கொண்டிருந்தவர்கள் அச்சு நூல் வடிவில் தொல் நூல்களைப் பயில்வதும் நிகழ்கிறது. தமிழில் உரைநடை இலக்கியம் உருவாவதற்கு சற்று முன் முதன்மையான அறிவுச் செயல்பாடாக பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அச்சு நூல் வடிவில் பதிப்பிக்கப்படுவது நிகழ்வதை இதனுடன் சேர்ந்து யோசிக்கலாம். பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பித்ததில் டாக்டர். உ.வே.சாமிநாத ஐயர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
மரபிலக்கியமும் உரைநடை இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் சமூகவியல் செயல்பாடு தமிழ் மொழியிலும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழத் தொடங்கி அவை தம் செல்வழிகளைத் தேரத் தொடங்கின. அச்சு ஊடகம் உருவாகி நிலைகொண்ட அதே காலகட்டத்தில்தான் உலகின் ஒரு மொழியின் இலக்கியப் படைப்புகள் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘’மொழிபெயர்ப்பு இலக்கியம்’’ உருவாகி வருகிறது. மொழியின் இலக்கியத்தின் அழகியலுக்கு பல்வேறு விதங்களில் மேலும் அணி சேர்த்தது ‘’மொழிபெயர்ப்பு இலக்கியம்’’.
கவிஞனின் கலைஞனின் அகம் படைப்பூக்கம் கொண்டது. கற்பனையும் உணர்வெழுச்சியும் நிரம்பியது. கவிதையின் கலையின் இலக்கியத்தின் இயங்கு தளம் சாமானிய லௌகிக மனநிலையிலிருந்து மிக உயரத்தில் இருப்பது. மரபான இலக்கியம் வரலாறு நெடுக பயிலப்பட்ட காலத்தில் அதனை சமூகத்தின் மிகச் சிறு எண்ணிக்கையிலானோர் மட்டுமே பயின்றிருப்பதையும் சாமானியர் அதனுள் பிரவேசிக்காமலேயே இருந்திருப்பதையும் காண முடியும். கலையை இலக்கியத்தை ஆதரிப்பவர்கள் இருப்பினும் கணிசமான கவிஞர்களும் படைப்பாளிகளும் தன் உள்ளுணர்வை மட்டுமே பின்பற்றும் இயல்பு கொண்டிருப்பதையும் எந்த அதிகார அமைப்புக்கும் முழுமையாக கட்டுப்பட்டவர்களாக இல்லாமல் இருப்பதையும் வரலாறு நெடுக காண முடியும்.
நவீனத் தமிழிலக்கியத்தின்
முன்னோடியான தலைமகனான பாரதி எதிர்காலத்தில் நவீனத் தமிழிலக்கியவாதிகள் எதிர்கொள்ள இருந்த
எல்லா சமூக இடர்களையும் எல்லா லௌகிக நெருக்கடிகளையும் அவன் காலத்தில் அவன் வாழ்வில்
எதிர்கொள்வதிலும் முன்னோடியாக தலைமகனாக இருந்தான். தமிழ் 2500 ஆண்டு கால தொன்மையைக்
கொண்ட மொழியாயினும் இருபதாம் நூற்றாண்டில் நவீனத் தமிழிலக்கியச் செயல்பாடுகள் நிகழத்
தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது.
எழுத்தறிவு 10 சதவீதம் எனில் மொழியை வாசிக்கும் வழக்கம் அதிகபட்சம் 5 சதவீதம் பேருக்கு
இருந்திருக்கும். பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் அவன் தமிழின் ஆகப் பெரிய வரலாற்று இலக்கிய
ஆளுமைகளில் ஒருவன் என்னும் உணர்வு தமிழ்ச் சமூகத்துக்கு போதிய அளவில் ஏற்படவில்லை.
தன் கவிதைகளின் உயிரால் ஒளியால் ஜீவனால் பாரதி தன் மறைவுக்குப் பின்னால் வெகு காலம்
கழித்து அவனுக்குரிய படைப்பு முக்கியத்துவத்தை அடைந்தான். பெரும்பாலான நவீனத் தமிழிலக்கியப்
படைப்பாளிகளுக்கும் இவ்விதமே நிகழ்ந்தது. போதிய அளவு வாசகர் இன்மை, சமூகத்தின் குறை
இலக்கிய உணர்வு, அரசு மற்றும் கல்வித்துறையின் ஆதரவின்மை, வெகுஜன சமூகத்தின் விலக்கல்
உணர்வு இன்னும் பல என எண்ணற்ற எதிர்மறை அம்சங்கள் இருப்பினும் மொழியின் கலையின் இலக்கியத்தின்
ஜீவனை தன்னுள் கொண்டு நவீனத் தமிழிலக்கியவாதிகள் தமிழுக்கும் மொழிக்கும் இலக்கியத்துக்கும்
நேர்மறையான ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்து 2500 ஆண்டு கால தமிழின் வரலாற்றுத் தொடர்ச்சியை
உயிர்ப்புடனிருக்கச் செய்தார்கள் ; உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறார்கள்.
நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் நிரை மிகவும் பெரியது. எந்த மகத்தான உலகப் படைப்பாளிக்கும் நிகரான நவீனத் தமிழ் படைப்பாளிகள் சிலரின் பெயரைப் பட்டியலிடுகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. எனினும் இவர்கள் தமிழின் முதன்மையான இலக்கியப் படைப்பாளிகளாவார்கள். பாரதி, புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், எம்.எஸ்.கல்யாணசுந்தரம், ப.சிங்காரம், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன்,ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன்.
