Sunday, 31 May 2026

அதிதி

திதி என்பது நாளைக் குறிக்கும் சொல். பிரதமை தொடங்கி சதுர்தசி ஈறாக 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து எத்தனையாவது நாள் என்பதே திதி ஆகும். அமாவாசையிலிருந்து இரண்டாம் நாள் திவிதியை ஆகும். அமாவாசையிலிருந்து 30வது நாள் சதுர்தசி ஆகும்.  

இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இன்றி நம் வீட்டுக்கு வருபவரே அதிதி ஆவார். அதிதியைக் கடவுளுக்குச் சமமாக நினைக்க வேண்டும் என்கிறது நம் மரபு. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது மறை வாக்கியம்.  இன்ன நாள் இன்ன கிழமை வருகிறேன் என்ற அறிவிப்பு இல்லாமல் வரும் நண்பர்களும் உறவினர்களும் ( மித்ர பந்துக்கள்) அதிதி ஆக மாட்டார்கள். அவர்கள் மித்ர பந்துக்களே. 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. 

என்பது திருக்குறள். 

இன்று அலைபேசி சமூகத்தில் பெரும்பாலோனோர் கையில் இருக்கிறது. ஒருவரைச் சந்திக்க செல்லும் முன் வருகையை அறிவித்து விட்டு செல்ல வேண்டும் என்னும் வழக்கம் உருவாகியிருக்கிறது. வணிகத்துக்கு அது மிகவும் உகந்த செயல்பாடும் கூட. ‘’இடம் பொருள் ஏவல்’’ ஆகியவை முக்கியத்துவம் கொள்ளும் செயல்பாடு வணிகத்துக்குரியது. 

ஒரு நண்பனைச் சந்திக்க , ஓர் உறவினரைச் சந்திக்க, பரிச்சயம் உள்ள ஒருவரைச் சந்திக்க அலைபேசியில் கூறி விட்டு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்விதமாக பலரைச் சென்று சந்திக்கலாம் என இருக்கிறேன். 

திருச்சிராப்பள்ளியில் ஒரு நண்பர் இருக்கிறார் என்றால் வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ரயில்வே சந்திப்புக்கு டவுன் பஸ்ஸில் சென்று ரயில் பிடித்து திருச்சி சென்று அங்கே உள்ள டவுன் பேருந்தில் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமோ அங்கு சென்று நண்பனைச் சந்திப்பது. ஒரு மணி நேரம் மட்டும் அங்கே இருப்பது. அதன் பின் கிளம்பி சென்ற விதமாகவே ஊர் திரும்பி விடுவது. அந்தப் பயணத்தில் வேறு இடங்களுக்குச் செல்வதோ வேறு நபர்களைச் சந்திப்பதோ கிடையாது. அந்த நாள் அந்த பயணம் அந்த ஒரு நபருக்கு அந்த ஒரு குடும்பத்துக்கு மட்டும் தான். இவ்வாறான பயணங்களை நிகழ்த்த வேண்டும் என விரும்புகிறேன். 

யாரைக் காணச் செல்கிறோமோ அவர்கள் ஊரில் இல்லாமல் இருக்கலாம். வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். அவ்விதம் இருந்தால் அதனை அவ்விதமே ஏற்றுக் கொள்வது. அங்கே இருக்கப் போவது குறைந்தபட்சமாக ஒரு மணி நேரம் தான். 

இவ்விதமாக நிகழ்த்தும் பயணங்கள் குறித்து எழுதலாம் என இருக்கிறேன். 

Saturday, 30 May 2026

உபயோகமான பொருள்

 

இன்று நண்பர் ஒருவர் ஃபோன் செய்திருந்தார். ஒரு விஷயத்தைத் தெரிவிக்க. அதாவது, எனது வலைப்பூவில் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்த ‘’ஃபாரடே பை’’ குறித்த பதிவை வாசித்ததாகவும் அதனால் கவரப் பெற்று தனக்கு ஒரு ‘’ஃபாரடே பை’’ ஆர்டர் செய்ததாகவும் தற்போது அது தனது பயன்பாட்டில் இருப்பதாகவும் மிகவும் உபயோகமான பொருள் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.  

Thursday, 28 May 2026

ஆர்வமும் முன்னேற்றமும்

நேற்று வந்திருந்த ரியல் எஸ்டேட் குழு நேற்று பார்த்த இடத்தைச் சுற்றியிருக்கும் மனை நிலவரம் குறித்து விசாரித்து சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். நேற்று தீவிரமாக விசாரித்தேன். அப்போது ஒரு இடத்தை அறிந்தேன். 

அந்த இடம் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில் ஒரு கடைத்தெரு. பஸ் ஸ்டாண்ட். சாலைகள் நல்ல விதமாக அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. 2000 சதுர அடி மனைகள் அதிகம் இருந்தன. 1800 சதுர அடியிலும் மனைகள் இருந்தன. அவர்கள் சகாய விலைக்கு விற்கின்றனர். ஒரு மனை வாங்க விசாரிக்க வந்தவன் போல அவர்களிடம் பேசி விபரம் கேட்டுக் கொண்டேன். ஒரே பேமெண்ட்டாகக் கொடுத்தால் விலையில் 10 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அவ்வாறெனில் அவர்களுக்குத் தீவிரமான நிதித்தேவை இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன். 

அந்த ஊரில் இருக்கும் மனைத்தரகர்களை தொடர்பு கொண்டு இந்த இடத்தை மொத்தமாக வாங்கலாமா என ஆலோசனை கேட்டேன். எல்லாரும் ஆர்வமாக இருந்தனர். 

இன்று காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளையும் அங்கு செல்ல நேர்ந்தது. அங்கே 100 மனைப்பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் 60 விற்பனை செய்துள்ளார்கள். மீதி 40 மனையை விற்க வேண்டும் ; வாங்கினால். அவர்களுக்கு இப்போது 2 சி தேவை. அந்தப் பகுதியில் நான் அறிந்த அனைவருக்கும் ஃபோன் செய்து அந்த இடம் குறித்து விசாரித்தேன். எல்லாரும் நல்ல விதமாகவே தெரிவித்தார்கள். 

ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறேன்.  

Wednesday, 27 May 2026

மனை பிராப்தி

வீடு மனை வாகனப் பிராப்தி எனக் கூறுவார்கள். பிராப்தி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இணையத்தில் பிராப்திக்கு சமமான தமிழ்ச்சொற்கள் எவை என்று தேடினேன். பல சொற்கள் இருந்தது ; அதில் ஒன்று கொடுப்பினை. ராஜசுந்தர்ராஜனின் கவிதை ஒன்றின் தலைப்பு கொடுப்பினை என்பது நினைவுக்கு வந்தது. 

கொடுப்பினை

------------------------

இரா முழுக்கத் 
தவம் கிடந்தன
வான் நிறைய மீன்கள்
பரிதியை
நேர்நின்று கண்டதோ
விடிய வந்த ஒரு வெள்ளி

-ராஜசுந்தர்ராஜன் 

ரியல் எஸ்டேட்டில் இருப்பவன் என்பதால் வீடு பிராப்தி , மனை பிராப்தி எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன். இந்தத் தொழிலுக்கு வாகன பிராப்தியும் மிக முக்கியம். ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும் என மனம் நினைத்தால் நம் கையில் இருக்கும் வாகனத்துக்கு நம்மை விட அந்த எண்ணம் அதிகமாக ஏற்பட வேண்டும். நாம் கையில் வைத்திருக்கும் வாகனத்துடன் நமக்கு ஒரு உரையாடல் இருக்க வேண்டும். அதுதான் உச்சபட்சமான வாகன பிராப்தி. இன்று வாகனம் என்பது உருளியாக ஆகியுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜீவன்களே வாகனங்களில் முக்கியமாக இருந்திருக்கின்றன. மாடு, குதிரை ஆகியவை மனிதர்களைச் சுமந்திருக்கின்றன. சமணத் துறவிகள் 2500 ஆண்டுகளாக ச்கடம் வைத்த எந்த வண்டியிலும் ஏறுவதில்லை என்னும் நெறி கொண்டவர்கள். இப்போதும் அந்த நெறி கொண்டிருக்கும் சமணத் துறவிகள் உண்டு. அவர்கள் எங்கு சென்றாலும் எத்தனை கிலோமீட்டர் சென்றாலும் நடந்தே செல்வார்கள். ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் சேட்டக். மொகலாயர்களை எதிர்த்து ராணா பெரும் யுத்தம் நிகழ்த்திய போது அவருக்கு உறுதுணையாக இருந்தது சேட்டக். தன் உயிரைக் கொடுத்து ராணாவின் உயிரைக் காத்தது சேட்டக். இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் 1980களில் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டருக்கு ராணாவின் குதிரையின் பெயரான சேட்டக் என்பதைச் சூட்டியது. 

இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் குழு வருகை தந்தது. ஊருக்கு 40 கிமீ தெற்கே இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி அங்கே ஓர் இடம் இருக்கிறது. அதைப் பார்க்க வருகிறோம் என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். காரில் வந்தனர். ஒருவர் ஓட்டுநர். ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். மூன்றாவது நபர் மீடியேட்டர். நான்காவதாக நான் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன். ஊரில் நான் அறிந்த இரண்டு இடங்களை காட்டினேன். 

பின்னர் உத்தேசித்த ஊருக்குப் பயணமானோம். அப்போது தான் தெரிய வந்தது பார்க்க இருந்த இடம் ஊரிலிருந்து 40 கிமீ தொலைவில் இல்லை. 15 கிமீ தொலைவில் தான் இருக்கிறது என. இந்தத் தொழிலில் ஒரு விஷயத்தை சின்ன அளவிலோ பெரிய அளவிலோ மாற்றிச் சொல்லியவண்ணமே இருப்பார்கள். இதுவும் அப்படியே. இடம் காட்டினார்கள். அந்த இடத்தில் முதலீடு செய்தால் முதலீட்டுக்கு மோசம் உண்டாகும் என எனக்குத் தோன்றியது. மீடியேட்டர் இல்லாத நேரத்தில் அதனைச் சொன்னேன். இரண்டு நாட்களில் மீண்டும் இந்த இடத்துக்கு தனியாக வந்து விசாரித்து முழுமையாகக் கூறும் படி சொன்னார். மீடியேட்டர் வேறு வேலை இருக்கிறது என அங்கே இறங்கிக் கொண்டார். நான் ஊரில் இறங்கிக் கொண்டேன். 

நண்பர் இரண்டு நாள் நேரம் கொடுத்திருந்தாலும் மாலையே அங்கே சென்றேன். நாங்கள் பார்த்த இடத்துக்கு 4 கிமீ முன்னதாகவே ஒரு பிரமாதமான இடம் இருந்தது. ரெரா அப்ரூவல், டி டி சி பி அப்ரூவல் அனைத்தும் வாங்கியிருந்தார்கள். சகாயமான விலைக்கு மொத்த பிளாட்டில் பாதியை விற்றிருக்கிறார்கள். மீதி இருக்கும் பிளாட்டை மொத்தமாக வாங்கினால் விலை கணிசமாகக் குறைத்துக் கிடைக்கும். ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து விட்டு நேரடியாக மனைகளை விற்கலாம். அது ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் இருக்கும் மீடியேட்டர்களை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். சந்திப்புகள் உற்சாகம் அளித்தன. நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். 

வீட்டுக்கு வரும் போது வீடு மனை வாகனப் பிராப்தி என்னும் வாசகம் நினைவில் சுழன்று கொண்டிருந்தது. 

Tuesday, 26 May 2026

திறனற்ற நிர்வாகம்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பப்பட்டால் அதன் மீது நடவடிக்கை சற்று கூடுதல் வேகத்துடன் இருக்கும். தமிழகத்தின் பெரும்பாலான புகார்கள் பட்டா , ரேஷன் கார்டு தொடர்பானவை. அதிலும் பட்டா கோரி மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்களே மிகுதி. பட்டா என்பது அசையா சொத்து தொடர்புடையது என்பதால் அதில் லஞ்சம் அதிகமாக கேட்கப்படும். இன்றைய நிலை என்ன என்றால் குடிமக்கள் தாசில்தார், டி எஸ் ஓ போன்ற தாலுக்கா அளவு அதிகாரிகள் மீதும் அவர்களின் தாலுக்கா அலுவலகங்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல புகார்கள் செல்கின்றன. அங்கே மாநிலம் முழுவதிலிமிருந்து லட்சக்கணக்கான புகார்கள் குவிகின்றன. அதன் செயல்திறன் குன்றுகிறது. சரி செய்ய வேண்டிய தமிழக நிலையாகும் இது.  

மனுவும் தபாலும்

இந்திய ஜனநாயகத்தின் அங்கமான மாநில அரசாங்கங்களின் இயங்குமுறையின் ஒரு சிறப்பான அம்சம் என்பது என்னவெனில் எந்த ஒரு பிரஜையும் எந்த ஒரு அரசு அலுவலகத்துடனும் தபால் மூலமாக தொடர்பு கொள்ள முடியும் என்பதே. தபாலில் அனுப்பப்படும் கடிதங்கள் முதல்கட்டமாக தபால்களுக்கென உள்ள பதிவேட்டில் பதியப்பட வேண்டும். இந்தப் பணிக்கெனவே ஒவ்வொரு அலுவலகத்திலும் தபால் பிரிவு என ஒரு பிரிவு இருக்கிறது. அதன் வேலை என்னவெனில் அலுவலகத்துக்கு வரும் தபால்களைப் பிரித்து அதன் உறையையும் கடிதத்துடன் சேர்த்து தைத்து அல்லது ஸ்டேப்ளர் செய்து அதற்கு எண்ணிட்டு தபால் அலுவலகத்தை வந்தடைந்த தேதியைக் குறிப்பிட்டு அட்டவணையிட வேண்டும். கடிதத்தை அனுப்பியவர் யார் கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதை முதலில் தபால் பிரிவு பதிவு செய்து கொள்ளும். அதன் பின் அந்தத் தபால்கள் ஒரு எழுத்தருக்குச் செல்லும். அதன் பின் மேலதிகாரிக்குச் செல்லும். பொதுவாக அரசு அலுவலகங்கள் எந்த தபாலின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையிலேயே வைக்கும் என்பது நடைமுறை. ‘’எந்த விஷயத்தின் மீதும் முடிவெடுக்காமல் இருப்பதே ஒரு முடிவு’’ என்னும் நிலைப்பாடு கொண்டவை அரசு அலுவலகங்கள். இருந்தாலும் ஓர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பப்படுகிறது எனில் அந்த மனுவின் உள்ளடக்கம் அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் அனேகமாகத் தெரிந்து விடும். அதிகாரபூர்வமாக அல்லது அதிகாரபூர்வமில்லாமலோ அந்த விஷயம் வெளியில் கசியும். மனுவின் கோரிக்கை நிறைவேறவோ அல்லது நிலுவைக்குச் செல்லவோ வாய்ப்பு உண்டாகும். அரசாங்கம் எல்லா தபால்களையும் பராமரித்து வைக்க வேண்டும் ; நிலுவைக்குச் சென்றால் பல மாதங்கள் பல வருடங்களுக்குப் பின்னும் அந்த மனு உயிர் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 

ஓர் அரசாங்க அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பும் போது அதனை பதிவுத்தபாலாக அனுப்புவது உசிதம். அந்த பதிவுத்தபாலின் ஒப்புகை அட்டையை பாதுகாத்துக் கொள்வது நலம். அனுப்பும் அஞ்சல் உறையின் மேற்புறம் ‘’பதிவுத் தபால்’’ எனக் குறிப்பிடப்பட்டால் அந்த மனு கூடுதல் கவனம் பெற வாய்ப்பு உள்ளது. மனுவை அனுப்புபவர் அரசு அலுவலகம் எந்த தேதியில் மனுவைப் பெற்றிருக்கிறது என்பதை பதிவு செய்து கவனமளிக்கிறார் என்பது அதன் பொருள்.  மனுவின் நகலில் பதிவுத்தபால் ரசீதை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது மாநில அரசாங்கத்தின் பல பணிகள் இணையம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒருவர் பட்டாவுக்காக இணையம் மூலம் விண்ணப்பிக்கிறார் என்றால் அந்த கோப்பினை அரசு அலுவர்களால் மூட முடியும். தபால் மூலம் அனுப்பப்படும் மனுவை அவர்களால் அவ்வளவு எளிதில் மூட முடியாது. 

தபால் முறை ஓர் எளிய முறை. ஒரு சாதாரண பிரஜையும் அரசாங்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் முறை. அரசாங்கம் எப்போதும் பிரஜைகள் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ள பலவிதமான வாசல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். 

