இன்று மாலை வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோவில். தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைக்கு முதல் முடி எடுப்பதை இங்கு தான் செய்வார்கள். இரண்டாம் முடி திருப்பதியில் எடுப்பார்கள்.
இங்கே இறைவன் பிணி தீர்க்கும் மருத்துவனாக - வைத்தியநாதனாக - இருக்கிறான். உடலின் பிணிகளையும் மனத்தின் பிணிகளையும் தீர்க்கக் கூடியவன். ஜீவன்களின் உடல் பிணியை இறைவனின் கருணையால் நீக்க முடியும். ஜீவன்களின் மனப் பிணியை இறைவன் உணர்த்தும் ஞானத்தால் நீக்க முடியும்.
காரைக்குடி - சிவகங்கை பகுதிகளில் முத்தையா, முத்துக்குமார், செல்வ முத்துக்குமார் ஆகிய பெயர்கள் அதிகம் இருக்கும். கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கும் முருகனின் பெயர் செல்வ முத்துக்குமரன். தனவணிகர்களின் குலதெய்வம் அந்த முருகன். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இந்த ஊருக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயர் உண்டு. புள் + ரிக் + வேள் + ஊர் . பறவையாகிய (புள்) ஜடாயுவும் ரிக் வேதமும் முருகப் பெருமானும் வைத்தியநாத சுவாமியை வணங்கியதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர். ஸ்ரீராமன் ஜடாயுவுக்கு இங்கே ஈமக்கிரியைகள் செய்ததாக ஐதீகம்.
இங்கே மக்கள் இறைவனை வணங்கி பெரும் நம்பிக்கையுடன் இல்லம் திரும்புவதைக் காண முடியும். நம் பிணிகள் அனைத்தும் நீங்கும் என்ற நம்பிக்கையின் விளைவு அது. பிணிகள் எம்மை நெருங்காதிருக்கட்டும் என்ற பிராத்தனையை இறைவன் முன் வைத்து மனபாரம் நீங்குவதன் விளைவு அது.
நான் இந்தியாவெங்கும் கவனித்த விஷயம் ஒன்று உண்டு. ஆலயத்தில் வழிபடுபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்காகவே வேண்டிக் கொள்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு காவலாக இருந்து அவர்களை அரணாகக் காக்குமாறு உளம் உருகி பிராத்தனை செய்கிறார்கள். சிவபெருமான் அவர்களுக்கு தீமையை அழிக்கும் கடவுள். தீ வடிவானவன். நஞ்சன்கூடின் நஞ்சுண்ட சுவாமி, உஜ்ஜைனின் மகாகாலேஷ்வர் ஆகிய ஆலயங்கள் நினைவில் எழுகின்றன.
ஆலயத்தில் ஏழு தீபங்கள் ஏற்றி வழிபட்டேன். ‘’காவிரி போற்றுதும்’’ கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏழு தீபங்கள் ஏற்றியதிலிருந்து ஏழு என்ற எண்ணிக்கை மனதுக்கு நெருக்கமாகி விட்டது.
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது எளிய மிக அழகிய உணர்வு வெளிப்பாடு; செயல்பாடு. ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்ற குறைந்தபட்ச உடல் - மன - உணர்வு ஒருங்கிணைப்பு தேவை. தீபம் ஏற்றுகையில் இயல்பாகவே உடல் - மன- உணர்வு ஒருங்கிணைப்பு ஏற்படுவதை உணர முடியும். ஒரு தீபம் ஏற்றும் போது நம் மனம் ஒரு விடுபடலை ஒரு விடுதலையை அடைவதை நம்மால் உணர முடியும்.
சோழ அரசர்கள் பேராலயங்களை அமைத்து அவற்றில் சூரிய சந்திரர் உள்ளவரை தினமும் தீபங்கள் ஒளிர வேண்டும் என்று விளக்கேற்றுவதற்கான நிவந்தங்களை அளித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் அனைத்தும் தீப ஒளியால் நிறைய வேண்டும். குறைந்தபட்சம் மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரையாவது ஒவ்வொரு பேராலயத்திலும் 1000 தீபங்களாவது ஒளிர வேண்டும்.
அழகால் நுட்பத்தால் மேன்மையால் அகம் மகிழும் போது மனித மனம் மலர்கிறது. ஆலயம் அவ்வாறான ஒரு வாய்ப்பு.
ஆலயத்திலிருந்து திரும்பும் போது, நல்ல மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்ற நம்பிக்கை மனதில் உறுதியாக இருந்தது.
இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க என்கிறது உபநிஷத்.