2003ம் ஆண்டு கட்டுமானப் பொறியியலில் பட்டம் பெற்றேன். தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே எண்ணமாக இருந்தது. ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டினேன். பின்னர் ஒரு மனையை வாங்கி அதில் ஒரு அடுக்ககத்தை (Apartments) நிர்மாணித்தேன். என்னிடம் இன்னொரு மனை இருக்கிறது. அதில் இன்னொரு அடுக்ககத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளேன். மிகத் தரமான கட்டுமானத்தை அளிக்கிறோம் என்பது மனதுக்கு திருப்தியைத் தருகிறது.
சிறு வயதிலிருந்தே நதிகள் , மரங்கள் ஆகியவற்றின் மீது விருப்பம் உண்டு. மரத்தடியில் அமர்ந்து காவிரியைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது உள்ளத்துக்கு உவப்பானதாக இருக்கும். அப்போது சென்றமர்ந்த மரங்களின் நிழலில் இப்போதும் அவ்வப்போது சென்று அமர்கிறேன். சிறு வயதில், அங்கே அமர்ந்திருக்கும் போது ஏதோ ஒருநாள் என் வாழ்வில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நட்டு விருட்சமாக்க வேண்டும் என்று எண்ணினேன். அது எனக்கு சுவாரசியமான ஒரு எண்ணமாகத் தோன்றியது. அது எப்படி சாத்தியம் என எனக்குத் தோன்றிய வழிகளில் யோசித்துப் பார்த்தேன்.
முப்பது வயதுக்குள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டிய பின், ஒரு நாளைக்கு 10 மரக்கன்றுகள் என 30 வருடத்துக்கு நட்டால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடலாம் என எண்ணுவேன். சந்திப்பவர்களிடம் இதைச் சொல்வேன்; விவாதிப்பேன். நம்பிக்கை நிறைந்திருக்கும் மனம் எதையுமே சாத்தியம் என்றே எண்ணுகிறது.
நான் கல்லூரியில் படித்த போது ஒருவரைச் சந்தித்தேன். அவரும் நானும் நண்பர்கள் ஆனோம். சமீபத்தில், செயல் புரியும் கிராமத்தில் 20,000 மரக்கன்றுகள் நடப்பட்ட விபரத்தை எங்கள் பொது நண்பர் ஒருவர் அவரிடம் தெரிவித்திருக்கிறார். அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து 20 ஆண்டுகளுக்கு முன் முதல் சந்திப்பில் நான் சொன்னதை நினைவுகூர்ந்தார். ’’உங்களுக்கு அபாரமான ஞாபகசக்தி’’ என்றேன். ’’நினைவு வைத்திருந்து அதைச் செயலாக்கியிருக்கிறீர்களே; அது தான் முக்கியமானது’’ என்றார்.
தொடர்பு கொள்ளுதலும் உரையாடுவதும் ஆதரவு கோருவதும் பணியின் ஒரு பகுதியே. பணியின் கரங்களில் நான் ஒரு கருவியே. கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ கூறுகளால் இந்த விஷயம் நடக்கிறது. எனக்கு அது நன்றாகத் தெரிகிறது.
ஈஸ்வர ஹிதம்.