மத்திய அரசாங்கத்தின் CPGRAMS சிறந்த முறை. எளிய புகாரானாலும் முதலில் தலைமை அலுவலகத்துக்கு செல்லும். அங்கிருந்து கீழ் அலுவலகத்துக்கு வரும். இந்திய அரசாங்க அலுவலகங்கள் கீழிருந்து மேல் முறையை பின்பற்றிக் கொண்டிருந்த நிலையில் மேலிருந்து கீழ் முறையைக் கொண்டு வந்த முறை. மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மனுதாரருக்குத் தெரிவித்தால் மட்டுமே கோப்புகளை மூட முடியும் என்பது அதன் சிறப்பம்சம். அதில் பல புகார்களை நான் பதிவு செய்திருக்கிறேன். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

ஜீனி ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள விரும்பும் டெய்லருக்காக ஒரு மனுவை எழுதிக் கொடுத்தேன். அதை தபாலின் அனுப்பி விட்டு மேல்நடவடிக்கைக்குக் காத்திருக்கலாமா அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளில் மனு கொடுக்கலாமா என யோசித்தேன். மனுநீதி நாள் என்பது மாவட்ட ஆட்சியர் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களின் எல்லா துறை சார்ந்த மனுக்களையும் பெறும் நாள். மனுநீதிநாள் மனுக்கள் என அவை அட்டவணையிடப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். 90 நாட்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது வழிமுறை. 

நேற்று திங்கள்கிழமை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே சென்ற போது டெய்லர் ஞாபகம் வந்தது. மனுநீதி நாள் கூட்டத்துக்குச் சென்றேன். அங்கே அப்போது 200 பேர் இருந்தனர். ரேஷன் கடை தொடர்பான அலுவலகர்களைக் கண்டடைந்து அவர்களிடம் விஷயத்தைக் கூறினேன். மனுவை தபால் மூலம் அனுப்புங்கள் ; நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். 

டெய்லரைச் சந்தித்து முதலில் ஒரு மனுவை அனுப்ப அவருக்கு உதவ வேண்டும். அதன் பின் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்த்து நடவடிக்கை இல்லையெனில் மத்திய அரசின் CPGRAMS ல் தெரிவிக்கலாம் என முடிவு செய்து கொண்டேன்.     

Sunday, 24 May 2026

கலியபெருமாள் திருவடியில்

 

பல வருடங்களாக அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தேன். எங்கள் பிராந்தியத்தில் பலர் அந்தக் கோயிலுக்கு அவ்வப்போது செல்லும் வழக்கம் கொண்டவர்கள். எங்கள் பகுதியில் பலருக்கு கலியபெருமாள் என்னும் பெயர் இருக்கும். அரியலூரில் இருக்கும் பெருமாளின் பெயரையே நாமமாக இட்டிருப்பார்கள். வைணவம் குறித்த பேச்சு எழும் போதெல்லாம் கலியபெருமாள் கோவில் குறித்து யாரேனும் சொல்வது வழக்கம். அரியலூர் செல்ல வேண்டும் என்றால் மணல்மேடு காட்டுமன்னார்குடி மீன்சுருட்டி ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்ல வேண்டும். இருப்பதில் சுருக்கமான மார்க்கம் அதுவே. ஜெயங்கொண்டத்திலிருந்து விளாங்குடி கைகாட்டி சென்று அங்கிருந்து அரியலூர் செல்ல வேண்டும். ஊரிலிருந்து காவிரிக்கரையோரமாக திருவையாறு வந்து அங்கிருந்தும் அரியலூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்தும் ஒரு மார்க்கம் உண்டு. பல மார்க்கங்கள் இருப்பினும் பயணம் நிகழாமல் இருந்தது. இன்று காலை எழுந்ததுமே கலியபெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்னும் எண்ணம் உருவானது. கன்னட எழுத்தாளர் சிவபிரகாஷ் எழுதிய குரு : பழம்பெரும் ஞானத்துக்கான பத்து வாயில்கள் நூல் குறித்து காலையில் எழுதிக் கொண்டிருந்தேன். எழுதி முடிக்க 9.30 மணி ஆயிற்று. காலை உணவருந்தி விட்டு புறப்படுகையில் நேரம் காலை 10 மணி. கோடை அதன் உக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பருவம் என்றாலும் புறப்பாட்டுக்கு மிக உகந்த காலம் இதுவே. சில நாட்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் சற்று உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தற்போது மகள் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் கூறியிருந்தார். அவர் மிகவும் இனிய மனிதர். அமைதியும் பொறுமையும் தன் இயல்பாகக் கொண்டவர். எப்போதும் தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்பவர். மிகக் குறைவாகப் பேசுபவர். எந்த சூழ்நிலையையும் மிக நுணுக்கமாகப் புரிந்து கொள்பவர். அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது. அவரது மகள் வீடு ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கழுவன் தொண்டி என்னும் கிராமம். அரியலூர் பயண மார்க்கத்திலிருந்து சிறிய தூரத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அரியலூர் செல்லும் வழியில் முதலில் அங்கு சென்றேன். எங்கள் பிராந்தியத்தில் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவருக்கு ‘’ஹார்லிக்ஸ்’’ பாட்டில் வழங்குவது வழக்கம். வழக்கம் என்று சொல்கிறேனே தவிர என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் பின்பற்றி நான் பார்த்ததில்லை. 1990களில் ஹார்லிக்ஸ் ஒரு முக்கியமான பானம். எங்கள் பகுதி ஹோட்டல்களில் தேனீர் , காஃபியுடன் ஹார்லிக்ஸ்-ம் இருக்கும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கு வென்னீரில் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுப்பார்கள். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களைச் சந்திக்கும் போது ‘’ஹார்லிக்ஸ்’’ பாட்டில் கொடுப்பார்கள். யாரோ ஒருவர் உடல்நலம் குன்றியிருந்த யாரையோ சந்திக்கும் போது ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். அப்போது நான் உடன் இருந்திருக்கிறேன். எனக்கு அது பிடித்திருந்தது. எனக்கு ஹார்லிக்ஸ் சுவை பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாடிக்கையாக வாங்கும் வழக்கம் இல்லை. கொல்லாபுரத்தில் ஹார்லிக்ஸ் வாங்கிக் கொண்டேன் ; நண்பருக்கு அளிக்க. ஒரு பாட்டில் கொண்டு வந்தார்கள். நண்பரின் வயது 67. அவருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே ‘’ஹார்லிக்ஸ் லைட்’’ தருமாறு சொன்னேன். தற்போது விலை ரூ.300. 1990களில் ரூ.86க்கு ஹார்லிக்ஸ் வாங்கியது என் நினைவுக்கு வந்தது. இவ்விதமான ஒப்பிடல்கள் மத்திய வயதுக்கு வந்து விட்டோம் என்பதற்கான அறிகுறிகள். நண்பரின் வீட்டைக் கண்டறிந்து போய் விட்டேன். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுமாறும் மருத்துவ செலவுகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்குமாறும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன் எனக் கூறினேன். நண்பர் வீட்டில் மோர் தந்தார்கள். அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்திருந்தார்கள். புதுமையான ‘’லஸ்ஸி’’ என நினைத்துக் கொண்டேன். மதிய உணவருந்தி விட்டு செல்லுமாறு வற்புறுத்தினார்கள். அப்போது நேரம் 12.30 . நான் அரியலூர் செல்ல மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவர்களிடம் இன்னொரு நாள் உணவருந்த வருகிறேன் எனக் கூறி விட்டு புறப்பட்டேன். 

நடு நாடு எனக் கூறப்படும் அப்பிராந்தியத்தின் நிலக்காட்சிகள் என்னை எப்போதும் பெரிய அளவில் ஈர்க்கும். ஒவ்வொரு முறை அந்நிலத்தில் பயணிக்கையில் இங்கே 10 ஏக்கர் அல்லது 20 ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு வந்து இந்தப் பிராந்தியத்தில் வாழலாம் எனத் தோன்றும். காவிரிப் பிராந்தியம் முழுக்கவே நெல் வயல்கள். நடுநாட்டில் பலவிதமான பயிர்கள் பயிரிடுவார்கள். மரப்பயிர் அதிகம் இருக்கும் என்பதால் நிலக்காட்சி இனிமையாக இருக்கும். 

மதியம் 1.50 அளவில் கலியபெருமாள் கோயில் சென்று சேர்ந்தேன். அக்கோயில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் கல்லங்குறிச்சி. அரியலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. கோயிலைச் சுற்றி கணிசமான ஆலமரங்களும் அரசமரங்களும் இருந்தன. ஒரு ஆலமரத்தின் விழுது மண்ணைத் தொட்டு அது வேர் போல ஆகி அதிலிருந்து மேலும் விரிவாகியிருந்தது. விழுதாகவும் வேராகவும் இருந்த அதன் மீது படுத்துக் கொண்டேன். என் முழு உடலுக்கும் இடம் கொடுக்கும் அளவு அந்த விழுது நீண்டிருந்தது. எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுக்க தினம் ஒரு ஊரில் தினம் இதைப் போல ஒரு மரத்தின் வேரில் உறங்கிச் செல்லும் வாழ்க்கை அமைந்தால் அதை விட வேறு ஆசி உண்டா என நினைத்தேன். சில மணி நேரம் முன்பு தான் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததையும் இப்போது இவ்விதம் தொன்றுவதையும் எண்ணிப் பார்த்தேன். இரண்டும் ஒன்று தான். இயற்கையிடம் என்னை ஒப்படைத்து விடுதலே இரண்டும். ஒரு மரத்தின் அடியில் படுத்துறங்கும் போது அந்த மரத்துடன் அந்த மண்ணுடன் அந்த மரம் தொட்டுக் கொண்டிருக்கும் விண்ணுடன் எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு உண்டாகிவிடுகிறது. அது மகத்தானது. மாலை 3 மணிக்கு அங்கே மூன்று மணி ஒலித்தது. அது கோயில் திறக்கப்படுவதன் ஒலி. ஆலயத்தினுள் சென்றேன். சிறிய ஆலயம் எனினும் மிகவும் சக்தி மிக்கது என்பதை உணர முடிந்தது. 

250 ஆண்டுகளுக்கு முன் சிதளங்குடி என்னும் ஊரில் கோபால படையாச்சி என்பவர் தம் குடிகளுடனும் குடும்பத்துடனும் வாழ்ந்து வந்தார். பெருவிவசாயியான கோபால படையாச்சி மிக அதிக எண்ணிக்கையில் பசுமாடுகளைப் பராமரித்து வந்தார். ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய அவரது மாடுகளில் சினையுற்றிருந்த ஒரு பசுமாட்டைக் காணவில்லை. பல திசைகளிலும் தேடிப் பார்த்தும் அந்த மாடு கிடைக்கவில்லை. துயரத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி அவரது மாடு இருக்கும் இடத்தைக் காட்டினார். காலை விடிந்ததும் தன் குடும்பத்தினரையும் குடிபடைகளையும் அழைத்துக் கொண்டு கனவில் வந்த பெரியவர் சொன்ன இடத்துக்குச் சென்ற போது மாடு அங்கே இருந்திருக்கிறது. மாட்டுக்கு அருகே ஒரு கம்பம் இருந்திருக்கிறது. அந்தக் கம்பத்தை வணங்கி விட்டு மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அன்று இரவு உறக்கத்தில் கோபால படையாச்சி கனவில் மீண்டும் வந்த பெரியவர் தான் யார் என்பதை உன்னால் உணர முடியவில்லையா எனக் கேட்டு தானே பெருமாள் என்பதைக் கூறியிருக்கிறார். மறுநாள் அங்கே சென்று அந்த கம்பத்தைக் கல்லங்குறிச்சிக்கு கொண்டு வந்து பெருமாள் எழுந்தருளியிருக்கும் கம்பத்தை ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினார் கோபால படையாச்சி. 250 ஆண்டுகளாக கோபால படையாச்சியின் சந்ததிகள் அந்த ஆலய அறங்காவலர்களாக இருந்து பராமரிக்கின்றனர். மூலவர் கம்பமாக நின்றிருக்க உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் அருள் பாலிக்கிறார். 

திருப்பாவையைக் கல்வெட்டாக 1950ம் ஆண்டு எழிலுற வடித்திருந்தார்கள். திருப்பாவை மொத்த 30 பாடல்களையும் 240 வரிகளாக பாராயணம் செய்தால் அந்த 240 வரிகளும் ஒரு மந்திரம் ஆகும் என எண்ணினேன். தமிழில் அதைப் போல பல மந்திரங்களைக் கண்டடைய முடியும். மந்திரம் என்பது ஒலியே. அது மொழியின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பது. 

அங்கேயே இருக்க வேண்டும் என விரும்பினேன் ; ஆயினும் இன்னும் 100 கி.மீ க்கு மேல் பயணித்தால் மட்டுமே வீடடைய முடியும். நேரம் அப்போது மாலை 4.30. நேராக கோயிலுக்கு வந்து மரத்தடியில் படுத்து உறங்கி விட்டதால் மதிய உணவு அருந்தவில்லை. மாலை 5 மணி அளவில் அரியலூர் சென்று ஒரு உணவ்கத்தில் உணவருந்தி விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். 

கோபால படையாச்சி வாழ்ந்த ஊரின் பெயர் கோபாலன் குடிகாடு. அது மருவி ‘’கோப்பிலன்குடிகாடு’’ என்றாகி விட்டது. அந்த ஊருக்கு கோபாலன் குடிகாடு எனப் பெயரிடுவது கோபால படையாச்சிக்கு சமூகம் செய்யும் மரியாதையாக இருக்கும் என எண்ணினேன். மாநில வருவாய்த்துறை அமைச்சருக்கு இந்த விஷயம் குறித்து ஒரு மனு அனுப்ப வேண்டும் என எண்ணினேன். 

நாள் முழுக்க பெருமாள் கோயிலில் இருந்ததால் நாங்கூர் திவ்யதேசங்கள் அனைத்தையும் இணைக்கும் விதமாக ‘’நாங்கூர் பரிக்ரமா’’ ஒன்றை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கோரி ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு மனு அனுப்ப வேண்டும் என எண்ணினேன். 

அந்திப் பொழுதில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அரியலூர் அருகே நெடுஞ்சாலை அருகே இருந்த வீடொன்றின் முன் வாகனத்தை நிறுத்தினேன். குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டேன். வாசலில் அந்த வீடு பக்கத்து வீடு என பல குழந்தைகள் இருந்தன. அனைத்துக் குழந்தைகளும் 7 வயதிலிருந்து 9 வயது வரை ஆனவை. ‘’உங்களுக்கெல்லாம் எப்போ ஸ்கூல் ரீ ஓபனிங்’’ எனக் கேட்டேன். அனைத்தும் கோரஸாக ஜூன் 1 என்றன. அரசாங்கம் வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் 5ம் தேதி தான் ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க; நீங்க கேக்கலயா? என்றேன். குழந்தைகள் உற்சாகமாகி மகிழ்ச்சிக் கூச்சலிட்டன. அதற்குள் ஒரு சிறுவன் ஜூன் 5ம் தேதி என்ன நாள் எனப் பார்த்து அன்று வெள்ளிக்கிழமை என்றான். ஸ்கூல் ஆரம்பிச்ச அடுத்த ரெண்டு நாள் லீவு என குழந்தைகள் ஆர்ப்பரித்தன. ஒரு சிறுவன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். முழுதும் குடித்து விட்டு மேலும் வேண்டும் எனக் கேட்டேன். கொண்டு வந்தான். அதையும் முழுக்கக் குடித்தேன். தாகம் அவ்வளவு இருந்தது. 

பயணிக்கத் தொடங்கினேன். அப்போது என் மனதில் ஒரு காட்சி பளிச்சிட்டது. அதாவது கிழக்கே சிதம்பரம் மேற்கே திருச்சிராப்பள்ளி. சிதம்பரத்துக்கு நேர் வடக்கே சென்னை. திருச்சிக்கு நேர் வடக்கே வேலூர். இந்த நான்கு ஊர்களுக்கும் நடுவே இருக்கும் பெரும் பரப்பை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் சோழர்களுக்கு இருந்திருக்கிறது. அதன் துவக்கம் ராஜேந்திர சோழன். பழைய தென்னாற்காடு திருச்சி செங்கல்பட்டு வடார்க்காடு மாவட்டங்களாகும் அவை. இந்த பரப்பில் விவசாயத்தை குளங்கள் மூலமும் ஏரிகள் மூலம் செழிக்கச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு ராஜேந்திர சோழனுக்கு இருந்திருக்கிறது. இவை அனைத்துமே மனித உழைப்பால் உருவாக வேண்டியது. மனித உழைப்பை மிக அதிக அளவில் ஒருங்கிணைத்து அடைய வேண்டியது. நதிக்கரைகளையே மனிதர்கள் தன்னியல்பில் விரும்புகின்றனர். சாமானிய குடிகளால் கடும் உழைப்பை அளித்து நிர்மாணிக்கும் விஷயங்கள் மீது பேரார்வம் கொள்ள முடியவில்லை. இந்த மனப்பதிவை உறுதிப்படுத்தும் சிந்தனைகளே மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருந்தன. முக்கியமான ஒன்றை என் அகம் தொட்டுணர்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன். பயணம் எனக்களிக்கும் கொடைகளில் இதுவும் ஒன்று. 

விடுதலையின் பற்பல வாசல்கள்


நூல் : குரு: பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் ஆசிரியர் : ஹெச்.எஸ். சிவபிரகாஷ் தமிழில் : ஆனந்த் ஸ்ரீநிவாசன் பக்கம் : 112 விலை : ரூ.130 பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம், 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், சென்னை -77.     

பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாக அகவிடுதலை அடைந்த ஆயிரக்கணக்கான யோகிகளின் ஞானிகளின் நாடு. இன்றும் இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருவனும் ஒரு பகலில் நடந்து செல்லக்கூடிய பொழுதில் அல்லது ஒரு பகலின் பாதி பொழுதில் நடந்து செல்லக்கூடிய தொலைவில் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்த மண் இருந்து கொண்டு இருக்கிறது. இன்றும் இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே யாவற்றையும் துறந்து சென்று விட்டு விடுதலையாகி நிற்கும் நிலை மீது ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. இந்த மண்ணில் அறிவர் ஆவது குறித்து எண்ணாதவர் குறைவு. 

புடவி கோடானுகோடி உயிர்களால் ஆனது. அந்த உயிர்கள் பிரும்மம் அவற்றுக்களித்திருக்கும் எல்லைக்குள் வாழ்கின்றன. மனிதப் பிறவிக்கு  எல்லைகளை அளித்த பிரும்மம் அந்த எல்லைகளை மீறிச் சென்று பிரும்மமாகவே ஆகும் சாத்தியத்தையும் அளித்தது. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே ஒரு நூற்றாண்டுக்கு ஒருவரே மனிதன் பிரும்மமாக ஆகும் சாத்தியத்தை அடைகின்றனர். அவர்களின் வாழ்வும் இருப்பும் மனிதர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுகிறது. கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ரமணர், நாராயண குரு... என அந்நிரை பெரியது. அந்நிரையில் அந்த பெரும் ஆசிரியர்களின் மாணாக்கர்களாய் அமைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரியது. 

மானுடன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் ஆன்ம உணர்வு மானுட குலத்துடன் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது அல்லது சிந்தித்த முதல் மனிதன் அடைந்த பேருணர்வாக ஆன்ம உணர்வு இருந்திருக்கக் கூடும். மானுடன் சமூகமாக உருவாகி அதன் நற்பயன்களை அடையத் தொடங்கினான். மானுடன் எவராயினும் அவர்தம் வாழ்நாள் ஒருநாள் முடிவுக்கு வருவதைக் கண்டான். இறைவர்கள் இறங்கி அருளும் பூசகனும் ஒருநாள் மரணிப்பதை சமூகங்களைக் கட்டியாளும் மன்னர்களும் ஒருநாள் மரணிப்பதை மனிதன் காண்கிறான். அந்த மரணம் உணர்த்தும் நிலையாமையை கண் கொண்டு எதிர்கொள்ள எல்லா மானுடருக்கும் திறனில்லை. மனிதனை அச்சுறுத்தும் ஒன்றாகவே மரணம் எப்போதும் அவனுக்கு இருந்தது. மரணத்தைப் புரிந்து கொள்ள மரணத்தை எதிர் கொள்ள மனிதர்கள் பொருளைச் சேகரிக்கத் தொடங்கினர் ; உறவுகளை மேலும் மேலும் என அதிகமாக்கிக் கொண்டனர். பிறர் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை அதிகரிக்கத் தொடங்கினர். இவை அனைத்தும் எதிர் திசைப் பயணங்கள். மானுடர் இதனை யுகம் யுகமாக நூற்றாண்டுகளாக இதனை மேற்கொண்டவாறே இருக்கின்றனர். செல்ல வேண்டிய திசைக்கு அடைய வேண்டிய திசைக்கு நேர் எதிர் திசையில் மேற்கொள்ளும் இப்பயணங்கள் அளிக்கும் துயரை வாழ்நாள் முழுக்க சுமக்கின்றனர் மானுடர். 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு மானுட குலத்தின் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனை விடவும் புறவயமான வசதிகள் அதிகம் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. மானுட சமூகத்தின் கணிசமான நாடுகளில் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் ஆகியிருக்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் முழுவதும் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த மானுட சமூகங்கள் இன்று உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் அளவுக்கு ஜனநாயகத்துக்கு வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் உலகம் கண்ட இரண்டு பெரும்போர்கள் அளவுக்கு இன்று இல்லை என்றாலும் உலகில் எங்கேனும் ஒரு பகுதியில் போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.மனிதர்களின் நுகர்வு ஏதோ ஒருவகையில் உலகின் ஒவ்வொரு மனிதனையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கிறது. இன்றைய மனிதன் ஆளாகும் அக அழுத்தம் அளவுக்கு என்றுமே மனித குலம் அக அழுத்தங்களுக்கு ஆளானது இல்லை. இன்றைய மனிதனுக்கு ஆன்மீகம் சாத்தியமா என்னும் கேள்வி இல்லாத மனிதர்களே இல்லை. 

உலகின் எந்த காலகட்டதையும் விட இந்த காலகட்டத்தில் ஆன்மீகம் மனிதனுக்கு விடுதலை அளிக்கும் சாத்தியம் மிக அதிகம். ஆன்மீகம் மனிதனுக்கு அளிக்கும் விடுதலை என்னும் சாத்தியம் மாறிலியாகவே இருக்கிறது. அப்பாதையைத் தேர்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவோ கூடுதலாகவோ இருந்திருக்கிறதே தவிர ஆன்மீகம் மாற்றம் அடையாமல் இருக்கிறது. மனிதர்கள் அணுகும் விதங்கள் கூடியிருக்கின்றன. 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் மனிதனுக்கு உணவுப் பற்றாக்குறை தீர்ந்துள்ளது. வெவ்வேறு விதமான உபகரணங்கள் அவனது உடல் உழைப்பைக் குறைத்துள்ளன. அவன் ஈட்டும் செல்வம் எண்மங்களாக சேமிக்கப்படுகின்றன. ஆயினும் மனிதனைப் பயமும் பதட்டமும் சூழ்ந்துள்ளது. அவன் மனதை நுகர்வு வியாபித்திருக்கிறது. அது அளிக்கும் அழுத்தத்தை அவனால் தாங்க முடியவில்லை. அவனது சக மனிதர்களுக்கும் அதே நிலை. இன்றைய நிலையில் 3000 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆன்மீக மரபுகளால் அவனுக்கு என்ன அளிக்க முடியும் என்பது இக்காலகட்டத்தின் பெரும் கேள்விகளில் ஒன்று. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவபிரகாஷ் எழுதியிருக்கும் ‘’குரு : பழம்பெரும் ஞானத்துக்கான பத்து வாயில்கள்’’ என்னும் நூல் இக்கேள்விக்கான பதில்களை மானுடம் முன் வைக்கிறது. 

அஷ்டாங்க யோகம் யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, திருஷ்டி, சமாதி என யோக வழிமுறையின் எட்டு அங்கங்களை எடுத்துரைக்கிறது. யமம் என்பது யோக சாதகன் கொண்டிருக்க வேண்டிய இயல்பான அகநிலையைக் குறிப்பது. நியமம் என்பது அவன் மேற்கொள்ள வேண்டிய அகஒழுங்கைக் குறிப்பது. உடலை யோக சாதனத்துக்கான உபகரணமாக ஆக்கிக் கொள்வதைக் குறிப்பது ஆசனங்கள். இயல்பான அகநிலையும் அகஒழுங்கும் யோகம் கோரும் குறைந்தபட்ச உடல்வலிமையும் கொண்டவர்கள் தங்கள் மூச்சின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் ஆளுகை குறித்துப் பேசுவது பிராணாயாமம். இருபத்து ஓராம் நூற்றாண்டின் மனிதன் தற்போது இருபதாம் நூற்றாண்டு வரை மானுடர்கள் கொண்டிருந்த சராசரி சாமானிய உடல் உழைப்பு கூட இல்லாமல் இருக்கிறான். அவன் நடந்து செல்ல வேண்டிய அவசியம் மிக மிகக் குறைந்து விட்டது. நூறு அடி தூரத்தைக் கூட பெட்ரோல் வாகனம் மூலம் கடக்கிறான். எப்போதும் கணினி முன்னும் அலைபேசி முன்னும் அமர்ந்தேயிருக்கிறான். அவன் அகத்தை நுகர்வும் வேட்கையும் பூசல்களும் வியாபித்திருக்கின்றன. இத்தகைய இயல்பு கொண்ட ஒருவன் ‘’யமம்’’ என்னும் நிலையை முழுதாக எய்தவே முழு வாழ்நாளும் தேவைப்படும். அவ்வாறெனில் இன்றைய மனிதன் ஆன்மீகப் பாதையில் அதன் உப பாதைகளில் ஒன்றான யோகப் பாதையில் செல்வது எங்கனம் என்னும் கேள்வி எல்லார் மனத்திலும் இருக்கும் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதிலை ஆன்மீகப் பாதையின் வேறொரு சிறு சாத்தியம் ஒன்றை கன்னட எழுத்தாளர் சிவப்பிரகாஷ் ‘’குரு : பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள் ‘’ நூலில் சுட்டிக்காட்டுகிறார். 

நவீன மனிதனுக்கு ஞானத்தை பத்து தனி வாயில்கள் கொண்ட பிரதேசமாக உருவகித்துக் கூறுகிறார். இந்த வாயில்கள் தனித்தனி அல்ல என்பதைத் தெரிவித்தாலும் அவற்றைத் தனித்தனி வாயில்களாகக் கூட சாதகன் அணுக முடியும் என்பதைக் காட்டுகிறார். 

குரு என்பது ஒரு வாயில். சீடன் அல்லது சாதகன் தன்னை எந்த அளவு திறந்து வைத்திருக்கிறான் என்பதே அவன் குருவை அடைவதற்கான அளவுகோல். மனித வடிவில் குருவைக் கண்டவர்கள் உண்டு ; அடைந்தவர்கள் உண்டு. இயற்கையின் வடிவில் குருவைக் கண்டவர்கள் உண்டு. மந்திர ரூபமாகவும் குருவைக் காண முடியும் ; அடைய முடியும். இவை சாத்தியக்கூறுகள். இந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்னும் காரணத்துக்காகவே குருவைத் தேட எண்ணும் ஒவ்வொருவரும் குருவை அடைந்து விடுவர் என்னும் நிபந்தனை இல்லை. மனிதன் ஒருவன் சீடன் ஒருவன் குருவுக்கான தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதற்கான சாத்தியங்களே  அவை. மனிதனின் சீடனின் தேடலின் தீவிரம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அதைப் பொறுத்து அவன் குருவைக் கண்டடைவான் ; மந்திர ரூபமாகவோ - இயற்கையாகவோ - மானுட வடிவிலோ. சிவபிரகாஷின் நூல் இந்த சாத்தியத்தைக் காட்டுகிறது. 

மந்திரம் என்னும் இரண்டாம் வாயிலைக் காட்டுகிறார் சிவபிரகாஷ். இயற்கையை நாமரூபங்களாகவே நம் மனம் அறிகிறது. ரூபங்களாலும் நாமங்களாலும் ஆனது நம் மனம். நம் மனதின் ஆழங்களை உயரங்களை முற்றறிய நமக்குத் துணை புரிவது மந்திரம். மந்திரம் குருவாக மாறி மனிதனுக்கு துணை நிற்பதுண்டு ; விடுதலை அளிப்பதுண்டு என்னும் சாத்தியத்தை சிவபிரகாஷ் கூறுகிறார். எந்த மந்திரம் விடுதலை அளிக்கும் மந்திரம் என்பது மனிதனுக்கு உடனே எழும் கேள்வி. அது மந்திரத்தைப் பொறுத்ததல்ல - மனிதனைப் பொறுத்தது என்பதே அக்கேள்விக்கான பதில். 

நமது தொன்ம மரபு முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கின்றன என்கிறது. இனியும் கூட புதிய தெய்வங்கள் பிறந்து வரக்கூடும். ஒவ்வொரு மனிதனும் கூட தனக்கான தெய்வத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும். தான் உருவாக்கும் தெய்வம் ஒரு மாயக்கணத்தில் பிரபஞ்சப் பெருநியதியின் ஒழுங்குடன் ஒத்திசைந்து விடுகிறது. தான் உருவாக்கிய தெய்வத்தின் மூலமே அந்த ஒழுங்கையும் ஒத்திசைவையும் மனிதன் அல்லது சாதகன் தேடும் தேடிக் கண்டடையும் சாத்தியம் குறித்து பேசுகிறது நூலின் தெய்வம் என்னும் வாயில். 

மனித உடல் மூலமாக ஆன்மீக உணர்வை அடைய முடியும். உடலை வலிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பிரபஞ்சப் பெருநியதியின் ஒழுங்கை உடல் இயக்கம் மூலமே கூட உணர முடியும் என்னும் சாத்தியத்தை உடல் என்னும் வாயில் பேசுகிறது. 

நவீன வாழ்க்கை மனதுக்கு மனதின் சௌகர்யங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயல்பினை சூடத் தொடங்கி விட்டது. உடல் மனத்தை சுமக்கும் அடிமையாகி விட்டது. இருப்பினும் பிராணன் இல்லையென்றால் உடலும் மனமும் தனித்தனியாகி விடும். கோடானுகோடி மனிதருக்கு மரணத்தறுவாயில் மட்டுமே பிராணன் குறித்த பிரக்ஞையே வருகிறது. சில கணங்கள் மட்டுமே நீடித்து ஆயுள் முடிவுக்கு வருகிறது. பிராணன் குறித்த பிரக்ஞையை மனிதன் பிராணனை அவதானிப்பதன் மூலம் அடைய முடியும். அதன் மூலம் ஆன்மீக அறிதலை அடைய முடியும் என்னும் சாத்தியத்தைக் காட்டுகிறது பிராணன் என்னும் வாயில். 

மனிதர்களை அடிமையாக்கும் மனத்தை மனிதனால் அடிமையாக்க முடியும். தன்னை வெல்லுதலே பெரிய இறுதி வெற்றி. மனம் என்னும் வாயில் என்னும் அத்தியாயம் காட்டும் சாத்தியமாகும் இது. காமமும் செயல்களும் படைப்புத்திறனும் கூட வேறு வாயில்கள் என்பதைக் காட்டுகிறார் சிவபிரகாஷ். 

அந்த வாயில்கள் மூடிய வாயில்கள் அல்ல. அவை எப்போதும் திறந்தே இருக்கும் வாயில்கள். எனினும் கோடானுகோடி பேர் அதில் நுழைய உளம் கொண்டாலும் ஓரிருவரே அந்த வாயில்களைக் கடந்து செல்கின்றனர். அது ஏன் என்பது அனைவரும் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. அதற்கான பதில் என்பது அது வாயில்கள் தொடர்பானது அல்ல கடந்து செல்லும் மனிதனைக் குறித்தது என்பதே அதன் பதில்.  

ஒன்று இரண்டு மூன்று என ஒவ்வொரு வாயிலாகக் கடக்க வேண்டும் என்னும் முறைக்கு சிவபிரகாஷ் சிறு தளர்வு அளிக்கும் வழிமுறையைக் காட்டுகிறார். ஐந்து ஏழு மூன்று ஒன்று எனக்கூட சென்று பார்க்க முடியும் என்கிறார். ஊழ் முதல் படியில் கூட யோகியர் பலருக்கும் ஞானியர் பலருக்கும் முக்தியை அளித்திருக்கிறது என்பதை மானுட குலம் பழம்பெரும் ஞானத்தின் அருளையும் ஆசியையும் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் தனது நூலாக அளித்திருக்கிறார் சிவபிரகாஷ். 

சிந்திக்கும் இயல்பு கொண்ட கற்பனைத் திறன் கொண்ட மனிதருக்கு ஆன்மீகப் பாதை குறித்த முக்கியமான நூலாகவும் அவர்கள் வாழ்க்கையை உணரும் விதத்தில் அறியும் விதத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் நூலாகவும் இந்நூல் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

Saturday, 23 May 2026

முக்கியத்துவம் பெறும் ஆளுநர்

இந்திய அரசியல் அமைப்பில் மாநில ஆளுநர் பதவிக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் மாநில ஆளுநர் மாநிலத்தில் மாநில அரசு இயங்குமுறை குறித்து அளிக்கும் அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. மாநில நடப்புகள் குறித்து ஆளுநரின் மக்கள் மாளிகை தயாரித்து அளிக்கும் அறிக்கைகள் மிக முக்கிய ஆவணங்கள் ஆகும். இந்திய அரசியல் சாசனம் பல விஷயங்களில் குடியரசுத் தலைவருக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை விடவும் அதிகமாக ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது. 

2021லிருந்து 2026 வரை நடைபெற்ற ஆட்சியில் மாநில ஆளுநர் பலவிதங்களில் முறையான மதிப்பு அளிக்கப்படாமல் இருந்தார். ஆளுநரின் பல சாதாரணமான பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் இருந்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது உரை துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் கோரினார். பல கடித போக்குவரத்துக்குப் பின் அது சாத்தியமானது. மகாத்மா காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி கிண்டியில் உள்ள பெரும் வளாகமான காந்தி மண்டபத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்படவேயில்லை. ஆளுநர் உரை ஒன்றின் போது சட்டசபை சபாநாயகரும் மாநில அரசின் உயர்கல்வி அமைச்சரும் ஆளுநரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர். மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவருக்கும் இந்நிகழ்வுகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின. 

1996ம் ஆண்டு வரை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு இந்திய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் பெரும் சீர்கேடுகள் இருப்பதாக மத்திய அரசு எண்ணினாலோ மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தாலோ ஆளுநரின் பரிந்துரைப்படியோ ஆளுநர் பரிந்துரை இல்லாமலோ கூட மத்திய அரசு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய முடியும். 

