Wednesday, 21 January 2026

வருக வருக

என் நண்பரின் மகள் குறித்து சமீபத்தில் வாணியின் மாணவி என்னும் பதிவை எழுதியிருந்தேன். தினமும் நூல் வாசிப்புக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தினேன். துவக்க நிலை வாசிப்புக்கு சில புத்தகங்களைப் பரிந்துரை செய்தேன். இணையம் மூலம் நான் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்றை வாங்கி வாசித்திருக்கிறார். அதனை என்னிடம் தெரிவித்தார். வாசித்த நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதுமாறு கூறினேன். அந்நூலின் வாசிப்பனுபவத்தை நான்கு பக்கங்களுக்கு எழுதியிருந்தார். நான் பெரிதும் மகிழ்ந்தேன். அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் கல்வி என்பதே ஒரு நூலை வாசிப்பதும் வாசித்த நூலின் வாசிப்பனுபவத்தை எழுதுவதும் தான். ஒரு மாணவன் எந்த பாடத்தைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ளானோ அந்த பாடத்தையே அங்கே படிக்கிறான். வணிகவியலில் ஆர்வம் கொண்டிருப்பவனை மின் பொறியியலையோ கணிணிப் பொறியியலையோ படிக்க அங்கே சொல்வதில்லை. இங்கே தமிழ்நாட்டில் எல்லா குடும்பங்களும் தங்கள் குழந்தைகளை பொறியியல் படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். கடந்த 35 ஆண்டுகளில் தமிழகத்தில் கலை, நுண்கலை, அறிவியல் படிப்புகள் ஒளி மங்கிப் போயிருக்கின்றன. இந்நிலை நிச்சயம் சமூகத்தில் பிரதிபலிக்கும். அதனை உணரும் உணர்வுப்புலன்கள் தமிழ்ச் சமூகத்துக்கு இப்போது இல்லை. நண்பரின் மகள் வாசிக்கத் தொடங்கியிருப்பதும் சரளமாக எழுதும் திறன் கொண்டிருப்பதும் நல்ல விஷயங்கள். வாணியின் அருள் அவருக்கு பூரணமாகக் கிட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்.