Saturday, 7 March 2026

அளத்தல் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் அதிநவீன அளவைக் கருவியொன்றை வாங்கி அதன் மூலம் நிலம், மனை ஆகியவற்றை அளவீடு செய்து தருகிறார். மிக விலையுயர்ந்த அந்த சாதனத்தை வங்கிக் கடன் மூலம் வாங்கியிருக்கிறார். அளவீட்டுப் பணிகளை மிகப் பெரிய அளவில் அது எளிதாக்குகிறது. ஒரு இடத்தை அளக்க ஒரு மணி நேரமும் மூன்று பணியாளர்களும் தேவை எனில் இக்கருவியைக் கொண்டு ஒரே பணியாளர் பத்து நிமிடம் என்ற அளவில் வேலையை நிறைவு செய்ய முடிகிறது. ஆறில் ஒரு பங்கு நேரம் மட்டுமே தேவைப்படும் என்றாலும் இரண்டு பகல்கள் அளக்கக்கூடிய பரப்பை இக்கருவியைக் கொண்டு அளக்க 5 மணி நேரமாவது ஆகும். 20 ஏக்கர் நிலத்தை அளக்க வேண்டும் என்பது பணி. நண்பர் அதனை செய்து கொடுத்து விட்டார். நிலத்துக்குப் பக்கத்தில் இருந்த சாலையில் இருந்தும் சர்வே கல்லிலிருந்தும் அளவையைத் துவக்கி மொத்த 20 ஏக்கர் நிலத்தையும் அளந்து அதனை 14 பகுதிகளாகப் பிரித்து அளவைக் காட்டியிருக்கிறார் நண்பர். அந்த நிலத்துக்கு உரியவர்கள் இருவர். இன்னொருவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சர்வேயர் ஒருவரைக் கொண்டு அளந்திருக்கிறார்கள். அவர்கள் அளவையை பக்கத்து வயலின் வேலியிலிருந்து துவங்கியிருக்கிறார்கள். அது 6 மீட்டர் உள்ளடிங்கி இருக்கிறது. எனவே மொத்த 14 பகுதிக்கும் அளவு மாறிக் கொண்டே செல்கிறது. அதிநவீனக் கருவியின் பயன்பாட்டை பரிச்சயப்படுத்திக் கொள்ளும் விதமாக நானும் உடன் சென்றேன். நாங்கள் சென்ற போது அவர்கள் அளவீட்டைத் துவக்கியிருந்தார்கள். வேலியிருலிருந்து துவக்காதீர்கள் சாலையிலிருந்து துவக்குங்கள் என்று கூறினோம். அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் செய்வதையே செய்து கொண்டிருந்தார்கள். நண்பரை உடன் இருக்கச் சொல்லி விட்டு அங்கே ஓர் அருமையான மரத்து நிழலும் அதில் கயிற்றுக் கட்டிலும் இருந்தது. அதில் சென்று அமர்ந்து கொண்டு நான் சில ரியல் எஸ்டேட் ஃபோன் அழைப்புகளை பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நம் மரபில் ‘’நிழல்’’ அல்லது’’சாயா’’ எனப்படும் விஷயங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  

ஓரிரு தினங்களுக்கு முன் தரங்கம்பாடி சென்றிருந்த போது கடற்கரையில் நின்றிருந்தேன். அப்போது எனது நிழல் கடலின் மீது விழுந்தது. அலையோட்டத்தில் மிதந்தது என் நிழல். எனது நிழல் நீரில் மிதப்பதால் நானும் நீரில் மிதக்கிறேனா என எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நமது மரபு சூரியதேவனின் மனைவியின் பெயர் சாயா தேவி என்கிறது. நிழல் என்பது ஒளியுடன் தொடர்பு கொண்டது. ராகு கேது ஆகிய கிரகங்களை நிழல் கிரகங்கள் என வகுக்கின்றன நமது ஜோதிட நூல்கள். நமது நிழலைக் கவனிக்கும் ஒரு விதமான தியான முறை உள்ளது. நம்முடைய நிழலை உற்று நோக்குவதன் மூலம் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம் ; உணர்கிறோம் என்பது அதன் வழிமுறை. பொதுவாக தியானம் கண் மூடி நிகழ்கையில் இந்த நிழல் தியானம் கண் திறந்து செய்யப்பட வேண்டியது. நிலத்திலும் காற்றிலும் வானிலும் வெப்பம் எவ்வளவு இருப்பினும் ஒரு மரத்தின் நிழல் நமக்குக் குளுமையைத் தந்து விடுகிறது. குளிர்தரு என்கிறார் வள்ளலார். ‘’குளிர்தருவே தருநிழலே நிழல் கனந்த கனியே ஆடையிலே எனை மணந்த மணவாளா’’ என நடராஜப் பெருமானைத் துதிக்கிறார். மரத்தின் நிழல் என்பது மரத்துடையதா? நம்முடைய நிழல் நம்முடையதா? இது போன்ற பல கேள்விகள் எழுந்தன. அவற்றையும் மரத்தடி நிழலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். 

மாலை 6 மணியானதும் எந்த முடிவும் எட்டப்படாமல் இரு தரப்பும் பிரிந்தனர். நண்பர் கருவியை எடுத்துக் கொண்டார். நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம்.