’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து நான் சந்திக்கும் நபர்களிடம் சுருக்கமாகவோ விரிவாகவோ சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல எடுத்துக் கூறுவதுண்டு. நாம் செய்யும் பணியைக் குறித்து எல்லா விபரங்களையும் பொதுமக்கள் முன்வைப்பது என்பது ஒரு பயனுள்ள செயல் என்பது என்னுடைய அனுபவம். பணியை நம் மனத்தில் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் புதிய வழிமுறைகளை வாய்ப்புகளை எவரும் முன்வைப்பார்களேயாயின் அவற்றை சேர்த்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பினால் அவர்களை நம் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளவும் ஒரு வழி கிடைக்கும் என்பதால் நான் அதனை முழுமையாகப் பயன்படுத்துவேன். அது ஒரு காந்திய வழிமுறை.
நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். ஒரு கிராமத்தில் ம்ரக்கன்றுகளை முகாந்திரமாகக் கொண்டு அங்கே முன்னெடுக்கும் வெவ்வேறு விஷயங்கள் குறித்து பேசும் போது பலர் என்னிடம் சில வினாக்களை எழுப்புவதுண்டு. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) என அவற்றை வகைப்படுத்திக் கொள்ள முடியும்.
1. கிராமத்தின் பணிகளைச் செய்ய உள்ளாட்சி அமைப்பு இருக்கிறது. அவற்றைக் கொண்டு அவற்றை நிகழ்த்த முயலலாமே?
ஒரு இந்திய கிராமம் என்பதை ‘’காவிரி போற்றுதும்’’ பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் மரபின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது. ஒவ்வொரு இந்திய கிராமமும் பன்னெடுங்காலமாய் இந்தியப் பண்பாட்டுக்கு தங்கள் பங்களிப்பை ஒவ்வொரு விதத்தில் அளித்து வந்திருக்கின்றனர். இல்லம், கிராமக் காவல் தெய்வங்கள், பெருதெய்வங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் என உயிர்த்துடிப்பான ஒரு மரபை ஒவ்வொரு கிராமமும் தங்கள் அடுத்த தலைமுறைக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கின்றன. பிரபஞ்சமே இறை வடிவம் என்றாலும் நாம் ஓர் ஆலயத்தில் நம் உணர்வால் மனம் குவித்து இறைவனை வழிபடுவது போல ஒரு கிராமத்துக்குச் செய்யும் பணியை ‘’காவிரி போற்றுதும்’’ பார்க்கிறது.
சமூக அரசியல் அதிகார அமைப்புகளில் போதாமை இருப்பதாலேயே நாம் அதனை மாற்ற நம்மால் ஆன முயற்சியாக சில செயல்களை முன்னெடுக்கிறோம். நாம் ஒரு விஷயத்தை செய்து காட்டுவோம். சூழ்நிலையை செயல் புரிவதற்கான ஒரு வாய்ப்பாகக் காண்போம்.
மக்களின் எண்ணத்தில் செயல்பாடுகளில் ஒரு விழிப்புணர்வின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முயல்கிறோம். கிராமம் என்னும் சிறு அலகுக்குள் அதனை முயல்வதால் பணியின் முன்னேற்றத்தைக் கண்ணால் கண்டு விடலாம் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் இலக்கு மட்டுமே எங்கள் கண்ணில் தெரிகிறது. அதுவன்றி வேறெதுவும் எங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.
2. விவசாயிகள் நலனுக்காக அரசு உணவு தானியத்தை நேரடி கொள்முதல் செய்கிறது. அது விவசாயிகளுக்கு இலாபமளிக்கிறது. இலவச மின்சாரம் தருகிறது. அதனால் விவசாயிகளுக்குப் பலன் உண்டு. அரசாங்கமே விவசாயம் தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ளுமே? உங்கள் செயல்களுக்கான அவசியம் எங்கு எழுகிறது?
