Sunday, 23 November 2025

விருட்சத்தின் கீதம் - ராஜாஜி

 Rajaji Reader என்ற நூலில் இடம்பெற்றுள்ள ராஜாஜியின் கட்டுரையொன்றை மொழிபெயர்த்துள்ளேன். 

***

விருட்சத்தின் கீதம் 



கர்னல் ராய் ஜான்சன் பிரிட்டிஷ் அரசால் இராணுவ மருத்துவப் பிரிவாகத் தொடங்கப்பட்டு பின்னாட்களில் மாநில நிர்வாகத்தின் அலகாகிப் போன ஐ.எம்.எஸ் எனப்படும் இந்திய மருத்துவப் பணியின் மருத்துவர். அப்பணியை அர்ப்பணிப்புடன் ஆற்றியவர்களும் உண்டு. அந்தஸ்தாக மட்டும் கருதியவர்களும் உண்டு.நான் சேலத்தில் இருந்த போது ராய் ஜான்சன் மாவட்ட மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இனிய மனிதர் அவர்.

’’இன்று அவர் மிகவும் தாமதமாக வருவார் என்று தோன்றுகிறது. தனது பிரியத்துக்குரிய நண்பர்களான மரங்களுடன் அளவளாவ நிறைய நேரம் செலவிடுபவர் என்றாலும் இன்று அவருக்கு வேறு ஏதோ சிக்கல் இருப்பதாக என் மனதுக்குப் படுகிறது.’’ என்றார் திருமதி. ஜான்சன். ‘’தாங்கள் காத்திருக்கலாம். இல்லையேல் அவர் வந்ததும் தங்கள் வருகை குறித்தும் சிறிது நேரம் காத்திருந்து நீங்கள் திரும்பிச் சென்றது குறித்தும் நான் அவரிடம் கூறுகிறேன்.’’

‘’நன்றி ! நான் செல்ல வேண்டும். அவருக்குக் கிடைத்திருக்கும் பதவி உயர்வு எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கவே நான் வந்தேன்.’’

’’ஓ! அப்படியா ! மகிழ்ச்சி. தாமதமாக வருவதில் அவர் மன்னர். அவரை அறிந்தவர்களுக்கு இது புதிதில்லை’’

டாக்டருக்கு தான் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது பாதையில் இருக்கும் மரங்களுடன் உரையாடும் வழக்கம் உண்டு. மரங்களைத் தொட்டு அவற்றுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவார். காண்பதற்கு அழகிய விஷயம் அது. இதனைக் காணும் எவரும் அவர்கள் உரையாடலில் உள்நுழையவோ குறுக்கிடவோ மாட்டார்கள். தாறுமாறான லௌகிக உலகில் இக்காட்சி அரியது என இதனைத் தொலைவில் இருந்து காண்பவர்கள் கூட உணர்வார்கள். 

அன்றைய தினத்தின் மாலை டாக்டர் ஜான்சனுக்கு மிகவும் துயர் நிறைந்தது என்பதைப் பின்னர் அறிந்தேன். அவர் நேசித்த மரம் ஒன்றை முழுதாக வெட்டி ஒரு ஆனை வீழ்ந்து கிடப்பதைப் போல தரையில் கிடத்தியிருந்தார்கள். 

அடுத்த நாள் சந்தித்த போது டாக்டர் என்னிடம் சொன்னார்: ‘’வளத்தியாயிருந்த என் மகளைக் கொன்று விட்டார்கள்.’’

துரதிர்ஷ்டவசமாக அந்த மரம் ஜில்லா போர்டு கட்டிடத்துக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கிறது. அந்த மரத்தால் அந்த கட்டிடத்தின் அஸ்திவாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என பொறியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

கண்ணீருடன் டாக்டர் என்னிடம் கேட்டார் : ‘’மரம் கட்டிடத்துக்கு மிக அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மரத்துக்குப் பக்கத்தில் அந்த கட்டிடத்தை அமைத்தது யார்? நாற்பது வருடமாக அந்த மரம் அங்கே இருக்கிறது. ஜில்லா போர்டு கட்டிடம் ஒரு வருடம் முன்பு கட்டப்பட்டிருக்கிறது’’

திருமதி.ஜான்சன் சொன்னார் : ‘’ டாக்டர் இதனை பெரிய பிரச்சனையாக்குகிறார். அது நன்மைக்கா என எனக்குத் தெரியவில்லை. மரம் வெட்டப்பட்டு விட்டது. டாக்டர் இந்த விஷயத்தைப் பார்க்கும் விதமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.’’

‘’உண்மை’’ என்றேன்.

‘’மிகத் தவறான ஒரு செயல் நிகழ்ந்திருக்கிறது. அது தெரிந்தும் நமக்கு எழும் தார்மீகச் சீற்றத்தைத் தணித்துக் கொண்டு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது தீமையை மேலும் வளர்க்கவே செய்யும். நமது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதே நாகரிகமும் மானுடத் தன்மையும்’’

விஷயம் சிக்கல்தான். ராய் ஜான்சன் இந்த விஷயத்தைத் தார்மீகமாகக் காண்கிறார். அவர் செய்வது சரியானதும் கூட !

