மதிப்பிற்குரிய சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளுக்கு,
என்னுடைய பெயர் பிரபு. மயிலாடுதுறையில் வசிக்கிறேன். வானொலியில் ஆகாஷ்வாணியில் பிற்பகல் 1.45ல் ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளைத் தொடர்ந்து 1.55க்கு ஒலிபரப்பாகும் வானிலை முன்னறிவிப்பை தொடர்ச்சியாகக் கேட்கும் வழக்கம் கொண்டவன். மக்களை எவ்விதமான பதட்டத்துக்கும் ஆளாக்காமல் தரவுகளின் அடிப்பையில் வானிலையைக் கணித்து முன்னறிவிப்பை வெளியிடும் வானிலை அறிக்கை மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன்.
கடந்த ஒரு மாதமாக ஆகாஷ்வாணி காரைக்கால் பண்பலையில் 1.45 தமிழ்ச் செய்திகளைத் தொடர்ந்து வானிலை முன்னறிவிப்பு வெளியாவதில்லை. இதனை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
பிற்பகல் வேளையானதால் கிராமத்தின் உணவகங்கள், தேனீர்க்கடைகள் ஆகியவற்றில் பண்பலை ஒலிபரப்பு உச்சமான நேயர்களை சென்றடையும் நேரமாகும் அது. காவிரி வடிநில பகுதியில் வாழும் விவசாயிகளும் மீனவர்களும் வானிலை முன்னறிவிப்பைக் கேட்டு தங்கள் அடுத்தடுத்த நாட்களின் விவசாயப் பணிகளையும் மீன்பிடிப் பணிகளையும் மேற்கொள்வார்கள். எனவே விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி பிற்பகல் 1.45 தமிழ்ச் செய்திக்குப் பின் வானிலை முன்னறிவிப்பு தமிழகத்தின் எல்லா ஆகாஷ்வாணி பண்பலை வானொலிகளிலும் ஒலிபரப்பாவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இக்கடிதம் எழுதுகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வானிலை அறிக்கையைக் கண்டேன். வானிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் நேரம் பிற்பகல் 2.15 எனக் காட்டியது. ஒருவேளை வானிலை அறிக்கை மதியம் 2.15க்கு தயாராவதால் 1.45 தமிழ்ச் செய்திக்குப் பின் வானிலை முன்னறிவிப்பு ஒலிபரப்பாவதில்லையா? அவ்வாறெனில் ஒரு மணி நேரம் முன்பு தயாரித்து ஒலிபரப்பாவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
பிரபு