Sunday, 13 December 2020

ஒருங்கிணைதல்

தமிழ்நாட்டின் வரலாற்றில் சிக்கலான விஷயம் ஒன்று உண்டு. 

இந்திய விடுதலைக்குப் பின், ஈ.வெ.ரா-வின் அமைப்பு பிளவு பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஈ.வெ.ரா காங்கிரஸை ஆதரித்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அவர் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்தார். காங்கிரஸ் அதனை ஏற்ற வண்ணம் இருந்தது. 

அன்றும் - இன்றும் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், ராஜாஜி போன்ற மகத்தான மனிதர்களின் மகத்தான தலைமையால் வழிநடத்தப்பட்ட கட்சி. மகாத்மாவின் வழிகாட்டுதலின் படி, சமூக முன்னேற்றத்துக்கு பல்வேறு விதங்களில் பல ஆண்டுகள் செயலாற்றிய இயக்கம். ஆச்சார்ய வினோபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற காந்தியர்கள் விடுதலைக்குப் பின்னர் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு செயல்களை செய்து கொண்டிருந்தனர். காந்திய வழிமுறை ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் நல்லெண்ணப் பரவலையும் நம்புவது. 

ஈ.வெ.ரா எதிர்மறையான உணர்வை உருவாக்கக் கூடியவர். எதிரி என ஒன்றைக் கட்டமைத்து உலகின் எல்லா சிக்கலுக்கும் அதுவே காரணம் என்று கூறி அது நீக்கப்பட்டால் மக்கள் நலம் நிகழும் என்ற பரப்புரையை ஓயாமல் முன்வைத்தவர். அது நாஜிக்களின் வழிமுறை. அவரும் அவரது இயக்கமும் தமிழ் மக்களின் மனத்தில் இந்த வெறுப்பையே ஓயாமல் விதைத்தனர். கடவுள், சமயம், பண்பாடு, தேசியம் என அனைத்தின் மீதும் தன் வாழ்நாள் முழுதும் தாக்குதல் தொடுத்தவர் ஈ.வெ.ரா. அவருடைய ஆதரவை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது என்பது ஒரு மாபெரும் தவறு. ஒரு தேசியக் கட்சியாக காங்கிரஸ் இந்திய தேசியத்தை ஏற்கும் கட்சி. ஈ.வெ.ரா இந்திய தேசியத்தை எதிர்த்தவர். இந்த இரு சக்திகளும் ஒன்றாகப் பயணித்ததால் பெரும் அழிவு காங்கிரஸ் கட்சிக்கே நிகழ்ந்தது.

ஈ.வெ.ரா காங்கிரஸை ஆதரித்த காலகட்டத்தில் ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் பலர் காங்கிரஸில் நிரம்பத் துவங்கினர். 1967ம் ஆண்டுக்குப் பின்னர், ஈ.வெ.ரா காங்கிரஸின் அரசியல் எதிரிகளை ஆதரிக்கத் துவங்கினார். எனினும், அதன் பின்னரும் காங்கிரஸ் கட்சியில் ஈ.வெ.ரா ஆதரவாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. 

தேசிய ஒருமைப்பாடு என்பது மகத்தானது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு உழைக்க ஓர் அரசியல் செயல்பாட்டாளன் இந்திய வரலாறு, இந்தியப் பண்பாடு, இந்திய நிலவியல், இந்தியாவின் எண்ணற்ற சமூகங்கள், இந்தியப் பொருளியலின் இயங்குமுறை, இந்தியாவின் பண்டைய பேரரசுகள், இந்திய இலக்கியம், விடுதலைக்கு உழைத்த மகத்தான ஆளுமைகளின் பங்களிப்பு, இந்திய சமயங்கள், இந்தியாவின் ஞான மரபு  ஆகியவை குறித்து அறிந்திருக்க வேண்டும். அவற்றின் பின்புலத்தில் எந்த விஷயத்தையும் அணுகி சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி காங்கிரஸ் தொண்டர்களிடம் இவை அத்தனையையும் எதிர்பார்த்தார். அவரது ''Collected works of Mahatma Gandhi'' நூலின் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அது குறித்தே பேசுகின்றன. 

ஒரு தேசமாக - ஒரு பொருளாதாரமாக நாம் எவ்வளவோ தொலைவைக் கடந்து வந்திருக்கிறோம். ஒருங்கிணைதலே வளர்ச்சிக்கான வழி என்கிறது இந்திய மரபு. ஒரு தேசியவாதி நேர்மறையான அணுகுமுறையுடன் யாவற்றையும் ஒருங்கிணைக்கவே முயல்வான்.