இன்று ஓர் இளைஞரைச் சந்தித்தேன்.
துடிப்பான ஆர்வம் மிக்க இளைஞர். அவருக்கு 23 வயதாகிறது. சிறுவயதில் மாருதியின் சேனையைச் சேர்ந்தவர் என எண்ணும்படியான செயல்களைச் செய்தவர் என அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் தன் 17 வது வயதில் ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதன் மாணவர் விடுதியில் தங்கி படித்திருக்கிறார். அங்கே அலைபேசி பயன்படுத்தக் கூடாது என விடுதியெங்குமே 2 பின் சாக்கெட்டோ 3 பின் சாக்கெட்டோ சுவிட்ச் போர்டுகளில் வசதி செய்து தரப்படவில்லை. இவர் சுவிட்ச் போர்டைப் பிரித்து வயர்களை எடுத்து புதிதாக வயர்களை இணைத்து ஒரு பிளக் கில் இணைத்து தனது அலைபேசியை சார்ஜ் செய்து இயக்கிக் கொண்டிருந்திருக்கிறார். அலைபேசி சார்ஜ் செய்ய வசதியில்லை என்பதால் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்த வாய்ப்பில்லை என கல்லூரி விடுதி நிர்வாகம் நினைத்திருந்திருக்கிறது. இவர் மிக இயல்பாக தான் உருவாக்கிக் கொண்ட சாதனம் மூலம் அலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் 4 மாணவர்களுக்கும் அலைபேசி சார்ஜ் செய்து கொடுத்திருக்கிறார். பல வாரங்கள் பல மாதங்கள் இந்த விஷயம் நடந்திருக்கிறது. அந்த மாணவர் விடுதியில் இருந்த அனைவருமே பொறியியல் பயிலும் மாணவர்கள். அடிப்படை மின் பொறியியல் என்னும் பாடத்தை கல்லூரி முதல் ஆண்டில் பயில்பவர்கள். 2000 மாணவர்களுக்கும் அந்த பாடம் உண்டெனினும் இந்த மாணவனே தான் கற்றுக் கொண்டதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. 2000 பொறியியல் மாணவர்கள் பயிலும் இடத்தில் ஒரு பொறியியல் தந்திரத்தைச் செய்த கல்லூரி நிர்வாகத்தின் மனப்பான்மையை அந்த இளைஞன் தன் சிந்தனை செயல் மூலம் உடைத்திருக்கிறான் என்பது முக்கியமான செயலே. அந்த இளைஞன் எல்லோரையும் போல் இல்லாமல் தனி வழி கொண்டவன் என்பதை அறிய நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. புதிதாக ஒரு வோல்ஸ்வேகன் கார் வாங்கியிருக்கிறார்.
தனது பெயரில் இருக்கும் ஓர் அம்சத்தை அவர் என்னிடம் சொன்னார். அது கேட்க சுவாரசியமாக இருந்தது. அவரது பெயரின் முதல் இரு எழுத்துக்கள் அவரது அண்ணன் பெயரின் முதல் இரு எழுத்துக்கள். அவரது பெயரின் மூன்றாவது எழுத்து அவர் தந்தையின் பெயரின் முதல் எழுத்து. அவரது பெயரின் நான்காவது எழுத்து அவர் அன்னையின் பெயரின் முதல் எழுத்து. தனது சகோதரன், தனது பெற்றோர் பெயரின் முதலெழுத்துக்களைச் சேர்த்தல் அதுவே தன் பெயர் என்றார். சுவாரசியமான மனிதர்.