Wednesday, 16 December 2020

சேவை

நான் பள்ளியில் படித்த போது எங்களுக்கு ஏழாம் வகுப்பில் ஒரு ஆசிரியை வகுப்பெடுத்தார். அவர்தான் எங்கள் வகுப்பாசிரியை.  தமிழும் அறிவியலும் அவரது பாடங்கள். நான் வகுப்பில் மாணவர் தலைவன். எங்கள் வகுப்பை அமைதியாகப் பார்த்துக் கொள்வது என் வேலை. டீச்சர் எங்கள் அனைவரின் மேலும் மிகவும் பிரியமாக இருப்பார். அவரது குழந்தைகள் போல எங்களை நடத்துவார். ஒரு மனிதர் இன்னொரு மனிதர் மேல் அத்தனை அன்பு காட்ட முடியுமா என்பது இப்போது எண்ணிப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. எனது அம்மா என் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். ஆகையால் நான் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மாணவனாக இருப்பேன். டீச்சருக்கு என் மேல் ரொம்ப பிரியம் உண்டு. அவர்கள் பாடத்தில் மட்டுமல்ல வேறு ஏதாவது பாடத்தில் எனக்கு மதிப்பெண் குறைந்தால் கூட டீச்சர் ரொம்ப வருத்தப்படுவார்கள். ’’நான் தான் டீச்சர் முதல் மார்க்’’ என்பேன். எல்லா பாடத்திலும் நான் 90 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் மட்டுமே டீச்சர் திருப்தி அடைவார்கள். மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் எடுக்க வேண்டும் என்பதிலும் அதே முனைப்பைக் காட்டுவார்கள். பள்ளி முடிந்ததும் ஒருமணி நேரம் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு எடுப்பார்கள். டீச்சருக்கு உதவுவதற்காக நானும் அந்த வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு உதவுவேன். அதன் பின்னர்தான் நான் வீட்டுக்குச் செல்வேன். 

டீச்சருடைய மாமியாருக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ‘’மருத்துவ விடுப்பு’’ எடுக்க வேண்டிய நிலை வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம். அப்போது டீச்சர் இல்லாத போது வகுப்புகளை நான் தான் பார்த்துக் கொண்டேன். எனக்கு மிகச் சிறு வயதிலேயே தமிழார்வமும் வாசிப்புப் பழக்கமும் உண்டு என்பதால் அந்த ஒரு மாதமும் தினமும் இரண்டு பிரிவேளைகள் ( 45+ 45= 90 நிமிடம்) வகுப்பு நான் தான் எடுப்பேன். பக்கத்து வகுப்பு ஆசிரியர்கள் என்ன ஒரு மாணவன் பாடம் எடுக்கும் சத்தம் கேட்கிறதே என்று ஆச்சர்யமாக வந்து பார்த்து விட்டு செல்வார்கள். இப்போது யோசித்துப் பார்த்தால் நான் வகுப்பை சுவாரசியமாக எடுத்திருப்பேன் என்று தான் நினைக்கிறேன். வகுப்பில் 45 மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் நான் வகுப்பு எடுக்கும் போது அமைதியாக இருப்பார்கள். தினமும் வருகைப்பதிவை குறித்துக் கொண்டு போய் டீச்சர் வீட்டில் சொல்வேன். அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்வேன். டீச்சர் அறிவியல் பாடத்துக்கான குறிப்புகளையும் கேள்வி பதில்களையும் என்னிடம் தருவார்கள். நான் அதைக் கரும்பலகையில் எழுதிப் போடுவேன். அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே எனக்கு உணவளிப்பார்கள். அவரது உறவினர்களுக்கெல்லாம் என்னைப் பற்றி சொல்வார்கள். விடுப்பில் இருந்தாலும் வாரம் ஓரிரு நாட்கள் எங்கள் வகுப்புக்கு வந்து பாடம் நடத்தி விட்டுச் செல்வார்கள். 

எனது வாகனத்தை சர்வீஸ் செய்ய ஒரு பணிமனைக்கு கொண்டு விடுவேன். அந்த மெக்கானிக் ஒரு இளைஞர். அவர் வாகனத்தை சர்வீஸ் செய்ய கேட்கும் தொகை மற்றவர்கள் கேட்பதில் 70% அளவுக்கே இருக்கும். நான் ஒவ்வொரு முறையும் இந்த பணிக்கு மற்ற மெக்கானிக்கள் எவ்வளவு வாங்குகிறார்களோ அதே அளவு தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவேன். அவர் கேட்க மாட்டார். நம்பிக்கையானவர். திறமையானவர். எனது பகுதியில் குடியிருப்பவர் ஒருவரிடம் எனது மெக்கானிக்கைப் பற்றி சொன்னேன். அவர் 10 வருடமாக தனது வண்டியை அந்த மெக்கானிக்கிடமே சர்வீஸ் செய்வதாகச் சொன்னார். மிகக் குறைந்த கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறுகிறார். அதை ஒரு பழக்கமாக வைத்துள்ளார்.என்று கூறினார்.

இந்த உலகில், தங்கள் அன்றாடத்தை தங்கள் அர்ப்பணிப்பின் மூலமும் தங்கள் மேலான புரிதல் மூலமும் தங்கள் மேலான செயல்முறைகள் மூலமும் சேவையின் மூலமும் அற்புதமாக்கும் எளிய மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாமல் எங்கும் நிறைந்துள்ளார்கள். அவர்களே உலகின் சாரம்.