1. நவீனத் தமிழிலக்கிய வாசகர் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளாக 1000 - 2000 என்ற அளவிலேயே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை 2 கோடி -7 கோடி என்ற அளவில் இருந்திருக்கிறது. எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் தமிழ்ச் சமூகத்தில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே தீவிர இலக்கியம் வாசிப்பார். தீவிர இலக்கியம் இவ்வளவு குறைவாக வாசிக்கப்படுவதால் எந்த படைப்பாளியின் படைப்பும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் என்பவை மிகக் குறைவாகவே இருக்கும். மௌனம் மட்டுமே எதிர்வினையாக இருக்கும். படைப்பாளி தன் படைப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளுக்காக எழுதுவதில்லை தன் ஆத்ம திருப்திக்காகவே எழுதுகிறான் என்றாலும் மக்கள்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே வாசிக்கும் சூழல் என்பது எந்த படைப்பாளிக்கும் தொடர்ந்து படைப்புகளை படைக்க ஊக்கம் கொடுக்காது. புறச்சூழல் ஊக்கமளிக்கும் விதமாக இல்லையெனினும் தன் அகவலிவால் முழுமையாக படைப்பாளியாக மட்டுமே இருப்பது என முடிவு செய்து கடந்த 40 ஆண்டுகளாக படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
2. தமிழகம் இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பகுதிகளில் ஒன்று. எனவே இந்தியாவின் எந்த பகுதியை விடவும் இங்கே ஆங்கில மனோபாவத்தின் தாக்கம் அதிகம். நவீனத்துவமும் இருத்தலியமும் தமிழ் படைப்புலகை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் ஜெயமோகன் தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, கிரி ராஜ் கிஷோர், குர் அதுல் ஐன் ஹைதர், வெங்கடேஷ் மாட்கூல்கர், காளிந்தி சரண் பாணிக்கிராஹி, லஷ்மி நந்தன் போரா,சிவராம் காரந்த் ஆகிய இந்திய செவ்வியல் படைப்பாளிகளின் படைப்புலகின் விரிவையும் ஆழத்தையும் குறித்து தொடர்ந்து எழுதி அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நாவல்களை தமிழ் இலக்கியச் சூழலில் புதிய தலைமுறை வாசகர்களிடம் நிலை நிறுத்தியதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
3. இருத்தலியல் மற்றும் நவீனத்துவத்தின் எல்லைக்குள் இருந்த நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகை, தேவாரம், திருவாசகம், ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், குமரகுருபரர் பிரபந்தங்கள் என 2000 ஆண்டு கால பரப்பு கொண்ட தமிழ் மரபிலக்கியத்தின் அழகியலை நவீனத் தமிழ் இலக்கிய வாசகனின் பிரங்ஞைக்கு கொண்டு சென்றவர் என்பதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
4. உலகு தழுவிய மானுட நோக்கு என்பது இலக்கியத்தின் சிறப்பியல்பு. உலகின் எல்லா நிலத்திலும் இருந்த படைப்புகளுக்கு இந்த சிறப்பியல்பு இருப்பினும் ‘’வசுதைவ குடும்பம்’’ என்றும் ‘’யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘’ என்று பறைசாற்றிய பாரத நிலத்துக்கு அத்தன்மை தொல் பழங்காலத்திலிருந்து இருந்திருக்கிறது. உலகு தழுவிய மானுட நோக்கே இலக்கியம் என்னும் அழியாத தீச்சுடரை சமகாலத்தில் ஏந்தி நிற்கும் படைப்பாளியாதலால் ஜெயமோகன் முக்கியமானவர்.
5. அச்சு ஊடகம் மூலம் தமிழ்க் கல்வி பரவலாகிறது. தொல் தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழ் அறிஞர் பெருமக்கள் தமிழ்ச் சமூகத்தால் உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை. அவர்களின் அர்ப்பணிப்பையும் அரும்பணியையும் எப்போதும் தன் எழுத்துக்களால் நினைவுபடுத்திக் கொண்டிருப்பதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
6. தனித்தமிழியக்க முன்னோடிகளை அறிஞர்களைக் குறித்து தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
7. தனித்தமிழியக்கத்தின் சாதனைகளை திராவிட அரசியல் இயக்கம் தன் சாதனைகளாக சொல்லிக் கொண்டது. திராவிட இயக்கம் ஓர் பரப்பிய இயக்கம் ; தமிழுக்கு பெரிதாக ஏதும் அவர்கள் செய்தது இல்லை எனக் கூறி திராவிட இயக்கத்தை நான் ஏன் நிராகரிக்கிறேன் என கட்டுரை எழுதியதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
8. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், இதழியல் பத்தி ஆகியவை இலக்கிய வடிவங்கள். உலகெங்கும் படைப்பாளிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ தங்கள் கலை வெளிப்பாட்டுக்கு கைக்கொள்வார்கள். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், இதழியல் பத்தி ஆகிய அத்தனை இலக்கிய வடிவங்களிலும் செயல்பட்டதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
9. சங்க காலத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ்ப் பிரதிகளில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை கண்டடைந்து அல்லது உருவாக்கி ‘’கொற்றவை’’ என்ற காப்பியம் படைத்ததால் ஜெயமோகன் முக்கியமானவர்.
10. 26 நாவல்களாக 23,000 பக்கங்களுக்கு மேல் மகாபாரதத்தை மறுபுனைவு செய்து 7 ஆண்டுகள் தினமும் தொடர்ந்து எழுதியதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
11. ஜெயமோகன் எழுதிய அளவு பக்க எண்ணிக்கையை உலகின் எந்த படைப்பாளியும் எழுதியதில்லை. உலகில் மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் 40,000 பக்கங்களாக ‘’The complete works of Mahatma Gandhi'' எனத் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி அளவுக்கு காந்தியை விடவும் கூடுதலான பக்கங்கள் எழுதியவர் என்பதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
12. இலக்கியம் அளவுக்கே செவ்வியல் நுண்கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் ஜெயமோகன் முக்கியமானவர்.
13. நாராயண குரு மரபில் வந்த தனது ஆசிரியர் குரு நித்ய சைதன்ய யதி செய்ய நினைத்ததை தன் இலக்கியப் பணி வாயிலாக செய்து கொண்டிருப்பதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
14. நித்யவனம் பயிலகம் மூலமாக இந்திய தத்துவம், ஆலயக் கலை, மேலைத் தத்துவம், சைவத் திருமுறைகள், பிரபந்தம், ஓவியம், காட்சிக் கலை , மரபிசை , யோகம், விபாசனா, தியானம் ஆகியவற்றை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
15. தமிழுக்காக பணியாற்றிய எல்லா ஆளுமைகள் வாழ்க்கையைக் குறித்தும் அவர் தம் இலக்கியப் பணியைக் குறித்தும் தமிழ் விக்கி இணையதளத்தில் பதிவு செய்யும் அரும்பணியைச் செய்வதால் ஜெயமோகன் முக்கியமானவர்.
மேற்கண்ட செயல்களால் ஜெயமோகன் மகத்தானவரும் கூட.