இன்று காலை டிம்மி ஷீட் எடுத்து மார்ஜின் போட்டு நண்பனுக்கு கடிதம் எழுதினேன். ஷீட்டின் நான்கு பக்கங்களுக்கு அந்த கடிதம் வந்தது. அளவில் சற்று பெரிய கடிதம் என்றுதான் எண்ணினேன். இருப்பினும் எழுதி முடித்து சிறிது நேரம் கழித்து அதனை வலைப்பூவில் பதிவிட வேண்டும் என விரும்பினேன். எழுதியதைப் பார்த்து வலைப்பூவில் தட்டச்சிட்டேன். பொதுவாக நான் அவ்விதம் செய்வதில்லை. எழுதும் முறையில் எழுதும் மனநிலையில் அது சிறு பாதிப்பை உண்டாக்கும் என்பதால். காகிதத்தில் எழுத வேண்டி வந்தால் காகிதத்தில் எழுத வேண்டும். கணினியில் தட்டச்சிட வேண்டும் என்றால் தனியாக தட்டச்சிட வேண்டும். இதைப் பார்த்து அதையோ அதைப் பார்த்து இதையோ செய்யக் கூடாது. எழுதிய கடிதத்தை தபாலில் அனுப்பி விட்டால் என்னிடமிருந்து சென்று விடும் என்பதால் அதனை வலைப்பூவில் எழுத நினைத்தேன்.
தட்டச்சிட்ட போது நான்கு பக்க கடிதம் வலைப்பூவில் நடுத்தரமான அளவில் மட்டுமே இருந்தது. எழுத்துருவின் தடிமன் சீராக இருப்பதால் டிஜிட்டல் அட்சரங்கள் கையால் எழுதப்படும் அட்சரங்களை விட குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. எம் எஸ் வேர்டு-ல் தட்டச்சிடப்பட்ட ஒரு பக்கம் கூட வலைப்பூவில் சிறிதாகவே இருக்கும் என்பதைக் கண்டிருக்கிறேன்.
தபாலில் அனுப்பும் முன் கடிதத்தை வலைப்பூவில் பதிவிட்டேன். கடிதம் நண்பனை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சென்றடையும். நண்பன் தினமும் என் வலைப்பூவை வாசிப்பவன். அனேகமாக இன்றே கூட வாசித்து விடுவான். நண்பன் வாசிப்பதற்கு முன்பு கூட பலர் வாசித்திருக்க முடியும்.
***
இந்த விஷயத்திலிருந்து நான் ஒரு முக்கியமான விஷயம் குறித்து கற்பனை செய்து பார்த்தேன். அது ஒரு முக்கியமான அவதானம் ; முக்கியமான புரிதல் என்று தோன்றியது.
அச்சுமுறை வழக்கத்துக்கு வந்த பின் மட்டுமே மனிதர்கள் மிக அதிக அளவில் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். காகிதத்தில் அச்சிடும் முறை தோன்றுவதற்கு முன் தாவரப்பட்டைகள் மரப்பட்டைகள் ஆகியவற்றில் மட்டுமே எழுதும் முறை உலகெங்கும் இருந்திருக்க முடியும். நம் நாட்டில் பனையோலைகளில் எழுதியிருக்கிறார்கள். பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது சாமானிய காரியம் இல்லை. அது ஓர் அரும்பெரும் செயல்.
பனையோலைகளில் எழுதப்பட்டவற்றை குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது புதிய பனையோலைகளில் மறுபடி எழுதிக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் அனைத்து இலக்கியப் பிரதிகளுமே அவ்விதமாகவே 2500 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கின்றன. நம் நாட்டின் பண்டைய கல்வி நிலையங்கள் அனைத்திலுமே பனையோலைப் பிரதிகளை மீண்டும் பனையோலையில் எழுதிக் கொள்வது என்பதை முக்கியப் பணியாகச் செய்திருப்பார்கள்.
இந்த விஷயத்தில் இன்னொரு விஷயத்தையும் கற்பனை செய்து பார்த்தேன். அதாவது கல்வி என்பது பனையோலைகளைப் பார்த்து படிப்பது என்னும் வகையில் இருந்திருக்காது ; இப்போது நாம் புத்தகங்களைப் பார்த்து படிப்பது போல. மனனம் செய்யும் விதமாகவே கல்வி இருந்திருக்கும். வேதக்கல்வி மனனம் செய்யும் விதமாகவே அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பாணியே மற்ற கல்வியிலும் இருந்திருக்கும். ஒருவர் தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ பயில்கிறார் என்றால் அதனை இசையுடன் சந்தத்துடன் பாடவே பயில்வார். பயின்றதை தினமும் மீண்டும் மீண்டும் பாடி தன் நினைவிலும் உணர்விலும் வைத்திருப்பதே கல்வி. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை இவ்விதமான கல்வியே இருந்திருக்கிறது. தான் கல்வி கற்ற முறை குறித்து ‘’என் சரித்திரத்தில்’’ பதிவு செய்யும் போது உ.வே.சா அதனைக் குறிப்பிடுகிறார்.
நம் நாட்டை ஞானத்தின் தாயகமாக எண்ணி மதித்த சீனப் பயணி யுவான் சுவாங், ஃபாஹியான் ஆகியோர் நம் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பனையோலைச் சுவடிகளை சீன நாட்டுக்குக் கொண்டு சென்றனர் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் படையெடுப்பின் போது பக்ருதீன் கில்ஜி நாளந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது அங்கிருந்த ஓலைச்சுவடிகள் மாதக்கணக்கில் எரிந்தன என்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
இன்னொரு விஷயமும் யோசித்தேன்.
அதாவது கல்வியறிவும் எழுத்தறிவும் இப்போது ஒருங்கிணைந்து இருப்பது போல அப்போது இந்த அளவு ஒருங்கிணைந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.