1994ம் ஆண்டின் எஸ். ஆர்.பொம்மை வழக்கின் படி, உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 356வது சட்டப் பிரிவின் படி மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, மாநில அரசைக் கலைத்ததை ஒரு தீர்மானமாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாதி உறுப்பினர்கள் ஆதரவுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். 1996க்குப் பின் பதவியேற்ற பல மத்திய அரசுகளிடம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டிலும் பெரும்பான்மை இல்லை. எனவே அரசியல் சாசனப் பிரிவு 356ன் பயன்பாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போதைய மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் எந்த மாநில நிர்வாகமும் சீராக இருக்கிறதா என்பதையும் எந்த மாநில சட்டம் ஒழுங்கும் அமைதியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும்  மாநில நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கும் தன்மை மேலும் கூடுதலாக மத்திய அரசுக்கு இருக்கிறது ; மாநில ஆளுநருக்கும் இருக்கிறது. 

மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் மாநில ஆளுநரின் பணி என்பதும் மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அளிக்கும் அறிக்கைகள் என்பதும் மாநில அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதனைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

Friday, 22 May 2026

ஒரு சாமானிய பிரஜையின் தேவை

சென்ற மாதம் நண்பர் ஒருவர் என்னைத் தனது வாகனத்தின் சீட் கவர் மாற்ற உடன் அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் இருந்த பணியாளருக்கு நிலுவையில் பல வாகனங்கள் இருந்தன. எனவே 2 நாட்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொண்டார். நண்பருக்கு அவசரம். மறுநாளே தேவைப்பட்டது. தனது தேவையை பணியாளரிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் நண்பர் பணி புரியும் ஐ டி நிறுவனத்திடமிருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது. தொழில்நுட்ப விபரங்களைத் தெரிவித்த படி நண்பர் அலைபேசி அழைப்புக்குள் மூழ்கி சீட் கவர் கடையிலிருந்து சற்று தள்ளிப் போனார். சிக்னல் மேலும் தெளிவாகக் கிடைக்கும் இடத்துக்கு அவர் சென்றிருக்கலாம். அப்போது இன்னும் சில நாட்களில் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்தது. சீட் கவர் கடையின் பணியாளரிடம் பேச்சு கொடுத்தேன். 

‘’என்ன அண்ணன்! எலெக்‌ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு முடிவு செஞ்சுருப்பீங்க’’

‘’இன்னும் அதப்பத்தி யோசிக்கல சார்’’

‘’இன்னும் ரெண்டு மூணு நாள்ல எலெக்‌ஷன் அண்ணன்’’

‘’ஆமாம் சார்’’ 

‘’கவர்மெண்ட் கொடுக்கற ஃபண்ட் உங்க வீட்டுக்கு கிடைக்கதுல்ல. நிறைய ஸ்கீம் இருக்கே. காலேஜ் படிக்கற குழந்தைகளுக்கு. வீட்டுல இருக்கற பெண்களுக்கு. நிறைய எய்ட் இருக்கே. வந்துட்டு இருக்குல்ல’’

‘’சார் ! கவர்மெண்டோட எந்த ஃபண்டும் எங்க வீட்டுக்கு வரதுல்ல?’’

‘’ஏன்?’’ அதிர்ச்சியுடன் கேட்டேன். 

‘’எங்க வீட்டுக்கு அரிசி ரேஷன் கார்டு இல்ல. ஜீனி ரேஷன் கார்டுதான் இருக்கு. அரிசி கார்டு இருக்கறவங்களுக்குதான் ஃபண்டு கிடைக்கும். ஜீனி கார்டுக்கு கிடையாது’’ 

‘’உங்களுக்கு எப்படி ஜீனி கார்டு கிடைச்சுது’’

‘’தெரியல சார். ரேஷன் கார்டு அரிசி கார்டுதான் அப்ளை செஞ்சன். ஆனா எனக்குக் கிடைச்சது ஜீனி கார்டு’’

‘’உங்க கிட்ட ஓட்டு கேட்டு பிரதானமா 3 குரூப் வந்திருப்பாங்கள்ல அவங்க கிட்ட உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னீங்களா?’’

பணியாளர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். 

‘’இப்ப தேர்தல் நடைமுறை அமல்ல இருக்கு. மே 4ம் தேதி ரிசல்ட். ரிசல்ட் வந்தப்புறம் கவர்மெண்ட் மெஷினரி வேலை செய்ய ஆரம்பிக்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைல 10 மணிக்கு கலெக்டர் ஆஃபிஸ்ல மனுநீதி நாள் நடக்கும். அங்க போயி உங்க பிரச்சனையை சொல்லி மனு கொடுப்போம். அவங்க ஒரு நம்பர் கொடுப்பாங்க. 3 மாசத்துக்குள்ள உங்க பிரச்சனையை சால்வ் பண்ணுவாங்க. அப்படி இல்லன்னா அடுத்து என்ன செய்யறதுன்னும் யோசிப்போம். அடுத்த மாசம் நான் உங்க கடைக்கு வரேன். ஒரு மனு எழுதித் தரேன். மனுநீதி நாளுக்கு கூட வரன். என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு அரிசி கார்டு கிடைக்க முயற்சி செய்யறன்’’

அதற்குள் நண்பர் வந்து விட்டார். தீவிரமாக நானும் பணியாளரும் உரையாடிக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார். 

4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தன. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தது. பதவியேற்பு தொடர்பான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. மே 11ம் தேதி எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனுநீதி நாள் தொடங்கும் என ஆகாஷ்வாணி வானொலி செய்தி கூறியது. எனக்கு சீட் கடை பணியாளரின் நினைவு வந்தது. 

நேற்று அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் என்னை மறந்திருந்தார். ஜீனி கார்டு அரிசி கார்டு எனக் கூறியதும் அவருக்கு நினைவு வந்தது. 

ஒரு வெள்ளைக்காகிதத்தில் அவருடைய கோரிக்கையை மனுவாக எழுதினேன். இப்போதிருக்கும் ரேஷன் கார்டு எண் என்ன என்று கேட்டேன். அவர் வீட்டில் பார்த்து வருகிறேன் என்றார். நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன். 

ரேஷன் கார்டு துறையின் இணையதளத்தில் ஏதேனும் விபரம் இருக்கிறதா எனக் காண அவருடைய ஸ்மார்ட்ஃபோனை வாங்கி கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்போது அவருடைய ஸ்கிரீன்சேவரில் தற்போதைய தமிழக முதலமைச்சரின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.    

ஒரு நூல் குறித்த நினைவு

காலச்சுவடு கட்டுரை ஒன்றின் மூலம் அறிமுகமான பெயர் ராமச்சந்திர குகா. அந்தக் கட்டுரையை எழுதியவர் பி.ஏ. கிருஷ்ணன். ஆண்டு 2003. அப்போது வெளியாகியிருந்த பி.ஏ. கிருஷ்ணனின் ‘’புலிநகக்கொன்றை’’ நாவலை வாசித்து அதன்பால் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருந்தேன். அந்த ஈர்ப்பின் காரணமாக பி ஏ கே அறிமுகம் செய்த எழுத்தாளரான ராமச்சந்திர குகாவின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. தி ஹிண்டு பத்திரிக்கையில் வெள்ளிக்கிழமையன்று ராமச்சந்திர குகாவின் ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ என்னும் நூல் வெளியாகியிருக்கிறது என்னும் செய்தி வெளியானது. காலையில் அந்த செய்தியை வாசித்ததும் சென்னையில் இருந்த பிரபலமான ஆங்கிலப் புத்தகக் கடைக்கு காலை 10 மணி அளவில் ஃபோன் செய்து ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ நூல் அவர்களிடம் இருக்கிறதா எனக் கேட்டேன். அவர்கள் இருக்கிறது என பதில் கூறினார்கள்.  சென்னையில் எனது நண்பரான எனது ஊர்க்காரர் இருந்தார். அவருக்கு ஃபோன் செய்து புத்தகக் கடையைக் கூறி புத்தகத்தின் பெயரையும் கூறி இந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ; ஊருக்கு வரும் போது கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். நண்பர் வாங்கி வைத்துக் கொண்டார். பத்து நாள் கழித்து வருவதாயிருந்தவர் எதிர்பாராத விதமாக ஞாயிறு அன்று காலையே ஊருக்கு வந்து விட்டார். எனக்கு ஃபோன் செய்தார். நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து நூலை பெற்றுக் கொண்டேன். வீட்டுக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் சுவாரசியமாயிருந்தது. அன்று முழுக்க வாசித்தேன். அடுத்த நாளும் வாசித்தேன். செவ்வாய்க்கிழமை அன்று முழுமையாக வாசித்து முடித்து விட்டேன். அந்தப் புத்தகம் 800 பக்கங்களுக்கு மேல் கொண்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மிக ஆர்வமாக வாசித்தது ஆச்சர்யமானது. தி ஹிண்டு பத்திரிக்கையில் புதன்கிழமை காலை அந்தப் புத்தகத்துக்கு ‘’புக் ரிவியூ’’ வந்தது. நூல் வெளியான செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. நூல் ‘’புக் ரிவியூ’’ வந்தது புதன்கிழமை. இந்த இடைவெளிக்குள் அந்த நூலை முழுக்க வாசித்து முடித்து விட்டேன் என்பது இன்று நினைத்தாலும் சந்தோஷம் தருவது.  

Thursday, 21 May 2026

கூட்டணி மந்திரிசபை

நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கூட்டணி மந்திரிசபை அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது ; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் தமிழகத்தில் இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்து அது பல முனைகள் கொண்டதாக மாறத் துவங்கியிருப்பதன் துவக்கமே இந்த கூட்டணி மந்திரிசபை எனக் காண்கிறேன்.  

தேசியக் கட்சியான காங்கிரஸ் 60 ஆண்டுகளில் முதல்முறையாக மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறது. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் இனி முக்கியமான இடம் வகிக்கப் போகின்றன என்பதற்கான துவக்க நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும். பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய்வை தமிழகத்தில் இருக்கும் பிற தேசியக் கட்சிகள். 

இந்த மந்திரிசபையில் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் மந்திரிகளாகியிருக்கின்றனர். எந்த அரசியல் கட்சிக்கும் உழைப்பை நல்குபவர்கள் பட்டியல் சாதியினரே. தமிழக அரசியல் சூழலில் வாக்களிப்பதை முக்கிய ஜனநாயகக் கடமையாக எண்ணி மிக அதிக அளவில் வாக்களிப்பவர்களும் பட்டியல் சாதியினரே.தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியமைப்பதற்கும் அடிப்படையாக அமைவது பட்டியல் சாதியினரின் வாக்குகளே. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மந்திரிசபையில் இடம் தரப்பட்டுள்ளது. இம்முறை பட்டியல் சாதியினருக்கு தமிழக மந்திரிசபையில் 20 சதவீதம் இடம் தரப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மகிழ்வளிக்கும் விஷயம் இது. தமிழகத்தின் நிதி அமைச்சராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றிருப்பது மிகச் சிறப்பானது. வேதியர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மந்திரியாகியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இல்லாத நிலை இது. கடந்த 60 ஆண்டுகளில் வேதியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும்  மாநில அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த மந்திரிசபையில் இருவர் மந்திரிகளாகியிருக்கின்றனர்.

புதிய மந்திரிசபைக்கு வாழ்த்துக்கள்.  

பொறி வைத்தது யார்?

அடியேன் செய்தித்தாள் மூலமாக அரசியலை அறியும் சாமானியன் மட்டுமே. தற்போது எல்லா சாமானியர்களைப் போலவும் இணையம் மூலமும் அரசியல் நிகழ்வுகளை அறிகிறேன்.

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியானது. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி 107 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஆளுங்கட்சியாய் இருந்த கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அந்தக் கட்சிக் கூட்டணியிடம் 73 உறுப்பினர்கள் இருந்தனர். அதிலிருந்த ஒரு கட்சி தனிப் பெரும் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்தது. முன்னர் ஆளுங்கட்சியாய் இருந்து பின்னர் எதிர்க்கட்சியாகியிருக்கும் கட்சியின் கூட்டணிக்கு 68 உறுப்பினர்கள் இருந்தனர். மூன்றாவது இடம் வந்த கூட்டணிக்கு 53 உறுப்பினர்கள். 

கூட்டணிகள் ஒருவிதமாக 112, 68, 53 என்றானது. 

ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சி தனது கூட்டணிக் கட்சிகளில் சில மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படாமல் தடுக்கப்பட தமிழக சட்டப்பேரவையின் தனிப்பெரும்கட்சியை ஆதரித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் தங்கள் தயவில் தான் புதிய ஆட்சி நடைபெறுகிறது என்றும் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைத்ததற்குக் காரணமே தங்கள் கட்சிதான் என்றும் கூறினர் ; கூறுகின்றனர். அவர்களின் ராஜதந்திரப் பொறியில் தனிப்பெரும் கட்சி சிக்கியிருக்கிறது என அவர்கள் நினைக்கின்றனர். 

எனக்கு இன்னொரு கோணம் தென்படுகிறது. 

சட்டப்பேரவையின் தனிப்பெரும் கட்சியாகத் தன்னை முன்னிறுத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கோரவில்லை. புதிதாக 5 உறுப்பினர்கள் இருக்கும் கட்சியின் ஆதரவைப் பெற்று 112 என ஆதரவைக் காட்டி உரிமை கோரினர். அதன் பின் தான், ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சியின் கூட்டணிக் கட்சிகள் தனிப்பெரும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல சுற்று பேச்சுக்கள் நடந்தன. சிறு கட்சிகளின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 9. அந்த கட்சிகளில் ஒன்று முதல்வர் பதவி கோரியிருந்தால் கூட அது நிறைவேற வாய்ப்பிருந்தது. குறைந்தபட்சம் அந்த 9 உறுப்பினர்களும் அமைச்சர் பதவி கோரியிருக்க முடியும். தமிழகத்தில் அமைச்சரவையின் உச்சபட்ச எண்ணிக்கை 31. மொத்த மந்திரி பதவிகள் 31ல் கூட்டணிக் கட்சிகளுக்கு 9 என்பது மிகவும் கூடுதலான எண்ணிக்கை அல்ல. ஆனால் அவர்கள் எதையும் கோராமல் ஆதரவு தர முன்வந்தனர். மூன்றாவது இடம் வந்திருக்கும் கட்சியுடன் உடன்பாடு செய்து கொண்டு விடுவார்களோ அல்லது அந்தக் கட்சியை உடைத்து விடுவார்களோ என அவர்கள் எண்ணியிருக்கலாம். 

நாட்கள் நகர்ந்தன. நான்கு கட்சிகளின் 9 உறுப்பினர்களும் எந்த கோரிக்கையையும் பொதுவில் வெளிப்படுத்தாமல் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். மூன்றாவதாக வந்த கட்சி பிளவுபட்டிருக்கிறது. அதில் 25 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறெனில் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 209 என்றாகும். அதில் 105 உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கு பெரும்பான்மையே கிடைத்து விடும். அந்த 25 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து அதில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மையே கிடைத்து விடும். எந்த கட்சிக்கும் கூட்டணி மந்திரி சபையில் இடம் தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. 

இப்போது எழும் கேள்வி : பொறி வைத்தது யார்? யார் பொறியில் யார் சிக்கியிருக்கிறார்கள் ?     

Wednesday, 20 May 2026

குலைவும் மீட்பும்

இன்று மதியம் 11 மணிக்கு அருந்திய ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மாலை கடுமையான வாந்தி. அதன் பின் அப்படியே உறங்கி விட்டேன். மாலை எழுந்ததும் உடல்நிலை பரவாயில்லை என இருந்தது ஆனால் வீட்டு வாசல் வரை சென்றாலே மயக்கம் வருவது போல் இருந்தது. வீட்டில் அனைவரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.  

நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிரெட் பாக்கெட் ஒன்றும் ஓ ஆர் எஸ் பொட்டலம் 5ம் வாங்கி வர சொன்னேன். அவர் 30 நிமிடத்துக்குள் தன் பணியாளரை அனுப்பி என் கைக்கு சேர்ப்பித்தார். இன்னொரு நண்பர் பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார் எனக்கு உதவுவதற்காக. 

ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசல் குடித்ததும் உடல் சற்று தெம்பாக இருந்தது. பால் ஊற்றி 2 அல்லது 3 பிரட் மட்டும் தான் சாப்பிட முடிந்தது. 

தண்ணீர் பாட்டிலில் ஓ ஆர் எஸ் கரைசலை கரைத்து வைத்து விட்டு நண்பர் சென்றார். 

உடல்நலம் மீண்டது. 

இரு எஜமானர்கள்

ஆங்கில மொழியில் ஒரு சொல் உண்டு : ஒரு பணியாளன் இரு எஜமானர்களிடம் பணியாற்ற முடியாது என. அடியேன் கட்டுமானத் துறையில் இருப்பவன். எங்கள் பணியிடத்தில் 10 லிருந்து 50 பேர் வரை பணி புரிவார்கள். பணியாளர் எத்தனை பேர் இருந்தாலும் பணிக்குறிப்பை அளிப்பவர் ஒருவர் தான் இருக்க வேண்டும். இருவர் பணிக்குறிப்பை அளித்தால் பணியிடத்தில் பணி முன்னேற்றம் இருக்காது ; விதவிதமான சிக்கல்தான் இருக்கும்.  

