Wednesday, 26 November 2025

ஆகாஷ்வாணிக்கு ஒரு கடிதம்

அனுப்புநர்

ர.பிரபு
***
**
*

பெறுநர்

நிலைய இயக்குநர்
ஆகாஷ்வாணி
சென்னை

ஆகாஷ்வாணி சென்னை நிலைய இயக்குநருக்கு,

வணக்கம். 

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு பிற்பகல் 1.55க்கு ஒலிபரப்பாவது ஆகாஷ்வாணியின் பல்லாண்டு கால வழக்கம். மாநிலச் செய்திகள் (திருச்சிராப்பள்ளி வானொலி) பிற்பகல் 1.45க்கு ஒலிபரப்பாகி முடிந்ததும் பிற்பகல் 2 மணி ஆங்கிலச் செய்திகள் துவங்குவதற்கு இடையே இருக்கும் ஐந்து நிமிட நேரத்தில் வானிலை முன்னறிவிப்பு ஒலிபரப்பாவது வழக்கம்.  

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கைகள் விரிவான தரவுகளின் அடிப்படையிலானவை. நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படுபவை. வானிலை குறித்து  உருவாக்கும் விழிப்புணர்வுக்கு சமமாக நாட்டின் புவியியல் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்குபவை. கன்னியாகுமரியிலிருந்து அடிலாபாத் வரை தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பெரும்பாலான ஊர்களின் மழையளவைக் காட்டுபவை. மீனவர்களுக்கும் பொதுப்பணித் துறையினருக்கும் தனி அறிவுறுத்தல்களை அளிப்பவை. தொலைபேசி, அலைபேசி , இணையம் போன்ற தொழில்நுட்பங்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பிலிருந்தே வானொலி மூலமான இந்த வானிலை முன்னறிவிப்புகள் இலட்சக்கணக்கானோருக்கு பயன் அளித்திருக்கின்றன. 

வானிலை முன்னறிவிப்பு என்பதைத் தாண்டி இதில் வேறு பல உணர்வுபூர்வமான அம்சங்களும் உள்ளன. நமது நாட்டின் தென் பகுதியின் ஐந்து மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் அறிவிக்கப்படும் இந்த அறிவிப்புகள் மக்களுக்கு தேச ஒருமைப்பாட்டு உணர்வை அளிக்கக்கூடியவை. நாங்குநேரியைச் சேர்ந்த ஒருவர் ஹைதராபாத்தில் வசிக்கிறார் என்றால் அவருடைய சொந்த ஊரில் அன்று எத்தனை செ.மீ மழை பெய்திருக்கிறது என்பதை வானொலி மூலம் கேட்டு அறியும் போது அவர் மகிழ்வார். கட்டுமாவடியில் வசிக்கும் ஒருவரது மகனோ மகளோ பெங்களூரில் பணி புரிந்தால் அவர்களின் பெற்றோர் கட்டுமாவடியிலிருந்தே பெங்களூரில் பெய்யும் மழையளவை அறிந்து மகிழ்ச்சி கொள்வார்கள். இவ்விதமான உணர்வு பூர்வமான ஒருமைப்பாட்டு விஷயங்களும் இதில் அடங்கியுள்ளது. 

நமது நாட்டில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மரபு உண்டு. காலை எழுந்ததும் ‘’அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்தி துவாரகா’’ ஆகிய ஏழு நகரங்களையும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி கோதாவரி நர்மதா ‘’ ஆகிய ஏழு நதிகளையும் நினைவுபடுத்திக் கொண்டு அவற்றின் பெயரை உச்சரித்து வணங்கும் மரபு நமக்கு உண்டு. மேலும் குழந்தைகளுக்கு ஊர்களின் பெயரை சூட்டும் வழக்கமும் நமக்கு உண்டு. அண்ணாமலை, சிதம்பரம், பழநி, திருப்பதி, திருமலை, தில்லை, காசி, துவாரகா ஆகிய ஊர்களின் பெயரை குழந்தைகளுக்கு  சூட்டி மகிழும் பண்பாடு கொண்டவர்கள் நாம். இந்த மரபுடன் பண்பாட்டுடன் இணைத்து வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்படும் ஊர்களின் பெயர்கள் அளிக்கும் அனுபவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

திருச்சிராப்பள்ளி ஆகாஷ்வாணி 1.45க்கு தமிழ்ச் செய்தி அறிக்கை வாசிக்கிறது. அதன் பின் வானிலை அறிக்கை இடம் பெறும். இது பல்லாண்டு கால வழக்கம். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கம் இருந்திருக்கிறது. இரண்டு செய்தி அறிக்கைக்கு இடைப்பட்ட நேரத்தில் வருவதால் அது செய்தி அறிக்கையின் ஒரு பகுதியாகவே கேட்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி ஆகாஷ்வாணியின் ஒலிபரப்பு பரப்பளவுக்குள் இருக்கும் காவிரி வடிநில மாவட்டங்கள், மற்றும் தமிழகத்தின் கணிசமான வட மாவட்டப் பகுதிகள் அனைத்திலும் இந்த வழக்கம் நேயர்களுக்கு மனதில் பதிவாகியிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பிற்பகல் 1.55க்கு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த வானிலை அறிக்கை பிற்பகல் 2.55க்கு நேரம் மாற்றப்பட்டதாக அறிய நேர்ந்தது. எவ்விதம் அறிய நேர்ந்தது எனில் தமிழ்ச் செய்தி அறிக்கைக்குப் பின் வரும் வானிலை அறிக்கை ஏன் ஒலிபரப்பாகாமல் இருக்கிறது என பல நாட்கள் அவதானித்த பின்னரே அறிய முடிந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதாக பதில் மின்னஞ்சல் அனுப்பினார்கள். என்னுடைய வலைப்பூவிலும் இது குறித்து எழுதினேன். 

காவிரி வடிநிலப் பகுதியில் பிற்பகல் 1.55 என்பது கிராமத்தின் தேனீர்க்கடைகளில் கிராமத்தின் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் உச்சபட்சமாக குழுமியிருக்கும் நேரம். அவர்களுடைய விழிப்புணர்வுக்காகவும் இந்த விஷயத்துடன் இணைந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வு விஷயங்களுக்காகவும் பிற்பகல் 1.45 செய்தி அறிக்கைக்குப் பின் வானிலை அறிக்கை ஒலிபரப்பாவதையும் அதனை திருச்சிராப்பள்ளி வானொலியின் செய்திகளை ஒலிபரப்பும் காரைக்கால் பண்பலை வானொலியும் ஒலிபரப்பு செய்வதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

பிரபு

இடம் : மயிலாடுதுறை
நாள் : 26.11.2025

நகல் 

1. நிலைய இயக்குநர், ஆகாஷ்வாணி, திருச்சிராப்பள்ளி
2. நிலைய இயக்குநர், ஆகாஷ்வாணி, காரைக்கால்