இன்று காலை திருஇந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். காலை நேரம். ஆலயத்தில் ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அப்போது ஒரு துவாரபாலகர் சிலை முன் நின்றிருந்தேன். எத்தனை பெரியது அந்தத் துவாரபாலகர் சிலை. ஆலயத்தில் இவ்விதமான சிலைகள் மட்டும் எத்தனை. தூண்களில் எத்தனை சிறு சிற்பங்கள். இவ்வளவு பெரிய தூண்களில் ஒன்று எங்கேனும் ஓரிடத்தில் இருந்தால் கூட அது அளிக்கும் உன்னத உணர்வு என்பது மிகப் பெரியது. ஒரே இடத்தில் எத்தனை தூண்கள். எத்தனை சிற்பங்கள்.
தமிழகத்தின் ஆலயங்கள் அத்தனையும் இஸ்லாமியப் படையெடுப்பின் போது தாக்கப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆலயங்கள் மூடிக் கிடந்து கற்குவியலாயின. நாட்டின் நல்லூழ் வ்ஜயநகரப் பேரரசு உருவாகி ஆலயங்களை இருளிலிருந்து மீட்டது. கணிசமான அளவில் கட்டுமானங்களை மேற்கொண்டு ஆலயக்கலையை ஆலய மரபுகளைக் காத்தது.
கலைப் பொக்கிஷங்களான பேராலயங்களில் பணி புரியும் அர்ச்சகர்கள் சொற்ப ஊதியம் பெற்றுக் கொண்டு வறுமையில் வாடுகின்றனர். ஆலயத்தை நிர்வகிக்க பொறுப்பு ஏற்கும் அரசு ஆலயத்தின் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளருக்கு ஊதியம் எவ்வளவு ? ஆலய அர்ச்சகருக்கு அளிக்கும் தொகுப்பு ஊதியம் எவ்வளவு? ஆலய அலுவலக அரசு ஊழியரான அலுவலக உதவியாளர் ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 45,000 இருக்கக் கூடும். ஆலய அர்ச்சகர் மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.2000 பெறுவாரா? இதை விட பெரும் அநீதி வேறேதும் இருந்திட முடியாது.
உலகக் கலை மரபின் பெரும் பொக்கிஷமான தமிழகக் கோயில்கள் கலையும் ஆன்மீகமும் திகழும் தலங்களாக பராமரிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் தீவிரமாக எழுந்தது.