இந்திய அரசியலில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்கம் இருக்கிறது. உறுப்பினர்களைக் கொண்ட அர்சியல் கட்சிகள் இருக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அடையும் அதிகாரம் அரசியல் கட்சியால் என எண்ண முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவது அதிகாரவர்க்கமே. ஒருவர் அரசியல் அதிகாரம் பெற்றால் அவரை அரசாங்கத்தின் விதிகளே ஆளும். 

எனவே தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தின் முன் ஒரு முகமும் தங்கள் அரசியலுக்கு ஒரு முகமும் கொள்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் செயலாற்றுகின்றனர். 

சில ராஜதந்திரிகள் மட்டுமே கட்சி, அதிகாரவர்க்கம் இரண்டுக்கும் இடையே நுணுக்கமான சமநிலையைக் கொண்டு வருகின்றனர். 

Tuesday, 19 May 2026

மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொருள் (நகைச்சுவைக் கட்டுரை)


சென்ற வாரம் ஒரு பொருளை வாங்க நினைத்தேன். ஒரு பொருளை வாங்க வேண்டும் என நான் நினைப்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும். நினைத்ததை வாங்க மேலும் பல ஆண்டுகள் ஆகும்.  இணையத்தில் தேடி ஒரு பொருளைக் கண்டடைந்தேன். அதன் பெயர் ‘’ஃபாரடே பை’’. இது என்ன செய்யும் என்றால் இதனுள் அலைபேசியை வைத்து விட்டால் அலைபேசிக்கு சிக்னல் ஏதும் வராது. அதனால் அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராது. ஏதாவது பேச வேண்டும் என்றால் ‘’ஃபாரடே பை’’யிலிருந்து ஃபோனை எடுத்துப் பேசி விட்டு மீண்டும் உள்ளே வைத்து விடலாம். 

இப்போதே பெரும்பாலும் எனது அலைபேசியை ‘’சைலண்ட் மோட்’’ல் தான் வைத்திருப்பேன். அதை விடவும் இந்த உபகரணம் மேலும் பயன் தருவதாக இருக்கக் கூடும். 

இந்த ’’ஃபாரடே பை’’ பயன்பாட்டுக்குப் பின் தொழில் நிமித்தம் என்னுடன் பேச வேண்டியவர்களை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 வரை மட்டுமே பேசுமாறு கூறலாம் என இருக்கிறேன். அந்த நேரம் மட்டும் ஃபோன் என்னுடன் இருக்கும். 

இந்த பையை வாங்கிய பின் என்ன யோசிக்கிறேன் என்றால் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஃபோனை ஆன் செய்து வைத்து விட்டு மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாமே இதற்கு ஏன் ஃபாரடே பை வாங்கினோம் என யோசிக்கிறேன். பல நாட்கள் அந்த வேலைநேரத்தில் கூட வெளிஅழைப்புகளை விரும்புவதில்லை. அத்தகைய தருணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இருக்கிறேன்.  

Sunday, 17 May 2026

திங்களைப் போற்றுதும்


 நூல் : ஒரு க்ளாஸ் விஸ்கி ஆசிரியர் : கவிதா சொர்ணவல்லி பக்கம் : 108 விலை : ரூ.165 பதிப்பகம் : வான்கா பதிப்பகம், 10, கோபாலபுரம் விரிவு, வடவள்ளி, கோயம்புத்தூர். மின்னஞ்சல் : booksellersvangogh(at) gmail (dot)com  

     நமது மரபு வாழ்வின் அடிப்படை உறுதிப்பாடுகளாக தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சத்தைக் கூறுகிறது. அறம், பொருள், இனிமை மற்றும் வீடுபேறு எனத் தமிழ் தன்மொழியில் சொல்கிறது. இந்த வகைப்பாட்டினை - இந்த வரிசைப்படுத்தலை இவ்விதம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் : அறம் என்பது விசும்பின் நியதி. ஆயிரக்கணக்கான சூரியன்களையும் வான்மீன்களையும் ஆழியையும் கோள்களையும் இணைத்திருக்கும் இயக்கம். அந்த பேரியக்கத்துடன் ஒத்திசைவதே அறம். அத்தகைய அற உணர்வால் மானுடர் உருவாக்கிக் கொள்வதே பொருள் (அர்த்த). அற உணர்வாலும் பொருள் வாழ்வாலும் மனிதர்களுக்கு வாய்க்கப் பெறுவதே வாழ்தலின் இனிமை. அந்த இனிமை மானிடரை இட்டுச் செல்லும் அந்தமே வீடுபேறு. அறமும் வீடுபேறும் ஒன்றே. வாழ்தலின் இனிமையைக் காண்பவர்கள் வீடுபேறுக்கான மார்க்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மானுட வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே தனி மனிதனை, மனிதர்களை, மனித சமூகத்தை ‘’தான்’’ எனும் எண்ணம் சூழ்ந்திருக்கிறது. அந்த எண்ணம் பெரும்பாலும் அறியாமைக்கு இட்டுச் செல்கிறது. பிரபஞ்சப் பெருநியதியைத் தனியாகவும் தன்னை தன் இருப்பைத் தனியாகவும் எண்ணும் நிலையே ‘’அறியாமை’’. மானுடரைத் துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே. புத்தர் அந்தத் துன்பத்தைக் கண் கொண்டு காணச் சொல்கிறார். மனிதர் அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ‘’நான்’’ என்னும் எண்ணம் கொள்வதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரபஞ்சப் பெருநியதியிலிருந்து விலகி இருப்பதால் துக்கம் அல்லது துக்கங்கங்கள் கோடானுகோடி விதமாய் இருக்கிறது அல்லது இருக்கின்றன. அவற்றை மானுடர் கண் கொண்டு காணும் போது துக்கத்திலிருந்து துக்கத்துக்கான காரணத்தை அறிகின்றனர். பின்னர் துக்க நிவாரணம் என்ன என்பதையும் துக்க நிவாரணத்துக்கான பாதை என்ன என்பதையும் அறிகின்றனர். மனிதனுக்கு அதுவே நிறைநிலை ; முழு விடுதலை. 

மானுட வரலாறு குறைந்தபட்சம் 15,000 ஆண்டுகள் தொன்மையானது. அதில் 6000 ஆண்டுகளாக மனித குலம் மானுட உணர்வுகளை எழுத்தில் வடிக்கிறது. இலக்கியம் குறைந்தபட்சம் 6000 ஆண்டுகளாக மானுட குலத்துடன் உடன் வந்து கொண்டிருக்கிறது. எல்லையற்ற விசும்பின் இயக்கத்துடன் மனிதப் பிரக்ஞையை இணைப்பதை இலக்கியம் தன் பணியாக எண்ணுகிறது ; செய்கிறது. 15,000 ஆண்டுகளாக மனிதர்கள் அறிவையும் அறியாமையையும் சேர்ந்தே அடைகின்றனர். மானுடர் அறிந்த அறிவைக் காட்டிலும் இன்னும் பெரிதாக இருக்கிறது அறியாமை. 

பொதுவாக நவீனத் தமிழிலக்கியத்தின் மீது ஐரோப்பாவின் இருத்தலியல் மற்றும் நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம். கவிதா சொர்ணவல்லியின் ‘’ஒரு க்ளாஸ் விஸ்கி’’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தம்மை இருத்தலியல் மற்றும் நவீனத்துவ எல்லைக்குள் பொருத்திக் கொள்ளாமல் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் உலவும் படைப்பு அகத்துடன் உலகை, மனித வாழ்வைக் காணுகின்றன. 

கவிதா சொர்ணவல்லியின் சென்னை லட்சக்கணக்கான மனிதர்கள் அறிந்த இரைச்சலுடனும் இயந்திரத்தனமையுடனும் இருக்கும் சென்னைதான் என்றாலும் கவிதா சொர்ணவல்லியின் சிருஷ்டி சென்னையை நுரை பொங்கும் அலைகள் மணல் மேடுகளைத் தொடும் நகரமாகவும் அதிகாலையின் சிறு தூரல் சென்னையெங்கும் சாரலை நிரப்பியிருக்கும் பொழுதாகவும் மருதாணியும் குல்மோகரும் மாமரங்களும் பன்னீர்ப்பூக்களும் பூத்திருக்கும் பிரதேசமாகவும் மொழியில் சென்னையை நிலைநிறுத்திச் செல்கிறது. அவரது படைப்புகளும் படைப்புச் செயல்பாடும் மிக முக்கியமானது என்பதற்கு அவரது சிறுகதைகளில் வெளிப்படும் இயற்கை குறித்த சித்தரிப்புகளே சொற்சாட்சியங்கள் ஆகும். 

கவிதா சொர்ணவல்லியின் கதாமாந்தர்கள் அனைவருமே இனியவர்கள்; இனிமை நிறைந்தவர்கள்; இனிமையை மட்டுமே தேர்ந்தெடுப்பவர்கள். இனிமையை மட்டுமே காண முடிவெடுத்தவர்கள். 

சங்கப்பாடல் ஒன்று உள்ளது. 

ஒரு வீட்டில் மங்கல இசை ஒலிக்கிறது
இன்னொரு வீட்டில்
சாவுமேளம் கேட்கிறது
துயர் மிக்கது இவ்வுலகம்
அதன் 
இயல்புணர்ந்தவர்கள்
அதன் இனிமையை மட்டுமே காண்பார்கள்

கவிதா சொர்ணவல்லியின் படைப்புலகை துயரற்ற இனிமைகளின் உலகம் என்று சொல்லலாம். மானுடர்க்கு அவர் படைப்பாளியாக ஒரு செய்தியைக் கூறுகிறார் : நாம் வாழும் உலகில் நாம் காணும் உலகில் இனிமைகளால் ஆன இனிமையின் உலகம் இருக்கிறது ; அந்த இனிமையை மானுடர் தேரட்டும். 

’’திங்களைப் போற்றுதும்’’ எனத் துவங்குகிறது துறவியான இளங்கோ படைத்த சிலப்பதிகாரம். திங்கள் பெண்மைக்கும் நீதிக்குமான குறியீடு. திங்களை முன்நிறுத்தி திங்களுக்கு முதன்மை இடம் கொடுத்து ஞாயிறை அடுத்து வைக்கிறான் இளங்கோ. நம் மரபில் படைப்போன் சொல்லரசியைத் தன் நாவில் நிலைநிறுத்திக் கொண்டான். மாயோன் அலைமகளுக்குத் தன் முழு இதயத்தையும் தந்தான். சங்கரன் உமையில் பாதியாகத் தான் ஆனான். 

கவிதா சொர்ணவல்லியின் சிறுகதைகளை ‘’திங்களைப் போற்றுதும்’’ எனப் போற்றிய தமிழ் மரபின் நிகழ்காலத் தொடர்ச்சியாக நான் காண்கிறேன். 

Friday, 15 May 2026

அறிவுரைக்கு செவிமடுத்தல்

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த வருடம் கணிணித் தொழில்நுட்பமும் தகவல் தொழில்நுட்பமும் பலரால் ஆர்வமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள். கட்டுமானத் தொழில்நுட்பத்திலும் எந்திரவியல் தொழில்நுட்பத்திலும் பயில மாணவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். கண்ணி தகவல் தொழில்நுட்பங்களில் வகுப்புக்கு 200 மாணவர்கள் இருப்பார்கள். கட்டுமானத்திலும் எந்திரவியலிலும் வகுப்புக்கு 20 மாணவர்கள் இருப்போம். எங்கள் கல்வி 4 ஆண்டுகளில் முடிந்ததற்குப் பின்னான அடுத்த ஆண்டில் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் 200 மாணவர்கள் சேர்ந்ததாகவும் கணினி தகவல் தொழில்நுட்பங்களில் 20 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும் அறிந்தோம். 

20 மாணவர்கள் கொண்ட வகுப்பில் எங்களுக்குக் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் எங்களிடம் சொல்வார். ‘’பல்கலைக்கழகத்தில் நிறைய கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தினமும் சென்று பாருங்கள். உங்களுக்கு அங்கே என்ன பணி நடக்கிறது என முழுமையாகப் புரியாது ; இருந்தாலும் சென்று பாருங்கள். உங்கள் கல்வி அங்கே நடக்கும் வேலைகள் தான். உங்கள் கண்கள் தினமும் அந்தப் பணிகளைக் காண வேண்டும். உங்கள் உடலும் மனமும் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால் படித்து முடித்த பின் அதுதான் உங்கள் வாழ்க்கையாக இருக்கப் போகிறது.’’ மிகுந்த அக்கறையுடன் தான் பேராசிரியர் எங்களுக்குக் கூறினார். நாங்கள் அப்போது அந்த அறிவுரையைக் கேட்கவில்லை. 

ஒரு பணி நிமித்தமாக நான் பயின்ற கல்லூரிக்குச் சென்றிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது அங்கே ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே சென்றேன். பணி மேலாளர் ஓர் இளைஞர். சேலம் பகுதியைச் சேர்ந்தவர். சில ஆண்டுகள் முன்பு கட்டுமானப் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 16,000 சதுர அடி என்று சொன்னார். தரைத்தளம் ‘’ரூஃப் கான்கிரீட்’’ போடப்பட்டு முதல் தளம் ‘’ரூஃப் கான்கிரீட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. தரைத்தளத்தில் கட்டுவேலை இன்னும் துவங்கவில்லையா எனக் கேட்டேன். பதில் சொன்னார். பணியாளர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருக்கின்றனர் என்றும் கம்பி வேலை செய்பவர்கள் மட்டுமே இங்கே உள்ளவர்கள் என்றும் சொன்னார். தமிழகப் பணியாளர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்றும் சொன்னார். பணிகள் மிகத் தரமாக செய்யப்படுவது கட்டுமானப் பொறியாளனான எனது கண்களுக்குத் தெரிந்தது. 

25 ஆண்டுகள் முன் பேராசிரியர் சொன்ன அறிவுரையை தற்போது செயலாக்கியிருப்பது நல்ல விஷயமே என எண்ணினேன். It is better late than never. 

காலமாற்றத்தின் ஒரு காட்சி

தமிழகத்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஒன்றை எனது பயணத்தில் கடந்து செல்ல நேரிட்டது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்தியப் பல்கலைக்கழகங்கள் பிரும்மாண்டமான பிரிட்டிஷ் பாணி கட்டிடங்கள். ஐரோப்பா கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளமாகக் கண்டது ; காலனிய அரசுகள் பல்கலை.களை தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தும் இடங்களாகவும் கண்டன. இந்தியாவில் பிரிட்டிஷார் எழுப்பிய பல்கலை.ளை விட சுதேச சமஸ்தானங்களும் காந்திய இயக்கத்தவரும் துவங்கிய பல்கலை. எண்ணிக்கையில் மிகுதி.  பல்கலை.யைக் கடக்கையில் இந்த நினைவுகள் எழுந்து கொண்டேயிருந்தன. 

அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 ஆக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின் மெல்ல எழுத்தறிவு அதிகமானது. 1960களை ஒட்டி நிறைய பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலை.களும் உருவாயின.’’தரக்கல்வி’’ (quality education) என்பது இல்லாமலாகி ‘’திரள்கல்வி’’ (mass education) என்பது நிலைபெற்றது. இன்று தமிழகத்தின் கடைசி கிராமத்துக்கும் பொறியியல் கல்வி சென்று சேர்ந்திருக்கிறது. அது பல நன்மைகளையும் பலருக்கும் உருவாக்கியிருக்கிறது. 

இந்திய மரபில் கல்வி என்பது அர்ப்பணிப்புடன் பிறிதொன்று இன்றி முழுமையாக ஈடுபடும் செயல். அவ்விதமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவனே மாணவன். ‘’திரள் கல்வி’’யில் அதற்கான இடம் இல்லை. தமிழகத்தில் ‘’தரக்கல்வி’’ பயில்வதற்கு இடம் இல்லை என்பதே யதார்த்தம். 

நான் கடந்து சென்ற பல்கலை.யில் அலரங்கார வளைவு ஒன்றின் முகப்பில் ‘’கவிதை இசை நாட்டியம் சிற்பம் கலைகோபுரம்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஐந்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இம்மண்ணில் கல்வியாக இருந்தன ; 2000 ஆண்டுகளுக்கு முன்னும் 1000 ஆண்டுகளுக்கு முன்னும் 500 ஆண்டுகளுக்கு முன்னும் இவை கல்வியாக இருந்தன. இன்று இவற்றை கற்க வேண்டிய முறைப்படி கற்பதற்கான சூழல் தமிழகத்தின் ‘’திரள்கல்வி’’ சூழலில் இல்லை என எண்ணினேன்.   

Wednesday, 13 May 2026

நற்செயலும் எதிர்பார்ப்பும்




தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 4765 அரசு சாராயக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 717 சாராயக் கடைகளை மூட  தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது தமிழக மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் செயல். இந்த முடிவு வரவேற்கத்தக்கது.  

