Tuesday, 15 December 2020

கூடித் தொழில் செய்

எனது உறவுக்கார பையன் நேற்று வந்திருந்தான். அவனைக் கைக்குழந்தையாக தூக்கிக் கொஞ்சியிருக்கிறேன். மடியில் அமர வைத்து காகம், நாய், பட்சிகளைக் காட்டியிருக்கிறேன். இப்போது பெரிய பையனாகி விட்டான். இருப்பினும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவனைக் குழந்தையாகவே மனம் எண்ணுகிறது. என்னிடம் ஏகப்பட்ட வினாக்களை எழுப்புகிறான். என்னை அவன் அறிந்த அளவுகோல்களின் படி மதிப்பீடு செய்கிறான். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். என் மீது அன்பும் பிரியமும் கொண்டவன். 

மாலை 4.30 அளவில் ‘’அண்ணா! ஒரு வாக் போவோமா?’’ என்றான். 

நான் அவனுடன் கிளம்பினேன். 

‘’உனக்கு இந்த வருஷம் கோர்ஸ் முடியப் போகுது இல்லையா?’’

‘’ஆமாம் அண்ணா.’’

‘’கோர்ஸ் முடிஞ்சப்புறம் என்ன பிளான்?’’

‘’சர்வீஸ் கமிஷன் எக்ஸாம் எழுதலாம்னு பாக்கறேன்.’’

‘’என்ன தம்பி! இந்த காலத்துல கவர்மெண்ட் வேலைக்குப் போறன்னு சொல்ற. அதெல்லாம் பழைய ஸ்டைல். ஏதாவது பிஸினஸ் பண்ணு. ஆண்ட்ரபிரானரா ஆகு. அதுதான் மனசுக்கு நிறைவையும் சந்தோஷத்தையும் தரும்.’’

‘’பிஸினஸ் ஸா? எனக்கு பிசினஸ் பத்தி எதுவும் தெரியாதே?’’

‘’கவர்மெண்டு ஆஃபிஸ் வேலை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? 

அவன் யோசித்தான். 

‘’அது பத்தியும் எனக்கு ஏதும் தெரியாது?’’

‘’அப்புறம் எப்படி கவர்மெண்ட் வேலைக்குப் போகணும்னு முடிவு பண்ண?’’

அவன் மௌனமாக இருந்தான். சிறிது நேரம் கழித்து , ‘’பிஸினஸ்ல ரிஸ்க் இருக்குமே?’’ என்றான். 

‘’பெரிய மூலதனம் போடாத. சின்ன மூலதனம் போடு. ஒரு சில வருஷம் ஸ்டெடி பண்ணு. அப்புறமா தொழிலை விரிவாக்கு.’’

‘’என்ன தொழில் செய்யலாம்?’’

‘’ஒரு சின்ன கடை ஆரம்பி. தரமான பொருட்களா வாங்கி வை. செல்ஃபோன் ரீ-சார்ஜ், ஈ.பி பேமெண்ட் எல்லாம் செஞ்சு கொடுக்கற மாதிரி ஒரு லேப்டாப் ஏற்பாடு பண்ணிக்க. பிஸினஸ் நல்லா போகும் தம்பி. ஒரு இங்கிலீஷ் பழமொழி கேட்டிருக்கியா? ‘’Keep the shop; and the shop will keep you''

''மளிகைக் கடை இல்லாம வேற ஏதும் ஐடியா இருக்கா?’’

‘’உனக்குத்தான் மெஷின்ஸ் மேல சின்ன வயசுல இருந்தே ஆர்வம் இருக்கே; ஒரு டூ-வீலர் ஒர்க் ஷாப் ஆரம்பி. காலைல 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் கடை உண்டுன்னு சொல்லு. நைட்ரஜன் கேஸ், வாட்டர் சர்வீஸ், எல்லாம் அந்த கடையில இருக்கற மாதிரி பாத்துக்க. கடை நல்லா போகும் தம்பி. நீ ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கலாம்.’’

