Tuesday, 24 February 2026

நிவேதிதை நூற்றைம்பது - ஆன்மீகவாதியின் நிறைவாழ்வு


நூல் : நிவேதிதை நூற்றைம்பது ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 343 விலை : ரூ.150 பதிப்பகம் : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4

 மண்ணில் தோன்றும் உயிர்கள் பற்பல. கோடானுகோடி உயிர்களில் ஏதேனும் ஓர் உயிரே நிறைநிலை எய்துகிறது. உயிர்கள் அடைய வேண்டிய ஞானத்தை முழுமையாக அடைவதும் உயிர்கள் உணர வேண்டிய முழுமையுணர்வை முழுமையாக உணர்வதுமே நிறைநிலை ஆகும். மானுட வரலாற்றில் உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான முழுமை ஞானம் அடைந்த ஞானிகளும் முழுமையுணர்வடைந்த யோகிகளும் சில நூற்றாண்டுகளுக்கு ஒருவர் என்னும் அளவில் தோன்றியிருக்கின்றனர்; மானுடர் உய்யும் வழிமுறைகளை அளித்திருக்கின்றனர். அத்தகைய ஞானிகளின் யோகிகளின் சீடர்கள் தங்கள் குருமார்களின் மார்க்கத்தில் நடந்து துயரங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கின்றனர். தங்கள் குருவின் செய்தியை மானுடர்க்கு கொண்டு செல்லும் பணியை தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கின்றனர்.   

சகோதரி நிவேதிதை சுவாமி விவேகானந்தரின் சீடர் ஆவார். ஞானத்தேடலில் தனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் நலத்துடன் தன் வாழ்வை பிணைத்துக் கொண்ட மாபெரும் ஆன்மீக ஆளுமை சகோதரி நிவேதிதை. இந்தியாவின் பெண் கல்வி இயக்கத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பாற்றியிருக்கிறார் நிவேதிதை. இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெற ஜகதீஸ் சந்திர போஸுக்கு பேருதவிகள் புரிந்திருக்கிறார் நிவேதிதை. அஜந்தா சிற்பங்களின் முக்கியத்துவம் உலகைச் சென்றடைய பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதை. அரவிந்த கோஷுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். மகாகவி பாரதியாரின் ஞானகுருவாக விளங்கியிருக்கிறார். தாகூரால் மிகவும் மதிக்கப்பெற்றவராக விளங்கியிருக்கிறார். 

சகோதரி நிவேதிதையின் வாழ்வில் நடந்த 150 சம்பவங்களை ‘’நிவேதிதை நூற்றைம்பது’’ என்ற பெயரில் நூலாக யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா எழுதியுள்ளார். சகோதரி நிவேதிதையின் நிறைவாழ்வையும் அவரது ஆன்மீக ஆளுமையையும் மிகச் சிறப்பாக சித்தரிக்கும் நூலாகும் இது. இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வீடுபேறு அடைந்த ஒரு துறவியின் வாழ்வு இந்நூல்.