Friday, 21 November 2025

ஏதேனும் ஒரு விடுபடல் (நகைச்சுவைக் கட்டுரை)

தமிழ் இலக்கியப் படைப்பாளி ஜெயமோகன் தனது இணையதளத்தில் நாளுக்கு ஒரு அத்தியாயம் என ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக வெண்முரசு நாவலை எழுதினார். உலக இலக்கியத்தில் ஏழு வருடங்கள் தினமும் எழுதப்பட்டு தினமும் வாசிக்கப்படுதல் என்னும் நிகழ்வு வெண்முரசுக்கு முன்னும் நிகழ்ந்ததில்லை. இன்று வரை வெண்முரசுக்குப் பின்னும் நிகழ்ந்ததில்லை.  தினமும் எழுதப்பட்டு தினமும் பதிவேற்றம் செய்யப்பட்ட அத்தியாயத்தை உலகெங்கும் உள்ள வாசகர்கள் தினமும் வாசித்தார்கள். 

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திர நீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்கலம், சொல்வளர்க்காடு, கிராதம், மாமலர், நீர்க்கோலம், எழுதழல், குருதிச்சாரல், இமைக்கணம், செந்நா வேங்கை, திசைதேர் வெள்ளம், கார்கடல், இருட்கனி, தீயின் எடை, நீர்ச்சுடர், களிற்றியானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் என மொத்தம் 26 நாவல்கள் வெண்முரசுக்குள் அடக்கம். 

அவ்வப்போது வெண்முரசு வாசகர்கள் வெண்முரசு குறித்து உரையாடிக் கொள்ளும் போது மொத்த 26 நாவல்களின் பெயரையும் ஒருமுறை திரும்பச் சொல்லிப் பார்ப்போம். மொத்த 26ல் ஓரிரு நாவல்களின் பெயர்கள் மறந்து போவதும் அதனை இன்னொருத்தர் நினைவுபடுத்துவதும் அவ்வப்போது நடக்கும். 

முதற்கனல் அம்பையின் கதை, மழைப்பாடல் சதசிருங்கத்தில் பாண்டவர் பிறப்பு, வண்ணக்கடலில் துரோணரின் குருகுலம், நீலம் பாகவதம், பிரயாகை திரௌபதியின் கதை, வெண்முகில் நகரம் இந்திரபிரஸ்த உருவாக்கம், இந்திர நீலம் துவாரகை மற்றும் சியமந்தக மணியின் கதை, காண்டீபம் அர்ஜூனனின் பயணங்கள், வெய்யோன் கர்ணனின் கதை, பன்னிரு படைக்களம் சூதாட்டம், சொல்வளர்காடு ஆரண்ய வாசம், கிராதம் அர்ஜூனனின் ஆன்மீகப் பயணங்கள், மாமலர் பீமன் கல்யாணசௌகந்திக மலர் நாடிச் செல்வது அதில் இடம்பெறும் அனுமன், நீர்க்கோலம் அக்ஞாதவாசம் என எளிதில் என் நினைவில் இருக்கும். இமைக்கணம் கீதோபதேசம். செந்நா வேங்கை பீஷ்மர் படைத்தலைமை என நினைவுபடுத்திக் கொள்வேன். இருப்பினும் யுத்தம் குறித்த நாவல்களின் பெயர்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விடும். 

ஒரு வாசகர் நினைவில் இருந்து விடுபட்டதை இன்னொரு வாசகர் கூறுவார் ; எனினும் எல்லாருக்குமே ஏதேனும் ஒரு நாவல் பெயர் விடுபட்டு விடும்.