19.11.2025 அன்று திண்டிவனம் அருகில் உள்ள ஓங்கூரில் அமைந்துள்ள ‘’தக்ஷசீலா பல்கலைக்கழகம்’’ தமிழ் இலக்கியப் படைப்பாளியான ஜெயமோகனுக்கு ‘’டாக்டர்’’ பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. பாரதி கிருஷ்ண துவைபாயன வியாசனின் பாதிப்பில் தான் இயற்றிய ’’பாஞ்சாலி சபதம்’’ காவியத்தினை கீழ்க்கண்டவாறு சமர்ப்பித்துள்ளான் : ‘’தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கர்யங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலை பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்’’.
ஜெயமோகன் கடந்த 38 ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தமிழுக்கு அவரளவு பங்களிப்பாற்றிய இன்னொரு படைப்பாளி இல்லை ; உலக இலக்கியத்துக்கு அவரளவு பங்களிப்பு அளித்த இன்னொரு படைப்பாளியும் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் இல்லை. இலக்கியத்தில் என்னென்ன படைப்பு வடிவங்கள் உள்ளனவோ அத்தனையிலும் தனது படைப்புகளை அளித்தவர் ஜெயமோகன். தனது இயலாமைகளாலும் தனது போதாமைகளாலும் தமிழ்ச் சமூகம் கௌரவிக்காது போன நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகளுக்கு இன்றைய தமிழ்ச் சமூகம் செய்யும் பிழையீடாக தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ‘’டாக்டர்’’ பட்டத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறும் ஜெயமோகன் தன்னை நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள் தங்கள் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கிய பாதையில் தொடர்ந்து நடக்கும் தமிழிலக்கியப் படைப்பாளியாகவே தன்னை உணர்கிறார். ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அதனைச் செய்து தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ‘’தக்ஷசீலா பல்கலைக்கழகம்’’. அந்த பல்கலைக்கழகம் வாழ்த்துக்குரியது.
***
1971ம் ஆண்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு ’’டாக்டர்’’ பட்டம்
அளிக்க முனைந்தது. அறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் அளிக்கப்படும் ‘’டாக்டர்’’ பட்டத்தை அரசியல் அதிகாரத்தில் இருக்கும் கருணாநிதிக்கு அளிக்ககூடாது என அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவர் அமைப்புகளும் கடுமையாக
எதிர்த்தனர். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதி ஒருவருக்கு அளிக்கப்படும் இந்த கௌரவம்
‘’டாக்டர்’’ பட்டத்தின் மாண்பையே குலைக்கக் கூடியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாணவர் அமைப்பும் அதன் தலைவரான உதயகுமார் என்ற மாணவரும் கூறினர். இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாணவர் அமைப்பும் அதன் தலைவரான உதயகுமாரும் சிதம்பரம் நகரில் இருந்த கழுதைகளின்
கழுத்தில் ‘’டாக்டர்’’ என அட்டைகளில் எழுதித் தொங்கவிட்டனர். நகரெங்கும் கழுதைகள் கழுத்தில்
‘’டாக்டர்’’ பட்டம் தொங்குவது போல் கேலிச் சித்திரங்களை சுவரில் தீட்டினர். சிதம்பரம்
நகரெங்கும் மாணவர் போராட்டத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. மாணவர்கள் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி கருணாநிதி சிதம்பரம்
வருகை புரிந்து பல்கலைக்கழகம் வழங்கிய ‘’டாக்டர்’’ பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். விழா
முடிந்து கருணாநிதி சென்னை புறப்பட்டுச் சென்றதும் மாநிலக் காவல்துறையினர் பல்கலைக்கழக
மாணவர் விடுதிக்குள் சென்று அங்கிருந்த மாணவர்களைத் தாக்கினர். இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவரான உதயகுமார் கொல்லப்பட்டு அவரது பிணம் பல்கலைக்கழகத்தில்
இருந்த குட்டை ஒன்றில் காவல்துறையினரால் வீசப்பட்டது. உதயகுமாரின் பெற்றோர்கள் காவல்துறையாலும்
ஆளும்கட்சியாலும் மிரட்டப்பட்டு உதயகுமாரின் பிணத்தை தங்கள் மகனின் பிணம் அல்ல அது
எனக் கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆளும்கட்சியின் காவல்துறையின் மிரட்டலுக்குப்
பயந்து அவர்கள் அவ்விதமே கூறினர். அந்த பிணம் யாருடையது என்பதை அறிய ‘’சிவசுப்ரமணியம்
கமிஷன்’’ என்ற விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இந்த விஷயத்தை இந்திய
தேசிய காங்கிரஸ் பலமுறை எழுப்பியது. ‘’சிவசுப்ரமணியம் கமிஷன்’’ இறந்தது மாணவர் தலைவர்
உதயகுமார் தான் என்று கூறினால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கருணாநிதி கூறினார்.
சிவசுப்ரமணியம் கமிஷன் இறந்தது உதயகுமார்தான் என்று அறிக்கை அளித்தது. காங்கிரஸ்காரர்கள்
தமிழக சட்டசபையில் ‘’சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கை இங்கே ; கருணாநிதி ராஜினாமா எங்கே’’
என்று கேட்டனர். கமிஷன் அறிக்கை வந்த பின்னும் கருணாநிதி ராஜினாமா செய்யவில்லை. கருணாநிதி
கட்சிக்காரர்கள் கருணாநிதியை ‘’டாக்டர் கலைஞர்’’ என இன்றளவும் அழைக்கிறார்கள். இந்த சம்பவத்துக்குப் பின் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கு தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ‘’டாக்டர்’’ பட்டம் அளித்துள்ளன. தமிழக அரசியல்வாதிகள் பலர் அதனைப் பெற்றிருக்கிறார்கள்.
***