விவசாயிகளின் மூலதனம் அவர்களுடைய நிலம். அந்த நிலத்தில் அவர்கள் மேற்கொள்ளும் தொழில் விவசாயம். ஒரு தொழில் லாபகரமாக இருக்கிறதா என்பதை அவர்களின் வருவாய் மூலம் அளவிடலாம். தமிழ்நாட்டில் மிக அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது. நாளுக்கு நாள் விவசாய வேலைக்கான பணியாளர் ஊதியம் பெருகிக் கொண்டே செல்கிறது. உரம், பூச்சிமருந்து ஆகியவை உற்பத்தி செலவில் அதிக பங்கு வகிக்கின்றன. எந்திரகதியாக விளைபொருட்களை அரசாங்கத்திடம் மட்டுமே விற்கின்றனர் விவசாயிகள். அதுவே பின்னர் அரிசியாகி கிராமத்துக்கு வருகிறது. ரேஷன் கடைகளில் அதனை கிராம மக்கள் வாங்குகின்றனர். இது மிக சிக்கலான ஒரு விஷயமாகிறது.
நாம் தேக்கு, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பழ வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். விவசாயம் இத்தனை பெரியதாய் இருக்கும் நாட்டில் நாம் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வது என்பது பொருளியல்ரீதியாக பெரும் பின்னடைவு. நாம் இறக்குமதி செய்யக் கூடிய விவசாயப் பொருட்களின் உற்பத்தியை ஒவ்வொரு கிராமமும் தன்னால் முடிந்த அளவு உற்பத்தி செய்யுமாயின் அது அந்த கிராமத்துக்கும் பலன் கொடுக்கும்; நாட்டுக்கும் பலன் கொடுக்கும்.
செயல் புரியும் கிராமத்தில் , ஒரு ஏக்கர் நிலம் உள்ள விவசாயியிடம் நாங்கள் 40 தேக்கு மரக்கன்றுகளைக் கொடுக்கிறோம். அவர்களுடைய வயல் வரப்பில் (ஒரு விவசாயிக்கும் இன்னொரு விவசாயிக்கும் இடையிலான பொது வரப்பில் அல்ல ; தனது உள்வரப்பில் மட்டுமாவது) நட்டுக் கொள்ளுமாறு சொல்கிறோம். மிகக் குறைந்த பட்சமான கவனமும் பராமரிப்பும் மட்டுமே முதல் சில மாதங்களுக்குத் தேவை. அதனை வழங்குமாறு பணிந்து கேட்டுக் கொள்கிறோம். அனைத்தும் நல்ல விதமாக நிகழுமென்றால் , ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு சிறிய விவசாயி, 15 ஆண்டுகளில் அந்த 40 மரங்கள் மூலம் ரூ. 20,00,000 ( ரூபாய் இருபது லட்சம் மட்டும் ) வருமானம் பெறுவார். அந்த கிராமத்தில் தேக்கு , மகாகனி, நெல்லி, கொய்யா, பலா என 20,000 மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். விவசாயிகளுக்குத் தேவையான ஒரு முன்னெடுப்பை எடுத்த நிறைவுடனும் அவர்களுக்கு சில ஆண்டுகளில் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம்.
3. தங்களுக்கு எது லாபம் தரும் என்பது விவசாயிகளுக்குத் தெரியாதா? உங்களுக்குத் தெரிந்தது அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா? அவர்கள் முன்னர் முயன்று நடைமுறை சிக்கல்களால் செய்யாமல் இருக்கலாம் அல்லவா?
தமிழ்நாட்டில் சாலைகளிலோ ரயில்களிலோ பயணிப்பவர்கள் ஒரு விஷயத்தை அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் இங்கே மண்ணும் விவசாய முறைகளும் மாறும். கும்பகோணம் ஒரு விதமானது. சேத்தியாதோப்பு வேறு விதமானது. பண்ணுருட்டியின் விவசாயப் பழக்கம் வேறு. விழுப்புரம் பிரத்யேகமான பண்புகளைக் கொண்டது. செங்கல்பட்டின் சூழ்நிலை மாறுபட்டது. தென் தமிழ்நாடும் அவ்வாறே.
எல்லா விவசாயிகளும் என்ன பழகி இருக்கிறார்களோ அதையே மீண்டும் மீண்டும் செய்பவர்களாக இருக்கிறார்கள். அதை குறை கூறமுடியாது. எனினும் அவர்கள் விவசாயத்தை 1) நீண்ட கால பயன் 2) நடுத்தரமான பயன் 3) குறுகிய கால பலன் என மூன்றாகப் பிரித்து செய்வதற்கு உதவ வேண்டும்.
