நூல் : அருணை மாமுனிவரும் பராய்த்துறை மேவிய பரமபுருஷரும் ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 58 விலை : ரூ.30 பதிப்பகம் : ஸ்வாத்யாயா, ஸ்ரீசாரதா ஆஸ்ரமம், 58, சாரதா நகர், மணக்குள விநாயகர் தெரு, திருவண்ணாமலை.
அளவில் சிறிதாயிருப்பினும் ஒளி வீசும் தன்மை கொண்டது வைரப்படிகம். சில நூல்கள் அவ்விதமானவை. அவ்விதமான நூல்களில் ஒன்று யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்களின் ‘’அருணை முனிவரும் பராய்த்துறை மேவிய பரமபுருஷரும்’’ என்னும் நூல்.
பகவான் ஸ்ரீரமணர் ஆத்ம சொரூபமாக விளங்கியவர். ஓர் உயிர் எய்யக் கூடிய முழுமை நிலையை எய்தியவர். உயிர்த்தொகை கோடானுகோடி எனில் அதில் ஓர் உயிருக்கே இப்பெற்றி வாய்க்கப் பெறுகிறது. எளிய உயிர்கள் அவர் முன் நிற்கின்றன. கிழக்கில் உதிக்கும் ஆதவன் முன் நின்றிருப்பதைப் போல. புறக்கண்களால் ஆதவனைக் காண்கின்றனர். எனினும் அவன் ஒளியில் உறைந்திருக்கும் உயிராற்றலை அறிந்து உணர்பவர் ஒரு சிலரே. அவ்விதமே ஆத்மஞானியான பகவான் ஸ்ரீரமணரை தரிசித்து அவர் அருள் பெருக்கில் தன் ஆத்ம தாகம் தீர்த்துக் கொள்ளும் பேறு சிலருக்கு ஆசியாய்க் கிடைக்கிறது. அவ்விதம் பகவானைத் தரிசித்து அவருடன் சில சந்தர்ப்பங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்து தன் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடையும் சூழல் சுவாமி சித்பவானந்தருக்கு சிலமுறை அமைகிறது. அதனை சுவாமி சித்பவானந்தர் தனது சொற்களில் ‘’ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில்’’ எழுதியிருக்கிறார். திருச்சி ஆகாஷ்வாணி வானொலியில் பேசியிருக்கிறார். சுவாமி சித்பவானந்தர் பகவான் ஸ்ரீரமணர் குறித்து பேசியவற்றையும் எழுதியவற்றையும் யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சிறு நூலாகத் தொகுத்திருக்கிறார். மிகவும் முக்கியமான நூலாகும் இது.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்ற சுவாமி சித்பவானந்தர் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர் ஆவார். தமிழகத்தில் ஆன்மீகப் பணிகளையும் கல்விப் பணிகளையும் முன்னெடுத்ததில் மிக முக்கியமானவர் ஆவார். அவரது மாணவர்களுக்கும் அவரது சீடர்களுக்கும் அவர் வாழ்க்கையும் அவர் சொற்களும் கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டின ; வழிகாட்டுகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க சுவாமிஜி பகவானுடனான தன் அனுப்வங்களை சொல்லில் வடித்திருப்பது வாசகர்களுக்குப் பெரும் பேறு.
இந்த நூலில் பகவானிடம் சுவாமிஜி கேட்கும் ஒரு கேள்வி இந்த நூலின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும்.
’’பகவானே! உங்களுடைய இளமைப் பருவத்தில் நீங்கள் மதுரையை விட்டுத் திருவண்ணாமலை வந்தீர்கள்.அப்போது இருந்த மனநிலை என்ன? இப்போது இருக்கும் மனநிலை என்ன? இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
சிறிது நேரம் அமைதியாக இருந்த மகரிஷி பின்பு கூறினார்.
படிப்பில் நாட்டம் செல்வயேயில்லை. இந்த மனநிலையை வீட்டிலுள்ள பெரியவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ‘ஏன் தண்டச்சோறு தின்று கொண்டிருக்கிறாய்? செத்து தொலையேன்’ என்றார்கள்.
மீண்டும் சிறிது நேர அமைதி காத்த பின் அளந்தெடுத்த குரலில் பேசலானார்.
செத்தால் என்ன ? என்ற எண்ணம் மனதில் எழுந்தது. செத்தவன் போல் என்னை நான் செய்து கொண்டேன். ஆனால் சாவையும் சாட்சியாகப் பார்ப்பதற்கு எனக்குள் ஒன்று இருந்ததைக் கண்டேன். அந்த ஒன்றை உறுதியாகப் பிடித்தேன். அதில் நிரந்தரமாக நிலைத்திருப்பதுதான் எனக்கு நிலையாகக் கிடைத்த லாபம். அதுதான் மதுரையை விட்டுக் கிளம்பிய போது இருந்த நிலை. இன்றும் அதே நிலைதான். காலப் போக்கில் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பிறகு புதிய அனுபவம் எதுவும் கிட்டவில்லை. கிடைப்பதற்குப் புதிய அனுபவம் எதுவும் இல்லவும் இல்லை.
இதுதான் தமது ஆத்மானுபூதியை விளக்கும் வகையில் மகரிஷி அளித்த அரிய பதில். ‘உண்மையில் இது உபநிஷதமே அல்லவா’ என்று எனக்குத் தோன்றியது.
அதற்கிடையே
‘அப்படியானால் எதற்காகத் தாங்கள் அத்துணை தவம் புரிந்தீர்கள்?
என மேலும் நான் வினவினேன்.
’அந்த நிலையை சகஜமாக்கிக் கொள்ளத்தான்’ என்ற பதில் மகரிஷிகளிடமிருந்து வந்தது.
***