இன்று தமிழக மக்கள் தொகை 7 கோடி எனில் அதில் தோராயமாக ஆண்கள் 3.5 கோடி பேர் இருக்கக்கூடும். அதில் 18 வயதுக்கு மேலே இருப்பவர்கள் 2.57 கோடி பேர் இருப்பார்கள். அதில் 90 சதவீதம் தோராயமாக 2.32 கோடி பேர் சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக சாராயத்தை ரேஷன் கடை வினியோகம் போல ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சேர்த்திருக்கிறார்கள். சாராயம் குடிக்கும் இந்த 2.32 கோடி பேரும் கூட இத்தனை சாராயக் கடைகளை விரும்புவதில்லை. கடைகள் குறைவாக இருந்தால் தாங்கள் சாராயம் குடிக்கும் அளவு குறையும் ; சாராயம் குடிக்கும் நாட்களும் குறையும் என்றே விரும்புகிறார்கள். 

தமிழகத்தில் உள்ள சாராயக் கடைகள் 4765ல் 717 சாராயக் கடைகள் என்பது 6.6 சதவீத அளவே ஆகும். 

இன்னும் 4048 கடைகள் தொடர்ந்து இயங்க உள்ளன.

மதுவிலக்கு என்பது ஒரு லட்சியவாத நிலை. இந்தியாவில் இன்றும் பீகாரிலும் குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. தமிழக ஆண்கள் 2.32 கோடி பேர் சாராயத்துக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக இங்கே மதுவிலக்கு கொண்டு வர இயலாது என்றாலும் மாவட்டத்துக்கு ஒரு சாராயக் கடை என்ற அளவில் தமிழகத்தில் 38 சாராயக் கடை மட்டுமே இயங்கும் விதமாக உத்தரவிட வேண்டும். அந்த 38 சாராயக் கடைகளிலும் அரசு சாராயம் விற்கக் கூடாது. 

சாராயம் அதனைக் குடிப்பவர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனை என்பதாக மட்டுமே தமிழ்நாடு அரசு பார்க்க வேண்டும். சாராய வருவாயில் தான் அரசு நிகழ்கிறது என்பதால் அந்த சாராய வருவாயை அரசு எதிர்நோக்குகிறது என்றால் கடந்த 20 ஆண்டு ஆட்சிகளின் மனோபாவத்துக்கும் புதிய ஆட்சியின் மனோபாவத்துக்கும் வேறுபாடு இல்லை என்றாகி விடும்.  

Tuesday, 12 May 2026

கிரேட்டர் தேன் ஆர் ஈகுவல் டு (நகைச்சுவைக் கட்டுரை)

 
2021ம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் ஒரு விஷயத்தை என்னிடம் கேட்டார். அவர் ஒரு சாமானியர். அரசியலை செவிவழிச்செய்திகளின் வழியே அறிபவர். அரசியல்வாதிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல ; போலிஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசல் மிதிக்காமல் இருப்பது எவ்வளவு சிறந்ததோ அதே போன்றது அரசியல்வாதிகள் இருக்கும் இடத்துக்கும் போகாமல் இருப்பது என்பதை முழுமையாகப் புரிந்தவர். மாநிலத்தில் 90 சதவீத பொதுமக்கள் அவ்விதமே எண்ணுகின்றனர் ; அவ்விதமே இருக்கின்றனர். அது நல்ல விஷயமே. எனினும் அவருக்கு செவி வழியே வந்து சேரும் செய்திகள் குறித்து சில ஆர்வங்கள் இருந்தது. 

என்னிடம் கேட்டார் ; ‘’பிரபு ! தேர்தல்ல ஓட்டு போடறதுக்கு முன்னாடியே இந்த தேர்தல்ல இந்த கட்சிதான் ஜெயிக்கும்னு சொல்றாங்களே ! அத எப்படி தெரிஞ்சுக்குவாங்க. அது பத்திரிக்கைகாரங்க மட்டும் தான் தெரிஞ்சுக்க முடியுமா ?’’

நான் பதில் சொன்னேன். ‘’ அதாவது , ஜனநாயகம் ஒவ்வொரு குடிமகனோட வாக்கும் ரகசியமானதுன்னு சொல்லுது. ஆனா ஒரு வாக்காளர் எந்த கட்சிக்கு ஓட்டு போடறார்ங்கறதை மறைமுகமா பல விஷயங்கள் தாக்கம் செலுத்துது. குடும்பம், ஜாதி, மதம் ஆகியவை தாக்கத்தோட அளவுல கொஞ்சம் பெருசு. இது இல்லாம வேற சில விஷயங்களும் இருக்கு.’’

நண்பர் ‘’நீங்க சொல்றது புரியலை’’ என்றார். 

‘’இப்ப நம்ம மாநிலத்துல ஒரு வீடு இருக்குன்னா அதுல 4 பேரு வாக்காளர்கள்னு வச்சுக்கங்க. அந்த வீட்டுல இருக்கற அப்பா 30 வருஷமா ‘’முக்காலி’’ சின்னத்துக்கு ஓட்டு போட்டிருக்காருன்னு வச்சுப்போம். அந்த வீட்டுல இருக்கற அம்மாவும் ‘’முக்காலி’’க்கே ஓட்டு போடுவாங்க. அவங்க மகன் அடுத்த தலைமுறை. அப்ப தலைமுறை இடைவெளி இருக்கும். மகன் ‘’சோஃபா’’ சின்னத்துக்கு ஓட்டு போடலாம். அந்த வீட்டு மருமகள் ‘’முக்காலி’’ ‘’சோஃபா’’ ரெண்டுக்கும் போடாம ‘’தடுக்கு’’ சின்னத்துக்கு ஓட்டு போடலாம்’’ஒரு வீட்டுலயே இவ்வளவு வித்தியாசம் இருக்கும்’’

நண்பரின் புரியாமை மேலும் அதிகமானது. 

’’இப்ப ஒரு ஊர்ல ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’,’’ஈ’’ன்னு நாலு ஜாதி இருக்குன்னா பல சமூகக் காரணங்களால அங்க பெரும்பான்மையா இருக்கற ஜாதியோட மத்த ஜாதியைச் சேர்ந்தவங்களுக்கு மனவிலக்கம் இருக்கும். அப்ப மனவிலக்கம் இருக்கற ஜாதி வேட்பாளருக்கு ஓட்டு போட மாட்டாங்க. ஒரே ஜாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் 2 அல்லது 3 கட்சில நிப்பாங்க. அப்ப அவங்கள்ல யாரு பெட்டர்னு யோசிச்சு வாக்காளர்கள் ஓட்டு போடுவாங்க. எது எப்படி நடக்கும்னு அரசியலை கவனிக்கறவங்களுக்கு ஓரளவு தெரிஞ்சுடும். ஆனா முழுசா தெரிஞ்சுராது’’

நண்பர் முழுமையாக குழம்பிப் போய் விட்டார். 

நான் ஒரு பேப்பரை எடுத்தேன். நண்பரிடம் சொன்னேன் . ‘’ இப்ப நம்ம தொகுதில எந்த கட்சி ஜெயிக்கும்னு நான் ஒரு கணிப்பைச் சொல்றன். அந்த கணிப்புக்கு எப்படி வரேன்னு நான் இந்த ஷீட்ல ஒர்க் அவுட் செஞ்சு காட்டறன். அல்ஜீப்ரா மாதிரி. இதுவும் ஒரு மேத்தமெட்டிக்ஸ் தான். இப்ப தான் நாமினேஷன் தாக்கல் ஆகுது. இன்னும் எலெக்‌ஷனுக்கு 3 வாரம் இருக்கு. அதுக்கப்பறம் ரிசல்ட் வர ரெண்டு வாரம் ஆகும். ரிசல்ட் வரட்டும். அப்ப இந்த ஷீட்டை திரும்ப எடுத்துப் பார்ப்போம். எந்த கட்சி எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கும்னு நான் சொன்னது நடந்திருக்கான்னு பாப்பம். நடந்தா என்னால ஓரளவு கணிக்க முடியுதுன்னு நான் தெரிஞ்சுக்கிறன். நடக்கலன்னா எனக்கு அரசியல் சமூகப் புரிதல் கம்மியா இருக்குன்னு தெரிஞ்சுக்கறன்’’ என்றேன். 

அவர் மனதுக்கு நான் சொல்வது சரி எனப்பட்டது. 

ஒரு டேபுலர் காலம் போட்டேன். அதில் ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ‘’ஈ’’ என நான்கு ஜாதிகளின் பெயர்களை எழுதினேன். 

நண்பர் பதறினார். ‘’ஏன் ஜாதிகளோட பெயரை எழுதறீங்க?’’

‘’இன்னைய தேதிக்கு இந்திய ஜனநாயகத்துல ஜாதி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துது. ஒரு தொகுதில எந்த கட்சி ஜெயிக்கும்னு தெரியணும்னா அந்த தொகுதில எந்த ஜாதி எவ்வளவு எண்ணிக்கைல இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். நிச்சயமா விதிவிலக்குகள் உண்டு. ஆனா மேத்தமெட்டிக்ஸ்ல விதிவிலக்குகள் விதியை உறுதி செய்யுதுன்னு அதுல இருக்கறவங்களுக்கு நல்லா தெரியும்’’

‘’அ’’ தொகுதியின் சிறு விவசாயிகள் அதிகம் இருக்கும் ஜாதியின் பெயர். ‘’ஆ’’ தொகுதியின் விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் ஜாதியின் பெயர். ‘’இ’’- ஆபிரகாமிய மதங்களின் பெயர் ‘’ஈ’’ - பிற ஜாதிகள் என எழுதினேன்.’’

நண்பர் ஆபிரகாமிய மதங்கள்னா எது என்று கேட்டார். நான் அவை எவை என்று விளக்கினேன். 

’’இப்ப நம்மகிட்ட ரொம்ப துல்லியமான எண்ணிக்கை இல்லை. அதனால தொகுதியை பெர்சண்டேஜ் அதாவது 100ங்கற எண்ணிக்கைக்கு மாத்திப்போம். கணக்கு பண்ண ஈசியா இருக்கும். தொகுதில ‘’அ’’ ஜாதி 30 % இருக்காங்க. ‘’ஆ’’ ஜாதி 30 % இருக்காங்க. ‘’இ’’ (ஆபிரகாமிய) ஜாதி 15 % இருக்காங்க. இதர ஜாதிகள் 25% இருக்காங்க. இதுதான் அடிப்படை டேட்டா. ‘’அ’’ ஜாதிக்கும் ‘’ஆ’’ ஜாதிக்கும் ரொம்ப வருஷமா பரஸ்பர விலக்கம் இருக்கு. அதனால அந்த ரெண்டு ஓட்டும் ஒன்னை ஒன்னு கேன்சல் பண்ணி எண்ணிக்கை நியூட்ரல் ஆயிடும். இப்ப தொகுதியில கடுமையான போட்டி ‘’அ’’ ஜாதில இருக்கற வேட்பாளருக்கும் ‘’ஈ’’ ஜாதில இருக்கற வேட்பாளருக்கும். ஒன்னை ஒன்னு கேன்சல் செஞ்சு ‘’அ’’ ‘’ஆ’’ ஜாதி ஓட்டு நம்ம கணக்குல நியூட்ரல் ஆகிடுச்சு. ‘’இ’’ ஜாதி ஓட்டு முழுக்க ‘’ஈ’’ ஜாதி வேட்பாளருக்குப் போகும். ‘’ஈ’’ ஜாதி ஓட்டுல பாதிக்குப் பாதி ‘’அ’’ ஜாதி வேட்பாளருக்கும் ‘’ஈ’’ ஜாதி வேட்பாளருக்கும் விழும். ஏன்னா ‘’ஈ’’ என்பது இதர ஜாதிகள் ; ஒரே ஜாதி கிடையாது. அதனால பாதி பாதி கொடுத்திருக்கன். இந்த எலெக்‌ஷனுக்குன்னு ஒரு மூட் இருக்கு. கடந்த காலத்தோட வோட்டிங் பேட்டர்ண் இருக்கு.அதையும் ஒரு அம்சமா செக்கணும். இது எல்லாத்தையும் பர்சண்டேஜ்ல இருந்து ஆக்சுவல் நம்பர்ஸ்க்கு மாத்துனா இந்த எலெக்‌ஷன்ல ‘’அ’’ ஜாதி வேட்பாளர் ‘’ஈ’’  ஜாதி வேட்பாளர்ட்ட 4000 வாக்கு வித்யாசத்துல தோல்வி அடைவார்’’

டேபுலர் காலம் போட்டு எழுதி விளக்கினாலும் நண்பர் ‘’இப்போதான் நாமினேஷன் தாக்கலே ஆகுது. இவன் என்ன தேர்தல் அதிகாரி வெற்றி பெற்ற சான்றிதழ் கொடுக்கற மாதிரி இவ்வளவு ஆத்தண்டிகேடர் ஆ கொடுக்கறானே’’ என நினைத்திருப்பார். அந்த பேப்பர் என்னிடம் இருந்தது. 

மூன்று வாரங்களுக்குப் பின் தேர்தல் முடிவு வந்தது. ‘’அ’’ ஜாதி வேட்பாளர் ‘’ஈ’’ ஜாதி வேட்பாளரிடம் 2500 வாக்கு வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். 

நண்பர் என்னை ‘’இவனுக்கு கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்கிறது’’ என எண்ணத் தொடங்கினார். 

***

ஐந்து ஆண்டுகள் ஆயின. 2026ம் ஆண்டுக்கான தேர்தல் வந்தது. 

நண்பர் என்னிடம் உற்சாகமாக ‘’போன முறை போட்டியிட்டு ரெண்டாம் இடம் வந்த கட்சி இம்முறையும் போட்டியிடுகிறது. அதே ‘’அ’’ வேட்பாளர். போன தடவை 2500 ஓட்டுல தான் மிஸ் பண்ணாங்க. இந்த தடவை எப்படியும் மினிமம் 5000 ஓட்டு வித்யாசத்துல ஜெயித்துடுவாங்க’’ என்றார். 

5 ஆண்டுகளில் நண்பர் அரசியலை அவதானிக்கத் துவங்கியிருப்பது மகிழ்ச்சி என்றாலும் நண்பரிடம் நான் ஒரு விஷயத்தைச் சொன்னேன். 

‘’மேத்தமெடிக்ஸ்ல கிரேட்டர் தேன் ஆர் ஈகுவல் டு அப்படின்னு சொல்வாங்க. ‘’அ’’ கிரேட்டர் தேன் ஆர் ஈகுவல் டு ‘’ஆ’’ அப்படின்னா ‘’அ’’ எண்ணிக்கை ‘’ஆ’’ எண்ணிக்கைக்கு சமம் அல்லது அதிகம் அப்படின்னு அர்த்தம். எனக்கு என்னமோ இந்த தொகுதில கிரேட்டர் தேன் ஆர் ஈகுவல் டு தியரி வேலை செய்யுமோன்னு தோணுது. போன தடவை ‘’அ’’ ஜாதி வேட்பாளர் 2500 ஓட்டுல தோல்வி அடைஞ்சாரு. இந்த தடவை அதை விட அதிகமான ஓட்டு வித்தியாசத்துல தோல்வி அடைய வாய்ப்பு இருக்கு’’

எனது கணிப்பு பொய்யாகும் என்று நண்பர் எண்ணினார். ‘’இந்த தடவை இந்த தொகுதிக்கும் மாநிலத்துக்கும் உங்க கணிப்பு என்ன? ‘’ என்று நண்பர் கேட்டார். 

நான் யோசித்தேன். பின்னர் உறுதியாக ‘’ தமிழ்நாட்டுல ஹங் அசெம்ப்ளி வரும். இந்த தொகுதில போன தடவை 2500 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்ச கட்சி இந்த முறை 10,000 ஓட்டு வித்யாசத்துல ஜெயிக்கும்’’ என்றேன். 

எனது இரண்டு கணிப்புகளும் நிகழ்ந்தன. 

Monday, 11 May 2026

லோக் பவன் -க்கு ஒரு கடிதம்

அனுப்புநர் 

ர.பிரபு
&&&&&&&
&&&&&
&&&

பெறுநர்
பொது தகவல் அதிகாரி
லோக் பவன்
கிண்டி 
600032

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி சில தகவல்கள் கோரி விண்ணப்பம்
பார்வை : தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.10 முத்திரைவில்லையாக இந்த விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 17வது சட்டசபைக்கான 234 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பட்டியல் கனம் தமிழக ஆளுநரிடம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 17வது சட்டசபையின் தனிப்பெரும்கட்சி 04.05.2026 முதல் 09.05.2026 வரை கனம் தமிழக ஆளுநர் அலுவலகத்துடன் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். மேற்படி கடிதப் பரிமாற்றங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேற்படி ஆவணங்களைப் பெறுவதற்கான கட்டணம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதனை செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்கிறேன். 

04.05.2026 முதல் 09.05.2026 வரை 17வது சட்டப்பேரவையின் தனிப்பெரும்கட்சி கனம் ஆளுநருக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள், கனம் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு அனுப்பிய கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள், தனிப்பெரும் கட்சி சார்பில் கனம் ஆளுநரிடம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள், பதவிப் பிரமாணம் வரையான மின்னஞ்சல் மற்றும் கடிதத் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோருகிறேன். தெரிவிக்கப்படும் அதற்கான கட்டணத்தைச் செலுத்துகிறேன்.  