‘’நல்ல ஐடியா’’ என்றான். 

‘’நாட்டுப் பசுமாடு 10 வாங்கி வச்சுக்க. அதுக்கு புல் கொடுக்க ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்க. மாட்டை மெயிண்டன் பண்ணு. நீ பால் விக்க வேண்டாம். அந்த பாலைத் தயிராக்கு. தயிரைக் கடைஞ்சு வெண்ணெய் எடு. நெய் வியாபாரமும் மோர் வியாபாரமும் பண்ணு. நீ கொடி கட்டிப் பறப்ப’’

அவன் புன்னகைத்தவாறு நடந்து வந்தான். 

‘’பிரபு அண்ணா! நீங்க சொல்ற ஐடியா எல்லாம் நல்லாதான் இருக்கு. நான் எது எனக்கு செட் ஆகும்னு யோசிக்கறன்.’’

‘’நான் எனக்குத் தெரிஞ்சத சொன்னன். உன்னால என்ன தொழில் செய்ய முடியும்னு உனக்கே ஒரு ஐடியா இருக்கும். அத எக்ஸிகியூட் பண்ணு.’’

‘’ அண்ணா! ஏன் நம்ம சொஸைட்டி-ல கவர்மெண்ட் வேலையை பெருசா நினைக்கறாங்க?’’

‘’பிரிட்டிஷ் காலகட்டத்துல இந்த மனோபாவம் வந்துச்சு. அவங்க நம்ம நாட்டோட விவசாயத்தையும் தொழில்களையும் அழிச்சாங்க. இந்தியாவை பொருளாதார வறுமையில் வச்சுக்கறது தான் அவங்களுக்கு லாபம். இந்தியா பொருளாதாரத்துல வளர்ந்தா வெளிநாட்டுக் காரங்களான அவங்களுக்கு எதிரா மக்கள் ஒன்னு கூடிடுவாங்கன்னு அவங்க பயந்தாங்க. நம்ம நாட்ல ஒரு மகத்தான எஜுகேஷன் சிஸ்டம் இருந்துச்சு. சமூகத்துல எல்லாருக்கும் கல்வி கற்க பலவிதமான வாய்ப்புகள் இருந்துச்சு. எழுத்தறிவு இல்லாதவங்க கூட கணக்கு அறிவோட இருந்தாங்க. மெக்காலே கல்வித் திட்டம் கிளார்க்குகளை மட்டுமே உருவாக்கும். இப்பவும் அதே மனநிலை தொடர்ந்து கிட்டு இருக்கு.’’

‘’தொழில் லாபமானதா இருக்குமா?’’

‘’உன்னைச் சுத்தி திரும்பிப் பார். எத்தனை மனுஷங்க தொழில் செய்யறாங்கன்னு. டெய்லர், கடை காரர், தேனீர்க்கடை காரர், சலூன், பாத்திரம் விக்கறவர், காய்கறி விக்கறவர், பிரிண்டிங் பிரஸ், டாடா ஏஸ் ஓட்றவர், கார் மெக்கானிக் ... அவங்க கவர்மெண்ட் ஆஃபிஸ்ல வேலை பாக்கறவங்களை விட சந்தோஷமாத்தான் இருக்காங்க’’

‘’ஒரு கவர்மெண்ட் ஆஃபிசருக்கு கிடைக்கற சம்பளம் இவங்களுக்கு கிடைக்குமா?’’

‘’அவங்கள்ள கவர்மெண்ட் ஆஃபிசரை விட குறைவான வருமானம் உள்ளவங்க இருப்பாங்க. கவர்மெண்ட் ஆஃபிசர் அளவு சம்பாதிக்கறவங்க இருப்பாங்க. ஆச்சர்யப்படற விதத்துல கவர்மெண்ட் ஆஃபிசர் சம்பளத்தைத் தாண்டியும் சம்பாதிக்கிறவங்க இருப்பாங்க.’’

’’நான் நிச்சயமா ஏதாவது நல்ல பிஸினஸ் பண்றேன் அண்ணா!’’