நேற்று காலை 10 மணி அளவில் எனக்கு ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. தலைமை தபால் நிலையத்திலிருந்து பேசினார்கள். ஊரின் சிறு அஞ்சலகம் ஒன்றில் அஞ்சல் உறை வாங்கப் போன போது அஞ்சல் உறை இருப்பு இல்லை எனக் கூறியதற்காகவும் ‘’ஆலோசனை புகார் புத்தகம்’’ கேட்ட போது அதுவும் இங்கே இல்லை எனக் கூறியதற்காகவும் சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் அளித்திருந்தேன். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்யவே அழைத்திருந்தார்கள். நீங்கள் இருக்கும் இடத்துக்கு நேரில் வருகிறேன் என ஃபோனில் பேசியவர் சொன்னார். நானே அலுவலகம் வந்து விடுகிறேன் என்று கூறி நேரில் சென்றேன். இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த உயர் அதிகாரியை சந்தித்தேன். எனக்கு ஏற்பட்ட அசௌகர்யத்துக்காக இந்த புகாரை அளிக்கவில்லை ; ‘’ஆலோசனை புகார் புத்தகம்’’ கேட்டேன். அதை அளித்திருந்தால் பொதுவாக தபால் அனுப்புதல் தொடர்பான அஞ்சல் உறை, அஞ்சல் வில்லை ஆகியவற்றை போதிய இருப்பில் வைத்திருக்கவும் எனப் பொதுவாக எழுதி விட்டு போயிருப்பேன். அதுவும் இல்லை என்று கூறியதால் மட்டுமே சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் பதிவு செய்தேன் எனக் கூறினேன். அவர் நிகழ்ந்த விஷயத்துக்கு மிகவும் வருந்தினார். எனது புகாரை மீண்டும் ஒரு அறிக்கையாக எழுதிக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். குறைந்தபட்ச ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அதிகாரி கூறினார். தங்களுக்குக் கீழ் இருக்கும் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு நிகழ்வது என்ன என்பது மேல் அதிகாரிகளுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் அளித்தேன் என்று கூறினேன்.