இன்று என் நண்பனுக்கு என் கைப்பட ஒரு கடிதம் எழுதி தபாலில் அவன் முகவரிக்கு அனுப்பினேன். அக்கடிதத்தை கீழே அளித்துள்ளேன்.
***
அன்புள்ள நண்பனுக்கு,
வணக்கம். நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். இந்த வாரத்தில் எனக்கு குதூகலமும் ஒரு நிலையின்மையும் இருந்தது. ஜெயகாந்தனின் ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’ வாசித்துக் கொண்டிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்தது. இப்போது மறுவாசிப்பு செய்கிறேன். மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் மகத்தான கலைஞன் என்பதை உணர்ந்தேன். மனித வாழ்க்கையை அறிய அறிய மனிதர்களின் எல்லைகளும் மனிதர்களின் போதாமைகளும் மட்டுமே பேருரு கொண்டு முன்நிற்கிறது. லௌகிகத்தின் இயல்பு அது. மனிதர்களை நம்ப மனிதர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்க மனிதர்களை மன்னிக்க மனிதர்களை நேசிக்க நாம் லௌகிக மனநிலைக்கு அப்பால் செல்ல வேண்டியிருக்கிறது ; லௌகிக மனநிலைக்கு அப்பால் இருக்க வேண்டியிருக்கிறது. அவ்விதமான மனிதர்களே கலைஞர்களே அழகான சிறப்பான ஒத்திசைவு கொண்ட உலகம் ஒன்றைக் கற்பனை செய்கிறார்கள் ; படைக்கிறார்கள். ‘’ஒரு மனிதம் ஒரு வீடு ஒரு உலகம்’’ நாவல் மகத்தான கற்பனை. அதி தூய உணர்வின் சொல் வெளிப்பாடு.
இந்த வாரத்தின் என் நிலையின்மைக்கு இன்ன காரணம் எனக் கூறிட முடியாது. பெரிய காரணங்கள் என ஏதுமில்லை ; சிறிய காரணங்கள் தான். இங்கே ஊரின் மிகப் பழமையான வீடொன்றின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். 99 % பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 1 % எஞ்சியிருக்கிறது. எஞ்சியிருக்கும் 1% பணியைத் துவங்க முடியவில்லை. அது வீட்டுக்கு வெளிப்பக்கம் செய்ய வேண்டிய பணி. மழை இல்லாமல் இருக்கும் போது செய்ய வேண்டும். கடந்த ஒரு வாரமாக இங்கே தினமும் மழை. மன நிலையின்மைக்கு அதுவும் ஒரு காரணம்.
அந்த வீடு ஊரிலேயே மிகத் தொன்மையான வீடு. அந்த வீடு கட்டப்பட்டு 125 ஆண்டுகள் இருக்கும். சுவர்களின் அகலம் இரண்டேகால் அடிக்கு மேல் இருக்கக் கூடும். ஓட்டு வீடு. இப்போது அந்த வீட்டில் தம்பதியினரான மூத்த குடிமக்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் ; பணி புரிகிறார்கள். தொன்மையான அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அந்த முதிய தம்பதிகளின் விருப்பம். வீட்டின் ஒரு பகுதியில் குளியலறை நிர்மாணித்து முப்பது அடி நீளத்துக்கு முக்கால் அடி சுவரொன்றை பத்து அடி உயரத்துக்கு அமைத்துக் கொடுத்து வீட்டின் பழைய சுவர்களில் வெள்ளைப்பூச்சு தீட்ட வேண்டும் என்பதே பணி. அந்த வீட்டில் ஒரு யோகி 100 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கிறார். ஊரின் சில ஆலயங்களை அவர் கட்டியிருக்கிறார். கட்டிடப் பணியாளர் அனைவரும் யோகி வாழ்ந்த வீடு என்பதால் இன்னதென வகுக்க இயலாத ஒரு நூதன உணர்வுடன் பணி புரிந்தோம். அந்த வீட்டின் முதிய தம்பதியினரிட்ம் அந்த யோகி குறித்த கதைகளைக் கேட்டுக் கொண்டேன். அவர்களுக்கு இப்போது 75 வயது. அவர்களுடைய பாட்டனார் காலத்தில் நடந்தவை அவர்கள் சொன்ன சம்பவங்கள்.
