Monday, 9 February 2026

கிராமத் திருவிழாக்கள் - நண்பருக்கு ஒரு கடிதம்

 அன்புள்ள நண்பருக்கு,

நேற்று நாம் இருவரும் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அது குறித்து தங்கள் மனப்பதிவுகளையும் விருப்பங்களையும் கூறினீர்கள். என்னுடைய அவதானங்களை நான் கூறினேன். இன்று காலை எனக்கு சில யோசனைகள் தோன்றின. உரையாடல்களின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அந்த உரையாடல்கள் நிறைவுற்ற சில மணி நேரங்களுக்குப் பின் சில நாட்களுக்குப் பின் நமக்கு புதிய திறப்புகள் நிகழும் ; புதிய கோணங்கள் கிடைக்கும் என்பதே. 

என் மனதில் ஒரு காட்சி தோன்றியது. அதனைத் தெரிவிக்கிறேன்.

(1) காப்பு கட்டி கொடியேற்றி திருவிழா தொடங்கியதும் அதன் ஒரு பகுதியாக ‘’வேத பாராயணம்’’ ஏற்பாடு செய்யலாம். குறைந்தபட்சமாக ஒரு முழு நாள் அல்லது மூன்று நாட்கள் என்ற அளவில் ஏற்பாடு செய்யலாம். 

நான்மறைகள் நம் நாட்டின் கிராமங்களில் தோன்றியவை. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவை ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒரு கிராமத்துத் திருவிழாவிலும் அதன் ஒரு பகுதியாக வேதம் ஒலிக்க வேண்டும். 

மறையோதுதலை தன் வாழ்வாக ஏற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் சமூகத்தால் போஷிக்கப்பட வேண்டியவர்கள். திருவிழாவின் ஒரு பகுதியாக அவர்களை போஷிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். சாமானிய மக்களின் செவிகளில் வேத முழக்கம் கேட்கவும் ஒரு வாய்ப்பு உருவாகும். 

(2) ஆதிகாவியமான ‘’ஸ்ரீராமாயண நவாஹம்’’ ஏற்பாடு செய்து கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் தென்னம்பிள்ளை வழங்கலாம். கேரளத்தில் இந்த வழக்கம் உள்ளது. 

(3) ‘’வலிமையே வாழ்வு’’ என்பதே வேதாந்தத்தின் செய்தி. எனவே எல்லா விதமான விளையாட்டுப் போட்டிகளும் திருவிழாவின் ஒரு பகுதியாக நிகழ்த்த வேண்டும். 

(4) ஒரு பெரும் மைதானத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி நடத்த வேண்டும். 

ஒவ்வொரு கிராமமும் தங்களுக்கே உரிய பிரத்யேக விதத்தில் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கிராமத் திருவிழாவின் ஒரு பகுதியாக எளிதில் இணைந்து கொள்ளும். 

நேற்று நமது உரையாடல் இந்தக் காட்சியை அகத்தில் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது. 

நாம் தொடர்ந்து உரையாடுவோம். நாம் சேர்ந்து சிந்திப்போம். நாம் சேர்ந்து செயல்படுவோம். 

அன்புடன்,

பிரபு