திருவண்ணாமலை சென்றிருந்த போது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மலையும் மலை சார்ந்த இடமுமாக இருந்ததிலிருந்து இன்று பேராலய நகரமாக இருப்பது வரை. அண்ணாமலை ஆலயம் பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. விஜயநகரப் பேரரசே இப்போது இருக்கும் ஆலயத்தின் பெரும் கோபுரங்களை எழுப்பியது. இஸ்லாமியத் தாக்குதலுக்கு இந்த ஆலயம் உள்ளாகி இருளுக்குச் சென்றது. மராட்டியப் பேரரசு அதனை இருளிலிருந்து மீட்டது. அந்த நகரில் இருக்கும் போது அந்த நகர் பல்வேறு நூற்றாண்டுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.
ஸ்ரீரங்கம் செல்லலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் இப்போது என்னுடைய பரிசீலனையில் உள்ள இன்னொரு நகரம் காஞ்சிபுரம்.
எனது நண்பர் ஒருவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நண்பர் சொன்னார். தொல்பழம் காலத்தில் காஞ்சிபுரத்தின் பாலாறு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் இருந்திருக்கிறது. பின்னர் நதியின் பாதை சற்று நகர்ந்து நகர்ந்து இப்போதிருக்கும் இடத்தில் இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் பாலாற்றின் மணல்சாரியான நிலம். வாழ்தலுக்கு மிக உகந்த நிலம் என்று சொன்னார்.