நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி வாசித்தேன். அதாவது, திருவாரூரில் ஒரு குடும்பம் தங்கள் மகள் திருமணத்துக்கு வாங்கிய 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் ஒரு ஆட்டோவில் பயணித்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக நகைப்பை ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்து விட்டது. சிறிது நேரம் கழித்து திருவாரூர் நகராட்சியின் தூய்மைப் பணியாளரான துரை என்பவர் கண்ணில் அந்த பை படுகிறது. அதில் தங்க நகை இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அந்த பையை பரிசோதிக்கும் அவரது மனைவி அதில் தங்க நகைகள் இருப்பதை தெரிவிக்கிறார். காவல் நிலையத்தில் அந்த பையை ஒப்படைக்கிறார்கள். நகைப்பையைத் தவற விட்டவர்கள் காவல் நிலையத்துக்கு வருகிறார்கள். துயரத்துடனும் பதைப்புடனும் வரும் அவர்களிடம் அவர்கள் தொலைத்தது இந்த பையும் இதில் இருந்த நகைகளும் தானா என விசாரித்து அவர்களிடம் நகைப்பையை வழங்குகிறது காவல்துறை.
இன்று மாலை திருவாரூரில் இருக்கும் திரு. துரை அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செய்தேன். ஓர் இளம்பெண்ணின் அப்பெண்ணின் குடும்பத்தின் துயரை திரு. துரை நீக்கியிருக்கிறார் என்பது மிகப் பெரிய விஷயம் என அவரிடம் கூறினேன். அவரைப் போன்றவர்கள் இருப்பதாலேயே உலகில் நியாயம் என ஒன்று இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தேன்.
பிரசித்தி பெற்ற கொற்றவை ஆலயத்தில் கொற்றவை சந்நிதியில் அவர் நலனுக்காகவும் அவர் குடும்ப நலனுக்காகவும் அர்ச்சனை செய்கிறேன் என்று கூறி அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் நட்சத்திரங்களையும் கேட்டுக் கொண்டேன்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை.
என்பது திருக்குறள்.
பிற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவதே அறிவு என்பது அதன் பொருள்.
ஒரு குடும்பம் அடைய இருந்த பெருந்துன்பத்தை தன் நற்செயல் மூலம் போக்கியிருக்கிறார் திரு. துரை அவர்கள்.