நீ எப்படி இருக்கிறாய்? அலுவலகப் பணிகள் எவ்விதம் செல்கின்றன? அலுவலகத்தில் உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது? உன் புறச்சூழலை சிறப்பாக பராமரித்துக் கொள்ளவும். உன் பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உடல்நலம் எவ்விதம் உள்ளது? மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலம்தானே?
இந்த கடிதம் எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இச்செயல் மனதுக்கு இதம் அளிக்கிறது. மனதுக்கு அற்புதமான உணர்வைத் தருகிறது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் பென்சிலால் மார்ஜின் போட்டு தடையின்றி எழுதும் பேனாவால் இனிய நண்பனுக்கு கடிதம் எழுதுவது என்பது ஓர் அழகான செயல். இவ்விதமான கடிதங்களை நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பரிச்சயமானவர்களுக்கு எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளேன். எளிய நலம் விசாரிப்புகள் என எண்ணுகிறோம். ஒரு மனிதன் தன் சக மனிதனின் நலம் நாடுகிறான் என்பதும் நலம் விசாரிக்கிறான் என்பதும் அற்புதமான செயல்கள்.
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த வாரம் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மனம் மிகவும் குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று நமது தாய்மொழி. இருப்பினும் நம் சமூகம் இன்னும் போதிய அளவு இலக்கிய வாசிப்புக்குள் வரவில்லை. இலக்கியத்தின் மேல் ஆர்வம் இல்லாத இலக்கியம் வாசிக்காத சமூகம் பெரிய அளவில் வளர்ந்து விடாது என்பதே யதார்த்தம். தமிழ்ச் சமூகம் உன்னதமான உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே பாரதி முதலான எல்லா படைப்பாளிகளுக்கும் பெருவிருப்பம். எனவேதான் தமிழ்ச் சமூகம் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்று எல்லா படைப்பாளிகளும் ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். படைப்பூக்க மனநிலை கொண்ட ஒருவர் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் தப்பி ஓடி வர வேண்டியிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகமும் தொழில்நுட்பக் கல்வியினை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே மொழிக்கும் நுண்கலைகளுக்கும் மட்டும் அல்ல கணிதத்துக்கும் அறிவியலுக்கும் கூட இடமில்லை. இந்த நிலை மாற பலவிதங்களிலும் பலவிதமான பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்விதத்தில் தமிழ் இலக்கியப் படைப்பாளி ஜெயமோகன் டாக்டர் பட்டம் பெறுவது முக்கியத்துவம் கொண்டதாகிறது.
22 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் பட்டம் பெற்றேன். அதன் பின் எந்த பட்டமும் பெறவில்லை. கணிதம், புவியியல், வணிகம், கணக்கியல், பொருளாதாரம், தடய அறிவியல், சட்டம் ஆகியவை எனக்கு ஆர்வம் உள்ள துறைகள். இவற்றைப் பயில வேண்டும் என்பது என் ஆர்வங்களில் ஒன்று.
கடிதம் எழுதி அதனை உறையில் இட்டு தபால் வில்லை ஒட்டி முகவரி எழுதி அஞ்சல்பெட்டியில் போடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செயல். சிறுவனாக இருந்த போது நான் பலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இப்போது அந்த வழக்கத்தை மீண்டும் துவங்கலாம் என இருக்கிறேன்.
உன்னைச் சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது ; உன்னுடன் சில நாட்கள் இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
அன்புடன்,
பிரபு
22.11.2025
மயிலாடுதுறை