ஈவு இரக்கமற்ற அதிகாரிகள் மத்தியில் ராய் ஜான்சன் விதிவிலக்கானவர். டாக்டர் ராய் ஜான்சனுக்கு ஒரே மகன்; ராணுவத்தில் பணி புரிந்தான். பர்மிய போர்க்களத்தில் ஜப்பானுடனான போரில் மரணமடைந்தான். 

டாக்டரின் உணர்வுகள் என்னை ஆழமாகப் பாதித்தன. ஒரு ஹிந்துவால் இந்த உணர்வை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துக்கள் ஒவ்வொரு மரமும் ஒரு ஜீவன் என்றும் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டென்றும் நம்புகிறார்கள். அவர்கள் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் மாலை மரம் வெட்டப்பட்ட அந்த இடத்தைப் பார்த்தேன். ஆனை போல் பேருரு கொண்டு வீழ்ந்து கிடந்த அந்த விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து நடந்தவற்றை அசை போட்டேன். அந்த மரத்தை என் மனம் பல உயிர்களாகவும் பிடுங்கி எறியப்பட்ட ஒரு குடும்பமாகவும் எண்ணற்ற தேவமலர்களாகவும் ஜனங்கள் நெருங்கி வாழும் மாநகரம் போன்ற வாழிடமாகவும் என் மனம் உணர்ந்தது. அப்போது குழலிசை என் செவியில் ஒலிப்பதை உணர்ந்தேன். மிக மெல்லிய இசை. எனக்கு மட்டும் கேட்ட இசை. மொழியற்ற இசை. இது விருட்சத்தின் கீதம் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். 

அன்றிரவு நூதனமான கனவொன்றைக் கண்டேன். எல்லாக் கனவுகளும் நூதனமானவை எனினும் அக்கனவு அதிநூதனமானது. 

கனவில் ஒரு குரல் கேட்டது. அது மரத்தின் குரல். 

‘’இது கனவென்று எண்ணாதே. உன்னால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் நான் இருக்கிறேன். என் குரல் உனக்குக் கேட்கிறதா?’’

‘’கேட்கிறது. சொல்’’

‘’நான் கொலை செய்யப்பட்டேன். நீ அதற்கு நியாயம் கேட்க வேண்டும். என் தமையன் டாக்டர் ஜான்சன் அரசு ஊழியன். அவனால் எதுவும் செய்திட முடியாது. நீ வழக்கறிஞன். உன்னால் ஏதாவது செய்ய முடியும். மரம்வெட்டி என்னை வெட்ட முதலில் மறுத்தான். அவனுக்குப் பணத்தாசை காட்டி அதிகக் கூலி கொடுத்து அவன் மனதை மாற்றினார்கள். என்னை வெட்டச் செய்தார்கள்.’’

‘’நீதிபதி இதனை வழக்காக ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்?’’

‘’மூடா நீ என்ன நாத்திகனா? யாவற்றுக்கும் செவி மடுக்கும் மிகப் பெரிய நீதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?’’

‘’இந்த வழக்கை நான் நடத்துகிறேன். முதலில் செய்தித்தாள்களில் இது குறித்து எழுதுகிறேன்’’

‘’அவ்விதமே செய். அரச மரமாக நான் இருந்த போது வருவாய்த்துறை அதிகாரி சுப்பையரும் அவரது மனைவியும் என் மரத்தடிக்கு வந்து எனக்கு குங்குமமும் சந்தனமும் இட்டு வணங்குவார்கள். பல வாரங்களாக காய்ச்சல் பீடித்து உணர்வற்றுக் கிடந்த அவர்கள் மகன் உடல்நலம் பெற என்னிடம் பிராத்தித்துக் கொள்வார்கள். என் அருளால் அவன் நலம் பெற்றான். சுப்பையர் மனம் மகிழ்ந்து என் மரத்தடியில் ஏழைகள் பலருக்கு அன்னதானம் செய்தார். அப்போது என்னைச் சுற்றி மகிழ்ச்சிகரமாக இருந்தனர் அம்மக்கள். மகத்தான நாட்கள் அவை. இப்போது கொல்லப்பட்டு வெட்டுண்டு கிடக்கிறேன்.’’

உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த நான் இந்த விஷயம் குறித்து தீவிரம் காட்டுவது என்று முடிவெடுத்தேன். 

பத்திரிக்கைகளுக்கு வளர்ந்த பெரிய மரங்கள் வெட்டப்படுவது மூடத்தனம் என கடிதம் எழுதினேன். 

எனது வழக்கறிஞர் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டனர் ; சிலர் கோபப்படவும் செய்தனர். 

‘’நண்பரே ! நாம் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம். இது ரொம்ப சின்ன விஷயம். அது தெரியவில்லையா உங்களுக்கு’’

கனவில் வந்த விருட்சம் குறித்து நான் அவர்களிடம் ஏதும் கூறவில்லை. 

‘’நம் தேசத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரத்துக்காக வாதாடிக் கொண்டிருக்கிறீர்கள்’’ வழக்கறிஞர் சங்க செயலாளர் என்னிடம் கோபமாகச் சொன்னார். 

என் வாழ்நாளில் நான் தேசத்துக்காகப் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். ஓர் அரச மரத்துக்காகக் குரலெழுப்பியதும் எனக்கு மகிழ்வான செயலே. 

***