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 10.05.2026 

Sunday, 10 May 2026

வாழ்த்துக்கள் முதலமைச்சர்

 

மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசஃப் விஜய் அவர்களுக்கு,

பெருவெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உலகின் மிகச் செழிப்பான நாடுகளில் முதன்மையானதாகவும் கல்வி, பண்பாடு ஆகியவற்றில் சிறப்புற்றும் இருந்த நம் நாட்டை நம் நாட்டின் பொருளாதாரத்தை  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டு நூற்றாண்டுகள் சுரண்டியது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சியாலும் நம் நாட்டுக்குப் பொருத்தமற்ற வரி விதிப்பு முறைகளாலும் நம் நாடு கொடும் பஞ்சங்களுக்கு உள்ளானது. கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மடிந்தனர். பஞ்சமும் நோயும் நம் நாட்டை வாட்டி வதைத்தன.அப்போது ’’வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற’’ தேசமாக நம் தேசம் இருந்தது என்கிறான் பாரதி.இந்திய தேசிய இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிரான தன் போரை பலவிதங்களிலும் முன்னெடுத்தது. பால கங்காதர திலகர், ரவீந்திரநாத் தாகூர், லாலா லஜ்பத் ராய், அரவிந்த கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, மகாத்மா காந்தி, ராஜாஜி, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன் என பல தேசியத் தலைவர்கள் தங்கள் முழு வாழ்நாளையும் நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்தனர். இந்திய நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் விஷ விதைகளைத் தூவ நினைத்த பிரிட்டிஷார் மதத்தின் பெயரால் நம் நாட்டைத் துண்டாடி 20,00,000 மக்கள் சாவுக்குக் காரணமாகி மதக்கலவரங்களால் குருதியில் மிதக்கும் தேசத்தின் நிர்வாகத்தை அளித்து விட்டுச் சென்றனர். இந்திய ஜனநாயகம் தன்னை மெல்ல நிலைநிறுத்திக் கொண்டது. மெல்ல செயல்படத் துவங்கியது. பேரறிஞரும் பெரும் அறிவுஜீவியுமான டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் நமக்கான அரசியல் சாசனத்தையும் நமக்கான அரசியல் சட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்த அரசியல் சாசனமும் அரசியல் சட்டமுமே சாமானிய மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைத் திறந்து வைத்தது. இந்த நாட்டின் குடிமகனாயிருக்கும் 21 வயதான எந்த குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் வாய்ப்பை வழங்கியது. சாமானியர்களுக்கு இந்திய அரசியலமைப்பே அதிகாரத்துக்கான உரிமையை வழங்குகிறது. 

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே, இன்று நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் இந்த தினத்தில் இந்தக் கணத்தில் உலகில் இன்னும் 60 சதவீத மக்கள் ஜனநாயக ஆட்சிக்குள் இன்னும் வரவில்லை. சர்வாதிகாரத்தாலும் மன்னராட்சி முறையாலும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலக மக்கள் தொகை தோராயமாக 700 கோடி என்றால் அதில் 420 கோடி மக்கள் இன்னும் ஜனநாயக ஆட்சி முறைக்குள் வரவில்லை. சீனாவில் ஜனநாயகம் இல்லை. ருஷ்யாவில் ஜனநாயகம் இல்லை. அரேபியாவில் அரபு நாடுகளில் ஜனநாயகம் இல்லை. இன்னும் பலப்பல நாடுகள். நாம் - இந்தியா - இந்தியர்கள் ஜனநாயகத்துக்குள் இருக்கிறோம். ஜனநாயகம் தன் பிரஜைகளுக்கு பூரணமான கருத்து சுதந்திரம் அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளும் கருத்துப் பூசல்களும் கொண்ட பல குரல்கள் ஒலிப்பது இயல்பானது. எனினும் இந்திய ஜனநாயகத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய ஜனநாயக அமைப்புகளை மதிக்க பாதுகாக்க கடமை இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, முப்படைகள், பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, ஆளுநர் மாளிகை ,மாநில சட்டமன்றம் என ஒவ்வொன்றுமே இந்திய ஜனநாயகத்தின் உறுப்புகள். அவை ஜனநாயக அமைப்புகள் என்பதால் மதிப்புக்கு உரியவை. உரிய மதிப்பளிக்கப்பட வேண்டியவை. கடந்த 5 ஆண்டுளாக ஆண்ட கட்சி ஆளுநர் மாளிகையையும் தமிழக ஆளுநரையும் அவமதித்தது. கனம் தமிழக ஆளுநரை சட்டசபைக்குள்ளேயே அவமதித்தது. அத்தகைய நிகழ்வுகள் ஒரு தனி மனிதருக்கு நிகழ்ந்த அவமதிப்புகள் அல்ல ; ஜனநாயகத்துக்கு நிகழ்ந்த அவமதிப்புகள். ஜோசஃப் விஜய் சர்க்கார் ஒரு ஜனநாயக அமைப்பு ; அந்த அமைப்பு நாட்டின் பிற ஜனநாயக அமைப்புகளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதே நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.   

ராஜாஜியும் காமராஜரும் அண்ணாதுரையும் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மற்றும் சிலரும் வகித்த பொறுப்பினை இன்று நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். ராஜாஜி ஒரு மகத்தான மனிதர். கூர்மதிநுட்பம் வாய்க்கப் பெற்றவர். தன் வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியைப் போல வாழ்ந்தவர். நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தம் சொந்த குழந்தைகள் போல் எண்ணியவர். மகாத்மா காந்தியால் தன் மன்சாட்சி எனக் கூறப்பட்டவர். அவர் பதவி வகித்ததால் தமிழக முதல்வர் நாற்காலி பெருமை பெற்றது. அவர் வகிக்காத பதவி இல்லை . சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல், ஆளுநர் ஆகிய பதவிகளில் இருந்தவர் அவர். சாமானியக் குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்  தலைவராக இருந்தவர் காமராஜர். தமிழகக் கல்வியில் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர். கோடானுகோடி ஏழை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் தொழிற்கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பே இன்று தமிழகம் தொழில்நுட்ப பணிகளில் சிறந்து விளங்குவதற்கான காரணம். முதலமைச்சராக இருக்கும் போது மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பராமரிக்க வேண்டும் என்னும் புரிதல் கொண்டவர் கருணாநிதி. அவரது நிர்வாக முறையின் சிறப்பான அம்சங்களில் முதன்மையான விஷயம் அது. ஒரு கருத்தை கொள்கையை எதிர்ப்பது என்பதும் ஒரு ஜனநாயக அமைப்பை எதிர்ப்பது என்பதும் எத்தனை வேறுபாடுகள் கொண்டவை என்பதை மிக நன்றாக உணர்ந்தவர் கருணாநிதி. ஐ ஏ எஸ் அதிகாரிகள் வியந்து நோக்கும் மொழித்திறனும் முடிவெடுக்கும் திறனும் கொண்டவர் ஜெயலலிதா. மாநிலத்தின் அன்றாட தினங்களின் சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்தது அவரது சிறப்பியல்பு. கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் 1989- 2016 வரை ஆண்டிருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் தமிழக அரசு தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என்பதை மிக உறுதியாகப் பராமரித்தது. ஜெயலலிதா கருணாநிதி இருவருக்குமே போதைப் பொருளை தமிழகத்தில் அனுமதிக்காத பெருமை சென்று சேரும். 

தேசியவாதக் கொள்கை கொண்ட இந்திய தேசிய காங்கிரஸை 1967ம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. அப்போது தொடங்கி இந்த ஆண்டு வரை திமுக அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டுள்ளன.60 ஆண்டுகளுக்குப் பின்னால் முதல்  முறையாக இரு திராவிடக் கட்சிகளை வீழ்த்தி தங்கள் அரசு அமைந்துள்ளது. குறியீட்டுரீதியில் தமிழக வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய மரபு காலத்தை ஒரு சக்கரமாக உருவகிக்கிறது. ஒவ்வொரு அறுபது ஆண்டு காலத்தையும் ஒரு சுழற்சியின் முடிவாகக் கொண்டு ஒரு புதிய சுழற்சியின் துவக்கத்தை அறிவிக்கிறது. இந்தியர்கள் - தமிழ் மக்கள் அதனால் தான் 60 வயது நிறைவதை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். திராவிடக் கட்சிகள் பதவிக்கு வந்த ஆண்டு ‘’பராபவ’’ ஆண்டு. திராவிடக் கட்சிகள் இரண்டும் வீழ்த்தப்பட்டிருக்கும் ஆண்டும் ‘’பராபவ’’ ஆண்டே.  

60 ஆண்டுகள் ஒன்றையொன்று எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் தங்களைப் பதவிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்னும் ஒற்றை நோக்கத்துக்காக தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றதை தமிழகம் கடந்த 5 நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்ப்பட்ட போது கூட தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்பட முனைந்ததில்லை என்பதை தமிழ் மக்கள் அறிந்தார்கள். தங்கள் பதவியேற்புக்குள்ளாகவே இரு திராவிடக் கட்சிகளின் சுயநல அரசியல் தமிழ் மக்களிடம் அம்பலமானது. 

இந்திய ஜனநாயகத்தில் மாநில அமைச்சரின் பணி என்பதே  மிகவும் நெருக்கடியானது. குறைந்தபட்சம் காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை நீள்வது. முதலமைச்சரின் நாள் காலை 5 மணிக்குத் துவங்கி இரவு 12 மணி வரை நீள்வது. அதிகாரிகளுடனான சந்திப்புகள், விவாதங்கள், ஊடகங்கள், சட்டசபை என பல அம்சங்களைக் கொண்டது. குடிமக்கள் 8 கோடி பேருக்கும் ஒரு கோரிக்கை இருந்தால் கூட 8 கோடி கோரிக்கைகளை நிறைவேற்ற எவராலும் இயலாது. ஓர் இந்தியக் குடிமகனாக - ஒரு சாமானியனாக - ஜோசஃப் விஜய் சர்க்காரிடம் எனது எதிர்பார்ப்பு என்ன என்பதை முன்வைக்கிறேன். இவை கோடிக்கணக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் கூட. 

ஜோசஃப் விஜய் சர்க்காரிடம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது 

(1) தமிழக ஆண்களில் 90 சதவீதத்துக்கும் மேலே கடந்த 20 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளின் டாஸ்மாக் மதுபான விற்பனையால் குடி அடிமைகள் ஆகி விட்டனர். எனவே முழு மதுவிலக்கு உடனடியாக சாத்தியமில்லை எனினும் இப்போது இருக்கும் 90 சதவீத டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இன்று தமிழக மாவட்டங்கள் அளவில் சிறியவையாகி விட்டன. மாவட்டத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மதுக்கடை என்னும் அளவில் இருந்தால் போதுமானது. 

கூலித் தொழிலாளர்கள் பலரிடம் பேசும் போது அவர்கள் கூறி இந்த விஷயத்தைக் கேட்டிருக்கிறேன். அதாவது காலை எழுந்ததும் ஒருவர் கூலி வேலைக்குப் புறப்படுகிறார் என்றால் கடைத்தெரு சென்றால் அங்கே ஒரு மதுக்கடை இருக்கும். அந்தக் கடையைக் கண்டவுடன் மது அருந்த வேண்டும் என்னும் உடல் கொடுக்கும் அழித்தமும் மன அழுத்தமும் உண்டாகும். அதைக் கஷ்டப்பட்டு கடந்து சென்றால் அடுத்த 500 மீட்டரில் அடுத்த டாஸ்மாக் கடை இருக்கும். உடல் மன அழுத்தம் மேலும் அதிகமாகும். அதையும் கடந்து 500 மீட்டர் சென்றால் மூன்றாவதாக இருக்கும் டாஸ்மாக் கடையில் உடலும் மனமும் மதுவை நோக்கிச் சென்று விடும். தாங்களே காலையில் குடிக்க நினைப்பதில்லை என்றாலும் ஒரு ஊரில் பல கடைகள் இருப்பதால் இப்படி ஆகி விடுகிறது. கடை தூரமாக இருந்தால் நாங்கள் தினமும் குடிப்பது நிச்சயம் குறையும் என்பார்கள். மதுபானம் எப்போதாவது அருந்தும் எங்களை டாஸ்மாக் தினசரி குடிகாரர்கள் ஆக்குகிறது எனக் கூறுவர். 

இந்த சம்பவம் குறித்து நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது , 1971ம் ஆண்டு மகாத்மா காந்தியால் தனது மனசாட்சி எனக் கூறப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் தமிழக முதல்வராயிருந்தவருமான ராஜாஜி அப்போதைய முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு கொட்டும் மழையில் சென்று கருணாநிதியிடம் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘’ நீங்கள் என்னை விட வயதில் இளையவர் என்றால் தங்கள் காலைப் பிடித்துக் கேட்டிருப்பேன் ; தமிழக மக்களை மதுவுக்குள் தள்ளாதீர்கள். மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள்’’ எனக் கேட்டார்.  

(2) போதைப் பொருள் பழக்கத்துக்கு தமிழகத்தின் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் கல்லூரி மாணவ மாணவியரும் உள்ளாகி உள்ளனர். போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என முன்னர் இருந்த நிலை மீண்டும் வர வேண்டும். அதற்கான முழு அதிகாரம் தமிழகக் காவல்துறைக்கு அளிக்கப்பட வேண்டும்.  

(3) பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசுத்துறைகள் என்பவை வாகனப் பதிவு மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத் துறை ஆகியவையே ஆகும். குடிமக்கள் அரசின் மீதும் ஜனநாயகம் மீதும் நம்பிக்கை இழக்கக் காரணம் இந்த 3 துறைகளில் நிலவும் லஞ்சம் காரணமாகவே. வாகனப் பதிவு , வருவாய்த்துறை, பத்திரப்பதிவு ஆகிய 3 துறைகளில் முன்னர் நூற்றுக்கணக்கில் வாங்கப்பட்டிருந்த லஞ்சம் இப்போது லட்சக்கணக்கில் சென்று விட்டது. இந்த 3 துறைகள் அதிகம் சாமானிய குடிமக்கள் தொடர்புடையது. இந்த 3 துறைகளில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். 

இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ‘’வந்தே மாதரம்’’ பாடப்பட்டதைக் கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தங்கள் கட்சியின் கொள்கைத் தலைவர்களான அஞ்சலை அம்மாளும் காமராஜரும் ஓயாது முழங்கிய வீர முழக்கமாகும் அது. தங்கள் கட்சியின் இன்னொரு கொள்கைத் தலைவரான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் இந்திய அரசியல் நிர்ணய சபையில் தேசிய கீதத்துக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட தேசிய பாடலாகும் ’’வந்தே மாதரம்’’. அப்பாடல் பாடப்பட்ட போது அதனுடன் சேர்ந்து ஆளுநர்  பாடியதையும் ஆளுநரின் பாதுகாவலரான ராணுவ வீரர் பாடியதையும் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தி பாடியதையும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பாடியதையும் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாடியதையும் காணொளிகளில் காண நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. 

ஜெய்ஹிந்த்!

அன்புடன்,

பிரபு

இடம் : மயிலாடுதுறை

நாள் : 10.05.2026 

Thursday, 7 May 2026

திருமாவளவன் தமிழக முதல்வராக வேண்டும்


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
அச்சாணி அன்னார் உடைத்து - திருக்குறள் (667)

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் , ‘’பராபவ’’ தமிழ் ஆண்டில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இந்திய அரசியலில் முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்னும் முறை மூலம் வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட தி.மு.க, சுதந்திரா கட்சி, நாம் தமிழர் கட்சி, ஃபார்வர்டு பிளாக், சோஷலிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தேர்தலில் வென்றன. கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றிருந்தும் அத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையவில்லை. திமுக தனியாகவே ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் உருவான தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்னும் நிலை பின்னாட்களில் இந்தியா முழுவதும் பரவியது. ஒரு காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் தனிக்கட்சி ஆட்சி சாத்தியமல்ல என்னும் நிலை 1991ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் நீடித்தது. 2014ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திலும் ஆளும்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருந்தும் பல கட்சிகளுடன் இணைந்த கூட்டணி ஆட்சியாகவே 10 ஆண்டுகள் தொடர்ந்தது. தற்போதுள்ள நாடாளுமன்றத்திலும் கூட்டணி ஆட்சியே நடைபெறுகிறது. 

தமிழகத்தில் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெருங்கட்சியாக இருந்த தி.மு.க 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சியின் 34 சட்டசபை உறுப்பினர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் 18 சட்டசபை உறுப்பினர்களின் மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் 15 உறுப்பினர்களும் அளித்த ஆதரவில் அந்த ஆட்சி நடைபெற்றது. சட்டசபையின் பெரிய கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்னும் நிலையைப் பயன்படுத்தி காங்கிரஸ், பா.ம.க மற்றும் இதர கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருக்க வேண்டும். 34 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் மத்தியில் ஆளும்கட்சியாக இருந்ததால் அவர்களுக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது . தி.மு.க மத்திய அரசின் மந்திரிசபையில் பங்கெடுத்திருந்தாலும் காங்கிரஸ் மாநில அரசில் கூட்டணி ஆட்சியைக் கோரவில்லை. 67 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து  அவ்விதம் கேட்டிருந்தால் 2006ம் ஆண்டு தமிழகம் முதல்முறையாகக் கூட்டணி ஆட்சியைக் கண்டிருக்கும். அது நிகழாமல் போய் விட்டது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டதால் அவர்கள் மாநில அரசில் பங்கு கோரவில்லை. 

