Thursday, 27 November 2025

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

 
சாமானிய வாழ்க்கை என்பது பந்த பாசங்களால் ஆனது. அவை முற்றிலும் எதிர்மறையானவையா என்று கேட்போமாயின் அதற்கு ஆம் என்று நாம் பதில் சொல்ல முடியாது. மானுடம் தன்னை  உட்படுத்திக் கொள்ளும் பந்தங்கள் அவர்களுக்கு விடுதலை அளிக்கவும் செய்கின்றன என்பது வாழ்வின் நூதனங்களில் ஒன்று. இந்திய மரபு இல்வாழ்க்கையை துறவுக்கு சமமாகச் சொல்கிறது. திருவள்ளுவர் திருக்குறளில் சில இடங்களில் துறவுக்கும் மேலானதாக சில இடங்களில் குறிப்பிடுகிறார்.  

லௌகிக வாழ்க்கையை நம் மரபு சம்சார சாகரம் என்கிறது. எத்தனை பெரிய உவமை அது! ஒரு கடற்கரை என்பது எத்தனை பேரைக் கொண்டது. மீனவர்கள், மீன் வாங்குபவர்கள், மீன் விற்பவர்கள், கடல் காண வந்தவர்கள், உறவினர் சாம்பலைக் கரைக்க வந்தவர்கள், வாகன ஓட்டிகள் என எத்தனை பேர். கடற்கரை என்பது கடலின் ஒரு சிறு துளி. அதனுள்ளேயே ஆயிரமாயிரம் கதைகள். அப்போது கடலுக்கு எத்தனை கதை ? முதல் செல் அமீபா தன்னில் உருவானதிலிருந்து கடலுக்கு எத்தனை கதைகள் தெரிந்திருக்கும்? சம்சாரம் சாகரம் எனில் சம்சாரிகள் அதில் கரையேறுவது எவ்விதம்?

அமிழும் கால்களையும் பறக்கும் சிறகுகளையும் கொண்டிருக்கிறான் மனிதன். மண்ணைத் தொடும் தனது கால்களை அவன் தினமும் காண்கிறான்; உணர்கிறான். விண் நோக்கிப் பறக்கும் சிறகுகள் தனக்கு இருப்பதை மனிதன் பொதுவாக உணர்வதில்லை ; காண்பதில்லை. மானிடர் எண்ணிக்கை ஒரு கோடி எனில் அதில் ஒருவரே அதனை உணர்கிறார். 

கோடியில் ஒரு மனிதன் தான் என்னும் உணர்வைக் கடந்து செல்கிறான். அவனது பாதை அன்பின் பாதையாயிருக்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு அவன் இதத்தை அளிக்கிறான் ; நம்பிக்கையை அளிக்கிறான். அத்தகைய ஒரு மனிதனின் கதையை ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்- ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’. 

அன்புமயமான மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் வெளிப்படும் அன்பை மட்டுமே காண்கிறான். அன்பின் பாதையின் இயல்பு அத்தகையது. மானுடத்தின் அதி தூய உணர்வுக்கு சொல் வடிவம் கொடுக்கப்பட்ட படைப்பு என்னும் விதத்தில் மிக முக்கியமான நாவல் ஜெயகாந்தனின் ‘’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’.