இன்று காலையிலிருந்து நவம்பர் 26 ஒரு முக்கியத்துவம் கொண்ட நாள் என்பதை மனம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இன்று ஒரு முக்கியமான தினம் எனத் தோன்றியதே தவிர எதற்காக என்பதை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தேன். இன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய நாள்.
ஒரு வருடத்துக்கு முன்பு இதே தினத்தில் தான் சி.பி.கி.ராம்.ஸ்-ல் நான் அளித்த புகாருக்காக உதவி அஞ்சல்துறை கண்காணிப்பாளர் என்னை நேரில் சந்தித்து என் புகார் குறித்த விபரங்களை நேரில் கேட்டறிந்தார். அன்று அவரிடம் அன்றைய தினம் இந்திய அரசியலமைப்பு நிர்ணய தினம் என்பதைக் கூறினேன். அது நினைவுக்கு வந்தது. என்னுடைய புகாருக்கு அஞ்சல்துறை உயரதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்தனர்.
இன்று பிற்பகல் ஆகாஷ்வாணி சென்னை இயக்குநருக்கும் ஆகாஷ்வாணி - திருச்சிராப்பள்ளி, காரைக்கால் - நிலையங்களுக்கும் வானிலை அறிக்கை குறித்த கடிதத்தை அனுப்பி வைக்க ஊரில் உள்ள ஒரு சிறு அஞ்சல் நிலையத்துக்கு சென்றேன். 3 அஞ்சல் உறை வேண்டும் என்று கேட்டேன். அஞ்சல் உறை கையிருப்பில் இல்லை எனக் கூறினர்.
அஞ்சலகம் விற்பனை செய்வது அஞ்சல் வில்லை, அஞ்சல் உறை, அஞ்சல் அட்டை ஆகியவற்றைத் தான். அவற்றை கையிருப்பில் வைத்துக் கொள்வதே அவர்கள் பணி. அவர்கள் அளித்த பதில் எனக்கு மிகுந்த அதிருப்தியைத் தந்தது. எனினும் அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஸ்டேஷனரி கடைக்குச் சென்று 3 ஆஃபிஸ் கவர் வாங்கி வந்து அஞ்சலகத்தில் 3 அஞ்சல் வில்லைகள் வாங்கி கவரில் வைத்து ஒட்டி அனுப்பினேன். புறப்படும் போது ‘’ஆலோசனை புகார் புத்தகம்’’ தருமாறு கேட்டேன். தங்கள் அலுவலகத்தில் அது இல்லை என்றும் தலைமை தபால் நிலையத்தில் மட்டுமே அது இருக்கும் என்றும் அங்கிருந்த ஊழியர் கூறினார்.
எல்லா அஞ்சல் அலுவலகத்திலும் ஆலோசனை புகார் புத்தகம் இருக்கும். இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரையும் ஆலோசனைகளையும் அதில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட புகாரை ஊழியர் தன் மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் அலுவலகங்களின் நூற்றாண்டு கால வழக்கம் அது. அந்த புத்தகம் தங்களிடம் இல்லை என்றார் அந்த ஊழியர். அஞ்சல் உறை இல்லை எனக் கூறியதையோ ஆலோசனை புகார் புத்தகம் இல்லை எனக் கூறியதையோ அந்த ஊழியர் ஒரு பிழையாகவே எண்ணவில்லை ; மிக இயல்பான ஒன்று என்பதாகவே எண்ணினார்.
வீட்டுக்கு வந்தேன். நடந்த சம்பவத்தை சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகாராகப் பதிவு செய்தேன்.