சென்னை நண்பர் மூன்று குழந்தைகள் நலனில் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்குத் தேவையான அறைக்கலன் ஏதும் வாங்கித் தருமாறு என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியிருந்தார். ஏகப்பட்ட உலகியல் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் நண்பர் பணித்திருந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அந்த குழந்தைகளின் ஊர் இங்கிருந்து 2 மணி நேர பயண நேரத்தில் இருக்கிறது. நண்பர் சொன்ன அறைக்கலனை இங்கிருந்து வாங்கி அங்கே எடுத்துச் செல்வது என்பதில் வண்டி வாகன வாடகையே நண்பர் அனுப்பிய தொகையில் கணிசமான பங்கை எடுத்துக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் ஒரு அறைக்கலன் செய்யும் தச்சரை சந்தித்தேன். அவர் இரும்புக் குழாய்களைக் கொண்டும் அறைக்கலன் செய்பவர். குழந்தைகளின் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அவர் ஊர் இருக்கிறது என்பதை அறிந்தேன். குழந்தைகளின் ஊருக்குச் சென்று அறைக்கலனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அவ்விதமே செய்து கொடுத்தார். வேலையை முடித்ததும் நண்பர் ஒருவரிடம் சொல்லி மின்னணு பரிமாற்றம் மூலம் அவர் அலைபேசியிலிருந்து தச்சரின் கணக்குக்கு பணம் மாற்ற சொன்னேன். அவரும் அவ்விதமே செய்தார். நண்பரிடம் ரொக்கமாக தொகையை நேரில் சந்தித்து அளித்தேன். சென்னை நண்பருக்கும் பணி நிறைவு பெற்றது என்னும் தகவல் தெரிவித்தேன். அனைவருக்கும் திருப்தி.