4 ஏக்கர் பரப்பு கொண்ட வீடுடைய நண்பர் காலை 4.30க்கு எழுவார். எழுந்ததும் அன்றைய தினத்தின் அலுவல்கள் சார்ந்து குறிப்புகள் தயார் செய்வார். காலை 6 மணிக்கு வந்து சந்திக்குமாறு கூறுவார். அதுவே இப்போது நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் என்றாகி விட்டது. காலை 8 மணி வரை சற்று சாவகாசமாக இருப்பார். அதன் பின் அலைபேசி அழைப்புகள் வரத் துவங்கும். இரவு 8 மணி வரை தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றுக்கு பதில் சொல்வதிலேயே நாளின் பெருமளவு நேரம் செலவாகும். ஒரு அழைப்பை பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மேலும் 4 அழைப்புகள் வந்து விடும். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாக மீண்டும் அழைத்து பேசி அது தொடர்பான அடுத்த அழைப்புகளைப் பேசி என நேரம் சுழன்று விடும். நண்பர் வீட்டில் எப்போதும் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர். அடுமனைப் பணிக்கு ஒரு பணியாளர் இருக்கிறார். அவர்கள் வீட்டின் வழக்கம் முதலில் நண்பர் காலை உணவருந்துவார். அவரது பொதுவான நேரம் காலை 9 மணி. அவருடனோ அவருக்குப் பின்னோ அவரது சகோதரரும் உணவருந்துவார். நான் காலை 8.30 வரை அவருடன் உரையாடி விட்டு புறப்படுவேன் ; உணவருந்தி விட்டு புறப்படுமாறு நண்பர் சொல்வார். நாங்கள் சேர்ந்து உணவருந்துவோம். காலை 6.30க்கு நான் நண்பர் வீட்டில் இருந்தாலே அவர்கள் வீட்டில் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாரித்து விடுவார்கள். அவர் வீடு 2000 சதுர அடி பெரியது என்பதால் ஒவ்வொரு பணிகள் ஒவ்வொரு இடத்தில் நடக்கும். ஒருநாள் எனக்கும் சேர்த்து காலை உணவு தயாராகி விட்டது. நண்பர் 8.30க்கு ஒரு அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பேசி முடித்து அதன் பின் அவர் நீராடி வர வேண்டும். எப்படியும் 9.15 ஆகி விடும். மற்ற உறுப்பினர்கள் இன்னும் தயாராகி வரவில்லை. ஆனால் டயனிங் டேபிளில் காலை உணவு தயாராகி ஹாட் பேக்கில் இருக்கிறது. பொங்கல், இட்லி, பூரி, சட்னி, சாம்பார், குருமா என அனைத்தும் உள்ளது. டயனிங் டேபிள் அருகில் யாரும் இல்லை. அடுமனையிலும் யாரும் இல்லை. நான் அடுமனையிலிருந்து உணவருந்தும் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். டயனிங்கில் அமர்ந்து உணவு வகைகளை தட்டில் வைத்துக் கொண்டு உணவருந்தத் தொடங்கினேன். சாப்பிட்டு கை கழுவி சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த போது நண்பரின் சகோதரர் வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறி விட்டு புறப்பட்டேன்.