எனது நண்பர் ஒருவர் மும்பையில் வசிக்கிறார். அவருக்கு இங்கே ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கல்லூரி அருகே 5 ஏக்கர் நிலம் உள்ளது. குத்தகைக்கு விட்டிருக்கிறார். புறவழிச்சாலை புதிதாக அமைவதால் அவரது நிலத்துக்கு சிறப்பான சாலை வசதி கிடைக்க இருக்கிறது. சாலைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக அவரது நிலத்தின் விலை இப்போது கணிசமாக ஏறி விட்டது. நல்ல விலை கிடைப்பதால் நிலத்தை விற்கலாம் என முடிவு செய்திருக்கிறார். இப்போது விற்றாலும் லாபம் இன்னும் சில வருடங்கள் தள்ளி விற்றாலும் லாபம் என இருக்கிறார். இடத்தை வாங்க நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லவும் என்று எனக்கு ஃபோன் செய்தார். இடத்தின் ஆவணம், மூல ஆவணம், பட்டா ஆகியவற்றை மின்னஞ்சலில் அனுப்பச் சொன்னேன். அவருக்குத் தெரிந்த மீடியேட்டர்களிடமும் விபரம் சொல்லி விடுமாறு சொன்னேன். அவர் என் வழியாக நடப்பதை விரும்புகிறேன் என்று சொன்னார். இருந்தாலும் நாம் மற்றவர்களிடமும் சொல்லுங்கள் என வற்புறுத்திக் கூறினேன். அது நன்மை பயப்பது என்பது என்பது எனது நடைமுறைப் புரிதல். பொதுவாக ரியல் எஸ்டேட் விஷயங்கள் கமுக்கமாக இருப்பது நல்லது என எண்ணுவார்கள். அதன் உப விளைவு என்னவெனில் அந்த இடம் தொடர்பாக பல புனைவுகள் உருவாகிவிடும். பலரிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினாலும் மேலும் புனைவுகள் உருவாகும் என்றாலும் விஷயம் பலரிடம் கொண்டு செல்லப்படுவது அந்த இடம் முடிய ஒரு வாய்ப்பை உருவாக்கும்.
நான் சொன்னபடி அவர் பலரிடமும் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் எங்கள் தெருவில் நில உரிமையாளரான நண்பரின் பெயரைச் சொல்லி வீடு விசாரிக்கிறார். புறவழிச்சாலை அருகே வயல் உள்ளவர் என்பது தான் அவர் கூறும் தகவல். நில உரிமையாளரின் வீடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவு கொண்ட இன்னொரு கிராமத்தில் இருக்கிறது. அவர் வீட்டை ஏன் என் வீடு இருக்கும் பகுதியில் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் புறவழிச்சாலை அருகே நிலம் உள்ளவர் எனக் கூறியதால் எனக்கு ஒரு சிறு ‘’பொறி’’ தட்டியது. என்ன காரணத்துக்காக அவரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அவர் வயலில் டிராக்டர் உழ என்று கூறினார். புறவழிச்சாலை அருகே நிலம் உள்ளவர் என நீங்கள் கூறுபவர் எனக்குத் தெரிந்தவர் தான் ஆனால் அவர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார். அந்த குத்தகைதாரர் யார் என விசாரித்து அவரைச் சென்று பார்ப்பது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன். அவர் சற்று குழப்பமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர் வீடு எங்கே இருக்கிறது என விசாரித்துக் கொண்டு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். அவர் கிட்டத்தட்ட தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்ததை நான் பார்த்தேன். யாரேனும் என்னிடம் முகவரி கேட்டு விசாரித்தால் அவர்களை உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். ஆனால் அவர் யாரைப் பார்க்க விரும்பினாரோ அவரைப் பார்க்காமலே சென்று விட்டார். ஏனென்றால் அவர் பார்க்க விரும்பிய நபர் எங்கள் தெருவில் எங்கள் ஊரிலேயே இல்லை. 10 கி.மீ தள்ளி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் வீடு 10 கி.மீ தள்ளி இருக்கிறதே தவிர அவர் இப்போது இருப்பது மும்பையில். அந்த விஷயத்தை அப்படியே சில பொழுது விட்டு விடுவோம் என விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மும்பை நண்பருக்கு ஃபோன் செய்து விபரம் சொல்வோமோ என நினைத்தேன். கொஞ்சம் தெளிவாகட்டும் என விட்டு விட்டேன்.