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் - தமிழகத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் - பட்டியல் சாதியினரின் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை உள்ளனர். இன்றும் பட்டியல் சாதியினரின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியே உள்ளது. அவர்கள் முன்னேற்றத்துக்கு மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் துணை நிற்க வேண்டும் என்னும் நிலை இப்போதும் நீடிக்கிறது. சமூகத்தின் கடைசி மனிதனாக பட்டியல் சாதியைச் சேர்ந்தவனே இருக்கிறான் என்பது கண்கூடான உண்மை. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளிலும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே தொண்டர்களாக இருக்கிறார்கள். வாக்காளர்களாக எல்லா கட்சிகலுக்கும் வாக்களிக்கிறார்கள். பட்டியல் சாதியினர் முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உடைய கட்சிகளுக்கு அவர்கள் நாட்டின் முதல் தேர்தலிலிருந்து வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதியினரின் முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை தனது வழிமுறையாக எப்போதும் கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி நாட்டின் நலன் என்பது பட்டியல் சாதியினரின் முன்னேற்றத்துடன் இணைந்தது என்பதை பல ஆண்டுகளாக காங்கிரஸின் அரசியல் புரிதலாக்கியிருந்தார். பட்டியல் சாதியினருக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதை காங்கிரஸ் மிக இயல்பாக நிறைவேற்றியிருக்கிறது. சஞ்சீவையா (ஆந்திரா), போலோ பாஸ்வான் சாஸ்திரி ( பீகார்), சுசில் குமார் ஷிண்டே ( மகாராஷ்ட்ரா), சரஞ்சித் சிங் சன்னி (பஞ்சாப்) ஆகிய பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சி முதல்வராக ஆக்கியிருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் மாயாவதி , ராம் விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, திருமாவளவன், சிராக் பாஸ்வான் ஆகிய பட்டியல் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர்களும் பெரும் தலைவர்களும் ஆவர்.  இவர்கள் ஒரு சாதிக்கு மட்டும் உரியவர்கள் அல்ல ; அனைத்து சமூகங்களின் முன்னேற்றத்துக்காகவும் அதிகார அரசியலில் செயல்படுபவர்கள் ஆவார்கள். இந்திய அரசியல் என்பது இடைநிலை சாதிகளுக்கும் பட்டியல் சாதிகளுக்குமான சமர் என்றால் மேற்கூறிய தலைவர்கள் பட்டியல் சாதி மக்களின் வாளாகவும் கேடயமாகவும் இருந்து அவர்களைக் காத்தவர்கள். அவர்களைக் காப்பவர்கள். அவர்களுக்காகப் போராடுபவர்கள். பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் சமூகத்தின் பொருளியல் அடுக்கில் கீழ் இடத்தில் இருப்பவர்கள் என்பவர்கள் என்பதால் தொழிலாளர்களாக இருப்பவர்கள் அதில் அதிகம். எனவே இடதுசாரி தொழிற்சங்கங்களிலும் இடதுசாரி கட்சிகளிலும் பட்டியல் சாதியினர் பங்களிப்பு அதிகம். ( இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். பட்டியல் சாதியினரின் தமிழக நிலை குறித்து எழுதும் போது அவர்களுக்கு கணிசமான அரசியல் அதிகாரம் கிடைத்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது அவை ஆந்திராவிலோ பீகாரிலோ உத்திரப்பிரதேசத்திலோ பஞ்சாப்பிலோ இருப்பதை உதாரணம் காட்டும் நிலை உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் - கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தி.மு.க , அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகள் இரண்டும் - பட்டியல் சாதியினருக்கு அளித்த அதிகாரம் என்பது இந்திய தேர்தல் ஆணையம் பட்டியல் சாதியினருக்கு என ஒதுக்கிய தனித்தொகுதிகளில் தங்கள் கட்சியைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த உறுப்பினர்களை சட்டசபை உறுப்பினர் ஆக்கியதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடும் இடங்களை ஒதுக்கியதும் மட்டுமே. தமிழக சட்டசபை சபாநாயகராக ஒருமுறை பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திராவிடக் கட்சிகளின் அரசியல் என்பது இடைநிலை சாதிகளின் அதிகார அரசியலே என்பதை தமிழக அரசியலை மேம்போக்காக கவனிப்பவர்கள் கூட அறிவார்கள். 

தமிழகத்தில் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தங்கள் வாழிடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்படும் நிலைக்கு ஆளாகுபவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே. தமிழகத்தில் தமிழகத்தில் தங்கள் சமூகத்தின் வாக்குகளை முழுமையாக தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிக்கு சென்று செலுத்துபவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே. வாக்களிக்கும் நாளன்று வன்முறைக்கு உள்ளாகுபவர்களும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே. எல்லா கட்சிகளிலும் அடிமட்டத் தொண்டர்களாக இருப்பவர்க இருப்பவர்கள் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்களே. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தாலும் கணிசமான வளர்ச்சியைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கு பட்டியல் சாதியினரின் ஆதரவு தேவை. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் பட்டியல் சாதியினர் ஆதரவு அதிமுகவுக்கு இருந்தது. 1989க்குப் பின் திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பட்டியல் சாதியினர் திரளாக ஆதரவளித்தனர். விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்துக்கு ஆதரவளித்தவர்கள் பட்டியல் சாதியினரே. நாம் தமிழர் கட்சிக்கும் அவர்கள் ஆதரவு இருந்தது ; இருக்கிறது.

தமிழக வாக்காளர்களில் ஒவ்வொரு தொகுதிகளிலும் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை பிரதிநிதித்துவம் கொண்டிருக்கும் பட்டியல் சாதியினைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ், தி.மு.க , அ.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகள் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆண்டிருக்கும் இந்த 75 ஆண்டுகளில் ஒருமுறையாவது முதலமைச்சர் ஆக ஆகியிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட முதலமைச்சராக ஆகவில்லை. பொதுவாக திராவிடக் கட்சிகள் தமிழகம் பீகார், உத்திரப் பிரதேசத்தை விட எவ்வளவு மேம்பட்டிருக்கிறது ; அவை சமூக ரீதியாக மிகவும் பின் தங்கிய மாநிலங்கள் எனக் கூறுவது வழக்கம். திராவிடக் கட்சிகளின் பார்வையில் மிகவும் பின் தங்கியிருக்கும் பீகாரிலும் உத்திரப் பிரதேசத்திலும் கூட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட முதலமைச்சர் ஆகவில்லை. 

2026ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தில் முதல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தமிழ் ஆண்டு ‘’பராபவ’’ மீண்டும் ஒரு சுழற்சிக்குப் பின் வந்திருக்கும் ஆண்டு 2026. இந்திய மரபு காலத்தை ஒரு சக்கரமாக உருவகித்திருக்கிறது. பௌத்த மரபிலும் காலம் ஆழிச்சக்கரமாகக் கொள்ளப்படுகிறது. 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. எந்தக் கட்சிக்கும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை. தமிழக வெற்றிக் கழகம் 107 உறுப்பினர்களுடன் உள்ளது. திமுக வுக்கு 59 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு 47 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சிறு சிறு கட்சிகள் சிறு சிறு எண்ணிக்கை பெற்றுள்ளன. 

ஜனநாயகத்தில் அதிகார அரசியலில் எண்கள் மிகவும் முக்கியமானவை. எண்களே அதிகார அரசியலும் ஜனநாயகமும் ஆகும். 

தமிழகத்தில் இப்போது ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதிகாரத்தில் 75 ஆண்டுகளாக இருந்த கட்சிகள் இந்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயல்கின்றன. அதிகார அரசியலில் அதுவே இயல்பானது. அதுதான் அதிகார அரசியலும் ஆகும். 

இப்போதுள்ள சூழ்நிலையின் இக்கட்டைத் தவிர்க்கும் திறன் கொண்ட ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் என்பது எனது கணிப்பு. நம் நாட்டின் பல அரசியல் நிகழ்வுகளின் முன்னுதாரணங்களை அடிப்படையாய்க் கொண்டு இந்த திட்டத்தை முன்வைக்கிறேன். 

அதாவது, தமிழக சட்டசபையின் மூன்று பெரிய கட்சிகளால் உடனடியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையை மாற்றியமைக்க விசிக கட்சித் தலைவர் திருமாவளவனால் இயலும். 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதைப் போன்ற ஒரு நிகழ்வு நேரிட்டது. 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பா.ஜ.க 161 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் 140 உறுப்பினர்களுடன் இருந்தது. இந்த இரண்டு கட்சிகளாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. அப்போது இரட்டை இலக்க எண்ணிக்கை கொண்டிருந்த ஜனதா தளம் (46), சமாஜ்வாதி கட்சி (17), இந்திய கம்யூனிஸ்டு (12), தமிழ் மாநில காங்கிரஸ் (20), தி.மு.க (17) ஆகிய கட்சிகள் சேர்ந்து ஐக்கிய முன்னணியை (112) உருவாக்கின. காங்கிரஸ் கட்சியும் (140) மார்க்ஸிஸ்டு கட்சியும் (32) ஐக்கிய முன்னணியை வெளியிலிருந்து ஆதரித்தன. 284 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தேவ கவுடாவும் ஐ கே குஜ்ராலும் பிரதமர்களாக இருந்தனர். ( ஐக்கிய முன்னணியின் பிரதமராக ஜோதிபாசு முன்மொழியப்பட்டார். மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ அதனை பரிசீலித்து அந்த வாய்ப்பை ஏற்க வேண்டாம் என முடிவெடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னால் ஜோதிபாசு அந்த முடிவை மார்க்ஸிஸ்டுகள் செய்த ‘’இமாலயத் தவறு’’ என்று கூறினார். 

1996ல் ஜோதிபாசுவுக்கு கிடைத்த வாய்ப்பு தமிழக அளவில் இப்போது திருமாவளவனுக்குக் கிடைத்திருக்கிறது. திருமாவளவனால் தற்போதைய நிலையில் குறைந்தபட்சம் இரு கம்யூனிஸ்டு கட்சிகளை இணைத்து ஒரு முன்னணியை உருவாக்க முடியும். ‘’சமூகநீதி முன்னணி’’ என ஒரு முன்னணியை உருவாக்கலாம். தற்போது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6. அதில் மேலும் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களை இணைக்க முடியும். ஒற்றை இலக்கத்தின் உச்சபட்சமான எண்ணான 9 உறுப்பினர்கள் ‘’சமூக நீதி முன்னணி’’யில் இருப்பார்கள் என்றால் தமிழக சட்டசபையின் முதல் இடத்தில் இருக்கும் கட்சியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் கட்சியோ அல்லது முதல் இடத்தில் இருக்கும் கட்சியுடன் மூன்றாம் இடத்தில் இருக்கும் கட்சியோ இணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தின் இரண்டாவது மூன்றாவது இடத்தில் இருக்கும் கட்சிகளும் ‘’சமூக நீதி முன்னணி’’ அல்லாத பிற சிறு கட்சிகளும் இணைந்தால் கூட அவர்களிடம் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இருக்காது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் கட்சிகள் என்பதை எவரும் குறைந்தபட்சமாகவேனும் ஏற்பார்கள். ஐக்கிய முன்னணியைப் போல ‘’சமூக நீதி முன்னணி’’ உருவானால் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் காண்போம். 

காட்சி 1
--------------

விடுதலைச் சிறுத்தைகளும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் ‘’சமூக நீதி முன்னணி’’ ஆட்சியமைக்கும். தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக, காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகள் ‘’சமூக நீதி முன்னணி’’க்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும். விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஆவார். சமூக நீதி முன்னணியின் 9 உறுப்பினர்களும் அமைச்சர்கள். ( 1990ம் ஆண்டு மத்திய அரசில் சந்திரசேகர் பிரதமராயிருந்த போது மிகச் சிறு எண்ணிக்கையே (60) அவரிடம் இருந்தது. காங்கிரஸ் (191) வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து அந்த அரசு நீடித்தது. சந்திரசேகரின் சமாஜ்வாதி ஜனதா கட்சியின் 60 உறுப்பினர்களில் 32 பேர் சந்திரசேகர் சர்க்காரில் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர்)

காட்சி 2
--------------

விடுதலைச் சிறுத்தைகளும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் ‘’சமூக நீதி முன்னணி’’க்கு தமிழக வெற்றிக் கழகம் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும். 

போட்டியிடும் முதல் தேர்தலில் தமிழக மக்கள் பெரும் ஆதரவை அளித்திருப்பதால் தமிழக மக்கள் மேல் மேலும் ஒரு தேர்தலைத் திணிக்காமல் இருக்கவும் அதிகாரம் மட்டுமே தங்கள் இலக்கு அல்ல என்பதைக் குறியீட்டு ரீதியில் காட்டவும் தமிழக வெற்றிக் கழகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். 

காட்சி 3
-------------

விடுதலைச் சிறுத்தைகளும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் ‘’சமூக நீதி முன்னணி’’க்கு தி.மு.க வும் அதிமுக வும் இணைந்து வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும். காங்கிரஸின் ஆதரவும் வெளியிலிருந்து கிடைக்கும். 

இன்றைய சூழல் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் மிகவும் சாதகமாக உள்ளது. தமிழகத்தில் ஓர் அரசு அமைய இன்று விடுதலைச் சிறுத்தைகளின் இரு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இல்லாமல் எதுவும் நிகழாது. பெரிய கட்சிகள் ஏதேனும் திட்டமிட்டால் கூட இந்த 9 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் நிகழாது. 

இது ஒரு நல்வாய்ப்பு. இதனை முழுமையாக திருமாவளவன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

திருமாவளவன் முதல்வராக பதவியேற்றால் என்ன நன்மைகள் நிகழும் ?

1. தமிழக அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகளாக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்ததில்லை என்னும் நிலை மாறும். ஒவ்வொரு தொகுதியிலும் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை வாக்காளர்களைக் கொண்டிருக்கும் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுக்கும் வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வரும் பட்டியல் சாதி மக்களுக்கு முதல் முறையாக பெரிய அரசியல் அதிகாரமான முதலமைச்சர் பதவி கிடைக்கும். 

2. தமிழக அரசியல் வரலாற்றில் ஐயங்கார் (2), நாடார் (1), முதலியார் (2), இசை வேளாளர் (2), மேனன் (1), முக்குலத்தோர் (1), கவுண்டர் (1) ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்கள். தமிழக மக்கள் தொகையில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கொண்ட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆனதில்லை. இந்நிலையை மாற்ற திருமாவளவனால் முடியும். 

3. ‘’சமூகநீதி முன்னணி’’க்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகளிடம் கலந்து பேசி திருமாவளவனால் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதன் படி ஆட்சி அமைத்துக் கொள்ளலாம். 

4. தமிழகத்தில் காமராஜ் அமைச்சரவை 9 அமைச்சர்களைக் கொண்ட சிறிய அமைச்சரவை எனக் கூறுவார்கள். அதே போல் ஒரு சிறிய அமைச்சரவையை திருமாவளவன் வழிநடத்த முடியும். 

5. திருமாவளவன் அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் தில்லி நாடாளுமன்றம், எல்லா அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள், அண்டை மாநில முதல்வர்கள் என அனைவரிடமும் அறிமுகமும் பரிச்சயமும் உள்ளவர் என்பதால் நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியும். 

6. திருமாவளவன் ‘’சமூகநீதி முன்னணி’’ அமைத்து முதலமைச்சர் ஆக முடிவெடுத்தால் எந்த அரசியல் கட்சியாலும் அதனை வெளிப்படையாக எதிர்க்க முடியாது. ஆட்சி ஏதும் அமையாமல் போனால் 6 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்தல் என்னும் நிலையில் ‘’சமூகநீதி முன்னணி’’யை ஆதரிக்காமல் போனால் பட்டியல் சாதியினரின் 25 சதவீத வாக்குகள் அந்தக் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பும். அது அந்தக் கட்சிகளுக்கு பேரிழப்பாக முடியும். 

7. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்ததில்லை. எனவே உறுப்பினராகி ஆறு மாதத்துக்குள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்காமல் சட்டசபை உறுப்பினர் ஊதியம் கூட பெறாமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எந்த உறுப்பினரும் விரும்ப மாட்டார்கள். 

8. திருமாவளவன் அமைக்கும் ‘’சமூகநீதி முன்னணி’’க்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். மத்தியில் ஆளும்கட்சிக்கு எதிரான எல்லா பெரிய கட்சிகளும் அதிகாரத்திலிருந்து ‘’சமூகநீதி முன்னணி’’யால் விலக்கி வைக்கப்படுவதால் ‘’சமூகநீதி முன்னணி’’யின் ஆட்சியை தில்லி விரும்பவே செய்யும். 

9. திருமாவளவன் முதலமைச்சர் ஆவது குறியீட்டு ரீதியில் பட்டியல் சாதியினரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஒரு சாதனையைச் செய்தவராவார் திருமாவளவன். 

10. ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் வறுமையை முழுமையாக உணர்ந்து தன் தன்னம்பிக்கையாலும் தளரா ஊக்கத்தாலும் பொதுவாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றி நுட்பமான சமூகப் புரிதலும் ஆழ்ந்த அரசியல் அறிவும் சிறப்பான கல்வியும் கொண்டிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வரானால் அது தமிழக வரலாற்றின் மகத்தான அரசியல் நிகழ்வாக அமையும்.