இந்த சம்பவம் நடந்த வருடம் 1993 ஆக இருக்கலாம். அப்போது நாகூரிலிருந்து பெங்களூருக்கு ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பின்னர் நடுவில் பல ஆண்டுகள் அந்த ரயில் இயங்காமல் இருந்து இப்போது சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்போது காரைக்காலுக்கும் பெங்களூருக்கும் இடையில் இயங்குவதாக ஞாபகம். காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் துறைமுகம் வழியாக நெய்வேலி விருத்தாஜலம் சேலம் வழியாக பெங்களூர் செல்லும் வாகனம். மாலை 5 மணியை ஒட்டி ஊரில் வண்டி ஏறினால் மறுநாள் காலை 6 மணி அளவில் பெங்களூர் சென்று சேரலாம். அந்த ரயிலில் அந்த வயதில் சிலமுறை பெங்களூருக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சென்றதிலிருந்தே பெங்களூர் எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. பெங்களூர் நகரமெங்கும் எப்போதும் பூத்துக் குலுங்கும் பூ மரங்கள் நிறைந்திருக்கும். அந்த பூத்திருக்கும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே இனிமை மிக்க அனுபவமாக இருக்கும். ஒரு சிறுவனாக அந்த நகரம் அளித்த மகிழ்ச்சி என்பது இப்போதும் மனதின் ஒரு பகுதியில் பசுமையான நினைவாக இனிமை மிக்க ஞாபகமாக பதிவாகியிருக்கிறது. பெங்களூர் மெஜஸ்டிக் சர்க்கிள், ஜலஹள்ளி, விதான் சபா ஆகிய பகுதிகள் மனதுக்கு மிகவும் நெருக்கம் கொண்டவையாக ஆயின. லால் பாக், கப்பன் பாக் ஆகிய பூங்காக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சிறுவனான நான் அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் , நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் அப்போதெல்லாம் நீங்கள் பெங்களூர் சென்றிருக்கிறீர்களா என்று கேட்பேன். உலகமே எனக்கு அப்போது பெங்களூர் சென்றிருப்பவர்கள் , பெங்களூர் செல்லாதவர்கள் என்று இரண்டாகப் பிரிந்திருந்தது. 1993ம் ஆண்டு பெங்களூர் பயணிகள் ரயிலில் சென்ற போது ரயில்வே கால அட்டவணை வெளியாகியிருந்தது என பயணச்சீட்டு சாளரத்தில் இருந்த அறிவிப்பின் மூலம் அறிந்து ஒரு கால அட்டவணை வாங்கினேன். அந்த பயணத்திலேயே அந்த கால அட்டவணை மூலம் எவ்விதம் ரயில் செல்லும் பாதையை அறிவது என்பதையும் ரயில்வே அட்டவணையைப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்தேன். அந்த பயணத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட தினமும் கூட ரயில்வே அட்டவணைய வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இருக்கும் பல்வேறு ஊர்களின் பெயர்களைப் படிப்பதற்காகவே தினமும் வாசிப்பேன். தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் ரயில்வே நிலையங்களின் பெயர்களையும் அதில் காண்பேன். மானசீகமாக அந்த ஊர்களில் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். எனது மனோ சஞ்சாரத்துக்கான முகாந்திரமாக ரயில்வே கால அட்டவணை இருந்தது. கணிணிப் பயன்பாடு ரயில்வேயில் அதிகமாகத் தொடங்கியதும் ரயில்வே அட்டவணை வடிவமைப்பு மாறியது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் ரயில்வே அட்டவணையை வாங்கி விடுவேன். எனது நண்பர்களுக்கு அதனை பரிசளிப்பேன். புது ஆண்டு தொடங்கினால் நாட்காட்டிக்குப் பதிலியாக ரயில்வே அட்டவணையைப் பரிசளித்திருக்கிறேன். இப்போது முறைமைகள் பல தலைகீழாக மாறி விட்டன. ரயில்கள் இயங்கும் விதமே மாறியிருக்கிறது. முன்னர் தினசரி இயங்கும் ரயில்கள் அதிகமாக இருக்கும். இப்போது வாராந்திர வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயங்கும் ரயில்கள் அதிகம் உள்ளன. ரயில் ஒன் இணையதளத்தில் ரயில்களைத் தேடும் வழக்கம் வந்து விட்டது. அது எனக்கு முழுமையைத் தருவதில்லை. இப்போதும் என்னிடம் ரயில்வே அட்டவணை இருக்கிறது. அதைக் கொண்டு தான் ரயில் நேரம் அறிந்து கொள்கிறேன்.
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைப் பதிவு செய்வது அவசியம் என எண்ணுகிறேன். ரயில்வே கால அட்டவணை ஒன்றை அதன் வடிவிலேயே டிஜிட்டலில் இணையத்தில் ஓர் இணையதள பக்கமாக பராமரிக்கலாம். ரயில்வே முன்னர் கால அட்டவணையை நூல் வடிவில் வெளியிட்டுக் கொண்டிருந்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக விரிவாக்கமாக ரயில்வே கால அட்டவணையின் இணைய தள பக்கம் திகழ வேண்டும். மேலும் தொலைபேசி அல்லது அலைபேசி மூலம் குறிப்பிட்ட எண்ணுக்குப் பேசி ரயிலின் நேரங்களை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். ரயில் பயணிகள் நம் நாட்டில் லட்சக்கணக்கானோர். அதில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நேரம் குறித்த ஐயங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதத்தில் ரயில் விசாரணைக்கான தொலைபேசி சேவை பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தொலைபேசி பரவலாயிருந்த காலகட்டத்தில் கூட ரயில்வே நிலையத்துக்கு ஃபோன் செய்து ரயில் நேரங்களைக் கேட்டறிந்து ரயில் பயணம் செய்ய முடியும். இப்போது அந்த நிலை இல்லை.