தேக்கு, மகாகனி ஆகிய மரங்கள் பயன் தர 15 ஆண்டுகள் தேவைப்படும். அவற்றை உள்வரப்பில் நடலாம். அவை நிழல் கட்டாது. உயரமாக வளரும் இயல்புடையவை. எனவே உணவுப் பொருள் விளைச்சலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பழக்க கதியில் செய்யும் விவசாயத்தை அவர்கள் செய்து கொள்ளலாம். அதில் எந்த மாற்றமும் இருக்காது. மலை வேம்பு, குமிழ் ஆகிய மரங்கள் 7 ஆண்டுகளில் பயன் தரும். அவையும் அவ்வாறே.
4. ஒருபுறம் கிராமியப் பண்பாட்டு அடையாளமாக ஆல், அரசு, வன்னி, நெல்லி, நாவல் ஆகிய மரங்களைப் பார்த்து அவற்றை கிராமத்தின் பொது இடங்களில் வளர்க்க விரும்புகிறீர்கள். இன்னொரு புறம் பொருளியல் முக்கியத்துவம் உடைய தேக்கு, மகாகனி ஆகிய மரங்களும் விவசாயிகளிடம் வளர வேண்டும் என விரும்புகிறீர்கள். இது ஆச்சர்யமளிக்கிறது?
இந்திய வரலாறு தெரிந்தவர்கள் இதில் எந்த ஆச்சர்யமும் அடைய மாட்டார்கள்.
விஜயநகரப் பேரரசு தனது உச்சத்தில் இருந்த போது, அதன் தலைநகரான விஜயநகரின் மக்கள் தொகை அந்த காலகட்டத்து ஐரோப்பாவின் தலைநகரங்களான லண்டன், பாரீஸ், வியன்னா ஆகியவற்றின் மக்கள்தொகை கூடுதலை விட அதிகம். விஜயநகரில் உலகின் மிகப் பெரிய ‘’வைரக் கடைத்தெரு’’ இருந்தது.
உலகின் GDP-யில் 50 % பங்களிப்பு நம்முடைய நாட்டினுடையதாக இருந்திருக்கிறது.
இத்தனை பெரிய செல்வத்தை இந்திய கிராமங்களே ஈட்டின. இந்தியாவின் பேரரசுகள் கிராமங்களைக் காத்து வலுவூட்டியே வளர்ந்தன. அன்றும் இன்றும் இந்தியா என்பது கிராமங்களே.
கிராமங்களில் பண்பாடும் மரபும் புத்துயிர் பெற வேண்டும். கிராம மக்களின் - கிராம விவசாயிகளின் பொருளியலும் வளம் பெற வேண்டும். இந்த இரண்டும் ஒருமித்து நடைபெற வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. அதற்கான செயல்களை முன்னெடுக்கிறது.
5. மாற்றம் நிகழுமா?
நிச்சயம் நிகழும். ’’காவிரி போற்றுதும்’’ களத்தில் இருக்கிறது. தினமும் விவசாயிகளைச் சந்திக்கிறது. அவர்களிடம் அவர்கள் நலனுக்கான விஷயத்தை அவர்கள் ஏற்கும் விதமாக முன்வைக்கிறது. நெல் பயிரிடும் கிராமம் ஒன்றில் மரம் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று பலரும் சொன்னார்கள். எனினும், காவிரி வடிநில சிறு கிராமம் ஒன்றிலேயே நாங்கள் விவசாயிகள் வயலில் தோட்டத்தில் 20,000 மரக்கன்றுகளை அவர்கள் சொந்தமாக நடுவதற்குக் காரணமாயிருந்தோம். ஒட்டு மொத்த கிராமமும் அச்செயலால் இணைந்ததை நாங்கள் கண்ணால் கண்டோம்.
அந்த கிராமம் ‘’காவிரி போற்றுதும்’’மின் பரிசோதனைக் களம்.
நமது இலக்கை நோக்கி நாம் மெல்ல உறுதியாக அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.