Sunday, 13 December 2020

ஆசான் சொல் - 15

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து. (879)

இந்த குறளில், முள்மரம் என்ற படிமம் வருகிறது. இதில் எனக்கு ஒரு அனுபவம் உண்டு. 

செயல் புரியும் கிராமத்தில், பல இடங்களில் முள்மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. அவை அவற்றை விட பயன்மிக்க மரங்கள் வளர வேண்டிய இடத்தில் வளர்கின்றன. 

இந்த முள் மரங்களை வளர்க்க யாரும் முனையத் தேவையில்லை. மக்களின் முயற்சியின்மையின் விளைவுகள் இவை. துவக்கத்தில் மிகச் சிறிதாக இருக்கும். அப்போதே அவற்றை அழித்தல் எளிது. செயலார்வம் இன்றி அதனை வளர விட்டால் அவை வளர்ந்து பெரும் தடைகளாக இருக்கும் போது நீக்க முயன்றால் அவற்றை நீக்குவது நாம் எண்ணுவதை விடக் கடினமாக இருக்கும்.  பெரும் செலவு பிடிக்கக் கூடியதாக மாறும்.

ஒரு விவசாயியின் தோட்டத்து வேலிக்கு அருகில் முள்செடி ஒன்று முளைத்தால் அதனை கையில் இருக்கும் அரிவாளால் வெட்டி நீக்கி விடலாம். அதுவே சில மாதங்களில் மரமாகி விட்டதென்றால் அதனை கூலி கொடுத்து ஆள் வைத்து வெட்டுமாறு ஆகிவிடும். 

திருவள்ளுவர் முள்செடி எனச் சொல்லாமல் ’’இளைய முள்மரம்’’ என்கிறார். 

பகையையும் பகைவர்களையும் ஓர் அரசன் வளர்த்து விடக் கூடாது; ஒன்று நீக்கிவிட வேண்டும் அல்லது அழித்து விட வேண்டும் என்கிறார்.