Sunday, 31 March 2019

ஓர் இனிய தடாகம்

செம்பொன்னார் கோவிலிலிருந்து
நல்லாத்தூர்
செல்லும் வழியில்
இடது பக்கத்தில்
பச்சையாய் இலைகள்
எப்போதும் மூடியிருக்கும் குளப்பரப்பில்
ஒவ்வொரு சதுரடியிலும்
மலர்ந்திருக்கிறது
தாமரை
ஈர்க்கப்பட்டு
இறங்கினேன்
வழவழக்கும் கெண்டைகள்
உரசிச் சென்றன
சில்லென்ற உணர்வில்
நீரசைவில் எழுந்தன
மலரில் மறைந்திருந்த
தேன் சிட்டுகள்
ஓர் இனிய உறவைப் போல
ஓர் இனிய நினைவைப் போல
ஓர் இனிய தடாகமும்
வாழ்க்கையில்
எதிர்ப்படவே செய்கிறது

Saturday, 30 March 2019

மலர் மாலை

அஸ்தமன சூரியன்
வீடு திரும்பும்
நெஞ்சங்களில்
அமைதியை
வழங்கும்
வசந்த கால அந்தியில்
வயல் வெளிகளின்
நடுவே
விண் பூக்களுக்குக் கீழே
மலர்கிறது
மாலையின் முதல் மலர்
தன் தூய்மையின்
நறுமணத்தால்
வசந்தத்தை
பூக்கச் செய்யும் மலர்

Thursday, 28 March 2019

ஆழித்தேர்

தீ யென
வான் நோக்கி எழுந்துள்ளது
ஆழித்தேர்
தியாகராஜர்
கிளம்பி வந்திருக்கிறார்
நகர் பார்க்க
ஜனம் பார்க்க
சுற்றிலும்
மறை ஒலிக்க
தேவாரம் கேட்க
நாகஸ்வரம் இசைக்க
மாலை அந்தியில்
தேரின் கீழ்
குழுமி நிற்கின்றனர்
ஆயிரம் மானுடர்
எப்போதும்
கோபுரத்தில் தங்கும் புறாக்கள்
உற்சாகமாய் சுற்றி சுற்றி
அமர்ந்து கொண்டன
தேரின் மேல்
சங்கொலி கேட்கத் துவங்குகிறது
அவ்வொலியில் காட்சியாகிறது
ஆயிரம் ஆண்டுகள்

துவாரபாலகர்கள்

ஏக முத்திரை காட்டி
நின்றிருக்கின்றனர்
துவாரபாலகர்கள்
பெரிய
மிகப் பெரிய
உருவத்துடன்
பெருமாள் சயனித்திருக்கிறார்
பட்டர் வீட்டுக்குச் சென்றிருக்கும் போது
பூட்டிய
கதவுக்கு முன்னால் அமர்கின்றனர்
சாமி கும்பிட வந்தவர்கள்
காத்திருக்கும் அவகாசத்தில்
கவனிக்கின்றனர்
துவாரபாலகர்களை
கதவு எப்போது திறக்கும்
என்ற கேள்வி மனதில்
உள்ளேயிருப்பவனுக்கு
எல்லாம் தெரியும்
என்ற ஒரே பதில்
மட்டும்
எப்போதும்
இருக்கிறது
துவாரபாலகர்களிடம்

Wednesday, 27 March 2019

காத்திருத்தல்

திரை மூடியிருக்கிறது
யதார்த்தத்தின்
இடைவெளியின்
தவிர்க்க முடியாமையின்
திரை
பக்தன் காத்திருக்கிறான்
திரை விலக
காண்கிறான்
ஒளிரும் சுடர் முகம்
ஒளிரும் தன் அகம்

மர்ஃபி யார்

மர்ஃபி யார்
நண்பன் கேட்டான்
மர்ஃபி
ஒரு குழந்தை
பல குழந்தைகள்
எல்லா குழந்தைகள்
ஒரு சிறுவன்
பல சிறுவர்கள்
மர்ஃபி
அன்றாடத்தை ஒளிரச் செய்யும் வைரம்
கண நேர அமிர்தம்
மர்ஃபி
ஒரு தெய்வப் புன்னகை

Tuesday, 26 March 2019

இரவு வெள்ளம்

நள்ளிரவில்
அறையில் கேட்கும்
கடிகார ஒலி
இருளின் அடர்த்தியுடன்
தவிக்கும் தனிமையாய்
சென்று வருகிறது
இங்கும் அங்கும்
நிகழ்காலத்திலிருந்து
கடந்த காலத்திற்கு
நிகழ்காலத்திலிருந்து
நிகழ் காலத்திற்கு

வீதிகளில்
ஓசையற்றுப் பாய்கிறது
வெண்மதி
வெள்ளம்

Monday, 25 March 2019

ஒளி மலர்

ஒரு கணத்தில்
ஒரு நாளில்
ஒரு மாதத்தில்
ஒரு வருடத்தில்
ஒரு வியாழ வட்டத்தில்
ஒரு முழு ஆயுளில்
எப்போதாவது
நிகழ்கிறது
ஒரு மலர்தல்

கடலின்
எழும் அலையின்
மடிப்பில்
ஒளிர்கிறது
வெண்திங்கள்

Sunday, 24 March 2019

சமர்ப்பணம்

யாவற்றையும்
சமர்ப்பித்த பிறகு
கருவறை நீங்கிய மகவாக
உலகம்
பார்க்கப்படுகிறது
புதிதாக

Saturday, 23 March 2019

ரங்கர் தேர்

ரங்கர் தேர் தயாராகிறது
பலப்பல கொடிகள் சிறகசைக்க
வண்ணப் பதாகைகள் மிதக்க
மர்ஃபி சப்பரம் வாங்கியுள்ளான்
வீட்டிற்கு
உள்ளும் வெளியும் இழுத்துக் கொண்டிருக்கிறான்
போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது
ஐம்பது வருடமாக
பலூன் விற்கும் பெரியவர்
பக்கத்து வியாபாரியிடம் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு
தேனீர் அருந்தச் சென்றிருக்கிறார்
ஊதுகுழல் விற்பவன்
ஒரு ஹிந்திப் பாட்டை
காற்றில் பரவ விடுகிறான்
அன்னை ஒக்கலில் அமர்ந்த குழந்தை
நூதனமாய்ப் பார்க்கிறது
தேரோட்டத்தை
தன் அன்னையுடன் வந்த நாட்களை
நினைவில் மீட்டுக் கொள்கிறாள்
குழந்தையின் அன்னை
யானை போல் அசைய ஆரம்பித்தது
ரங்கர் தேர்