Friday, 11 December 2020

நிறைக ! பொலிக !!

வியாபாரம் என்பதன் சமஸ்கிருத மூலச்சொல் ’’வியாபகம்’’ என்பதாகும். வியாபகம் என்பதைத் தமிழில் பரவுதல் அல்லது நிறைதல் என்று சொல்லலாம். இறைவன் சர்வ வியாபி என்கிறது நம் மரபு. எங்கும் நிறைந்தவன். நல்லெண்ணங்களும் நன்முயற்சிகளும் நற்செயல்களும் சமூகத்தில் நிறைந்து இருப்பதை மங்களமான ஒன்றாகக் கருதினர் நம் முன்னோர். நலன் பெருக்கும் பணிகளை சமூகங்களில் ஒருங்கிணைத்தனர் நம் தேசத்தவர். 

இந்தியாவில் எந்த பகுதிக்குச் சென்று பார்த்தாலும் அங்கே அரசர்கள் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஏரி, குளங்களை வெட்டியிருக்கிறார்கள். சாலைகள் அமைத்திருக்கிறார்கள். கலைப் பொக்கிஷங்களான பேராலயங்களை உருவாக்கியிருக்கின்றனர். கல்விச்சாலைகளுக்கு கொடை அளித்திருக்கிறார்கள். ஆதுரசாலைகளை நிறுவியிருக்கிறார்கள். அரசாட்சி ஒரு கிரியா ஊக்கியாக மட்டுமே இருக்க வேண்டியது. மக்கள் நலங்கள் கிடைக்கப் பெற்று நல்வாழ்வு வாழ அவர்கள் வாழ்வு நிறைய தேவைப்படும் செயல் தொடக்கங்களை நிகழ்த்துவது மட்டுமே அரசின் பணி. வளர்ச்சியை சமூகங்களே பார்த்துக் கொள்ளும். அவ்வாறான தொடக்கங்களை உருவாக்கிய ஆட்சியாளர்களே இன்றும் நினைவு கூரப்படுகிறார்கள். 

சோழர்கள் உருவாக்கிய ‘’வீர நாராயண ஏரி’’ இன்றும் மாநிலத்தின் தலைநகருக்குக் குடிநீர் அளிக்கிறது. காகதீயர்களும் ஹொய்சாளர்களும் உருவாக்கியிருக்கும் ஏரிகள் குளங்களும் வறண்ட நிலப்பகுதிகளின் விவசாயத்துக்கு உதவுகின்றன. நாட்டை இருள் சூழ்ந்திருந்த காலகட்டத்தில், ஒரு பேரரசு அமைந்தது மராட்டியத்தில். 

அரசன் தன் குடிகளுக்குத் தந்தையைப் போல் இருக்க வேண்டியவன். ஒரு விவசாயி தன் நிலத்தின் பயிரைப் பராமரிப்பது போல அரசன் தன் மக்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டியவன். அவர்களுக்குத் துணை நிற்க வேண்டியவன். 

ஆட்சியாளர்கள் உலகெங்கும் சின்னஞ் சிறு குழுவே. அவர்களின் செயல்பாடுகள் அந்த சிறு வட்டத்துக்கு வெளியே பரந்து விரிந்திருக்கும் சமூக முன்னேற்றத்தால் மட்டுமே மதிப்பிட்டு அளவிடப்படும். சமூக முன்னேற்றம் என்பது மக்களின் பொருளியல் முன்னேற்றமே. பொருளியல் முன்னேற்றம் பெற்ற சமூகங்களும் நாடுகளும் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன. மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியுள்ளன. 

தொழில் வளர்ச்சியில் கவனம் கொடுக்கும் - தொழிலைப் பிரதானமாகக் கருதும் மனநிலையை நம் சமூகத்தில் அடிப்படையிலிருந்து உருவாக்க வேண்டியிருக்கிறது. அந்த எண்ணம் கொண்ட ஆட்சியாளர்களே இப்போது நம் சமூகத்தின் தேவை. நமது கல்வி நிலையங்கள் , நமது பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் கவனம் இந்த விஷயத்தின் மேல் குவிய வேண்டியிருக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படமாகவே நம் நாட்டின் கலைப் பொக்கிஷங்களை மாணவர்களால் காண முடியும். இன்று தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் 12 வயது சிறுவனுக்குக் கூட அரசுப் பள்ளியில் ‘’Virtual Tour'' ஆக எல்லோரா கைலாசநாதர் ஆலயத்தைக் காட்ட முடியும். அவர்கள் மனத்தில் நம் தேசம் குறித்த நம் மரபு குறித்த பெருமிதத்தை விதைக்க முடியும். அவர்களை மகத்தானவற்றைக் கனவு காண்பவர்களாக ஆக்க முடியும். 

நன்மையும் மங்களமும் எங்கும் நிறைய வாழ்த்துகிறது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. 

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்குஇங்கு யாதொன்று மில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.