எனது நண்பர் ஒருவர் அடகுக்கடை வைத்திருக்கிறார். அவரை எப்போதாவது சந்தித்துப் பொது விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பதுண்டு. இன்று அவரது கடையில் அமர்ந்திருந்தேன். அவரது வாடிக்கையாளர் ஒருவர் அடகுக்கடைக்கு வந்திருந்தார். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நகையை அடகு வைத்திருக்கிறார். நண்பரிடம் வட்டி வீதம் 24 சதவீதம். அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4000. நண்பர் அவருக்கு கிராமுக்கு ரூ.3200 கடன் கொடுத்திருக்கிறார். அவ்வாறெனில் மாதம் ஒரு கிராமுக்கு ரூ.64 வட்டி. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 84 X 64 = 5346 வட்டி. ஒரு கிராமுக்கு வாங்கிய கடன் ரூ.3200 அதனுடன் வட்டித் தொகை சேர்த்து மொத்தம் 8646 ஆகிறது. கடந்த மூன்று மாதத்தில் தங்க விலை சரசரவென ஏறி விட்டதால் இப்போது ஒரு கிராமுக்கு ரூ.12,000 வரை நண்பரால் கடன் கொடுக்க முடியும். வாடிக்கையாளர் தனது கடன் வட்டியை வரவு வைத்துக் கொண்டு மீதி இருக்கும் இடைவெளித் தொகை ரூ.3400 ஐ ரொக்கமாகக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 8600 கட்டி கடன் தீர்த்து விட்டு நகையை வாங்கிச் சென்று விடுங்கள் என்று நண்பர் சொன்னார். வாடிக்கையாளர் மேலும் பணம் கேட்டார். அசலும் வட்டியும் சேர்த்த தொகை ரூ.8600க்கு அவர் வைத்த நகை மறு அடகு வைக்கப்பட்டதாக ஏற்பாடு செய்து கொண்டு கணக்கு எழுதிக் கொண்டார் நண்பர். நண்பரின் கவலை வாங்கிய கடன் ரூ.3200க்கு அசலும் வரவில்லை வட்டியும் வரவில்லை. இந்த 8500 எப்படி திரும்பி வரும் என்பது. நண்பரிடம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்களே அவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது இத்தனை வருட தொழில் அனுபவத்தில் இவ்விதமான சூழ்நிலை வந்ததில்லை என்றார்.