மறுநாள் காலை எழுந்ததும் முகவரி தேடி வந்தவர் வீடு எந்த பகுதியில் இருக்கிறதோ அங்கு சென்று அவருக்கு அவர் தேடிய நில உரிமையாளரின் அலைபேசி எண்ணை அளித்து விடுவோம் ; அவர் என்ன பேச நினைக்கிறாரோ பேசிக் கொள்ளட்டும் என அவர் பகுதி நோக்கிச் சென்றேன். அப்போது அவர் எதிரில் இரு சக்கர வாகனத்தில் எதிர்ப்பட்டார். என்னைக் கவனிக்கவில்லை. வேகமாக சென்று விட்டார். நான் வாகனத்தைத் திருப்பிச் சென்று அவரை நிறுத்தினேன். அவருக்கு என்னைப் பார்த்தது ஆச்சர்யம். நான் அவரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னேன். அவர் தேடி வந்தவரின் எண் என்னிடம் இருக்கிறது ; அவர் மும்பையில் இருக்கிறார். அவர் எண்ணைத் தருகிறேன். அவரிடம் பேசுவதென்றாலும் பேசுங்கள். உங்கள் எண்ணை அவருக்குத் தந்து அவரைப் பேசச் சொல்வதானாலும் பேசச் சொல்கிறேன். டிராக்டர் உழுவது தொடர்பாக அவருக்கு சொல்ல எதுவும் இருக்காது ; அவர் விவசாயம் செய்யவில்லை. அவர் மெல்ல புறவழிச்சாலை அருகே இருக்கும் விலைக்கு வந்திருக்கிறது என்று சொன்னார்கள். அது குறித்து விசாரிக்க வந்தேன் என்றார். மூட்டமாக இருந்த விஷயங்கள் எனக்கு புலப்பட்டன.
அவர் புறவழிச்சாலை அருகே இருக்கும் இடத்தை நன்றாக அறிந்திருக்கிறார். அந்த இடம் விற்பனைக்கு என்று அவரிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். உரிமையாளரின் பெயரையும் கூறியிருக்கிறார்கள். உரிமையாளர் எனது நண்பர் என்பதைக் கூறி என்னைச் சந்தித்தால் நான் இடத்தை முடித்துக் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்கள். அவர் என் பெயரை மறந்து விட்டார். நண்பரின் பெயரும் எனது வீடு இருக்கும் பகுதியின் தெருவின் பெயரும் நினைவில் இருந்திருக்கிறது. அங்கே வந்து தேடியிருக்கிறார். அவர் அந்த இடத்தை வாங்க விரும்புகிறார். ஆனால் நிலம் வாங்க என்று சொல்லாமல் டிராக்டர் உழ என்று மாற்றிக் கூறியிருக்கிறார். இவை எனக்குப் புரிந்து விட்டன.
சட்டென , ‘’அண்ணன்! நான் ரியல் எஸ்டேட் தான் பண்றன். நீங்க சொல்ற இடத்தோட ஓனர் எனக்கு ஃபிரண்டு. அவர் நம்பர் உங்களுக்குத் தரன். நீங்க பேசறீங்களா?’’ என்று கேட்டேன்.
‘’என்ன விலை சொறாங்க?’’ என்றார்.
நான் விலை விபரம் கூறினேன்.
‘’விலை கொஞ்சம் குறைச்சு முடிச்சுத் தர முடியுமா? ஒரே பேமெண்ட் கொடுத்துடலாம்’’
‘’பை பாஸ் வந்ததுல இருந்து டிமாண்ட் அதிகமா இருக்கு. ரேட் கூடிட்டே போகுது. நான் ஓனர்கிட்ட பேசிப் பாக்கறன். இன்னைக்கு நாளைக்கு ஊர்ல இருக்க மாட்டேன். வெளியூர் போறன். அதுவும் ஒரு லேண்ட் டீலிங் தான். நான் உங்களுக்கு ஃபோன் செய்யறன்’’
***
வீட்டுக்கு வந்ததும் கணினியில் கீழ்க்கண்டவாறு எழுதினேன். தலைப்பு விலை விபரம் என தட்டச்சிட்டேன். பின்னர் யோசித்து விபரம் என மாற்றினேன். முதல் வரியாக ‘’ஸ்தலம் 5 ஏக்கர் நன்செய் நிலமாகும். போர்வசதி கொண்டது’’ என எழுதினேன். அதன் பின் ஒரு ஏக்கர் = 43,560 சதுர அடி என்பதை அடுத்த வரியாக எழுதினேன். 5 ஏக்கர் = என எழுதி எத்தனை சதுர அடியோ அந்த எண்ணை எழுதினேன். பின்னர் ஒரு குழி = 144 சதுர அடி என எழுதினேன். ஐந்து ஏக்கரில் எத்தனை குழி இருக்குமோ அந்த எண்ணை எழுதினேன். நில உரிமையாளர் ஒரு குழி என்ன விலை சொல்கிறாரோ அந்த விலையை எழுதினேன். குழியின் எண்ணிக்கையையும் உரிமையாளர் கூறும் குழியின் விலையையும் பெருக்கி மொத்த தொகையை எண்ணால் எழுதுவோமோ என நினைத்தேன். அவ்விதம் செய்ய வேண்டாம் என அந்த முடிவைக் கைவிட்டேன். போர் வசதிக்கு ரூ.3,00,000 என எழுதினேன். நிலத்தை அளந்து கொள்ளலாம். இடம் கூடுதலாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாதோ நில உரிமையாளர் மொத்த விற்பனைத் தொகையில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிடுகிறார் என்று எழுதினேன். பட்டா என எழுதி நில உரிமையாளர் தன் பெயரில் தனிப்பட்டா வைத்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டேன். ஆவண விபரம் என்பதில் நிலத்தின் ஆவண எண்களைக் குறித்தேன். மூல ஆவண விபரங்களையும் குறிப்பிட்டேன்.பின்னர் அரசு இணையதளத்தில் அந்த சர்வே எண்ணின் பத்திர மதிப்பைத் தேடி எடுத்து பத்திர மதிப்பையும் குறிப்பிட்டேன். அடுத்த வரியாக மீடியேட்டர் கமிஷன் 1 % என எழுதி எழுத்தால் (ஒரு சதவீதம்) என எழுதினேன்.
இவற்றை ஒரு தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து நிலத்தை வாங்க விரும்புபவரிடம் கொடுத்து விடலாம் என இருக்கிறேன். அந்த பிரிண்ட் அவுட்டில் தேதியையும் எனது அலைபேசி எண்ணையும் பேனாவால் எழுதிக் கொடுத்து விட்டால் அந்த இடம் குறித்து விபர அறிக்கையாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. இதில் பல விஷயங்கள் எளிதாகும் என எண்ணினேன்.
வழக்கமாக என்ன நடைமுறை என்னவெனில் முதலில் விலை பேசுவார்கள்.பின்னர் ஆவண நகல் வாங்கி வழக்கறிஞர் அபிப்ராயம் பெறுவார்கள். அதன் பின் அளக்க முயற்சி செய்வார்கள். அதிலிருந்து வாங்குபவருக்கும் விற்பவருக்கும் பிணக்கு தொடங்கிவிடும். இடம் முடிப்பதற்குள் மீடியேட்டர்கள் பாடு போதும் போதும் என்றாகி விடும். இந்த விபர அறிக்கை வாங்குபவர் கைக்குச் செல்லும் போது அவர் பல தடவை இவற்றை மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்கவும் படித்துப் பார்க்கவும் வாய்ப்பு உருவாகும். மீடியேட்டரான என் கையிலும் ஒரு நகல் இருக்கும். இவ்விதம் செய்வது அந்த விஷயத்தை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வரும் என எண்ணினேன்.
ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் ஒரு விஷயம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்றால் வானத்தைத்தான் பார்ப்போம். மண் தொடர்பான முடிவுகள் வானில் தானே எடுக்கப்படுகிறது என!