Sunday, 17 May 2026

திங்களைப் போற்றுதும்


 நூல் : ஒரு க்ளாஸ் விஸ்கி ஆசிரியர் : கவிதா சொர்ணவல்லி பக்கம் : 108 விலை : ரூ.165 பதிப்பகம் : வான்கா பதிப்பகம், 10, கோபாலபுரம் விரிவு, வடவள்ளி, கோயம்புத்தூர். மின்னஞ்சல் : booksellersvangogh(at) gmail (dot)com  

     நமது மரபு வாழ்வின் அடிப்படை உறுதிப்பாடுகளாக தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சத்தைக் கூறுகிறது. அறம், பொருள், இனிமை மற்றும் வீடுபேறு எனத் தமிழ் தன்மொழியில் சொல்கிறது. இந்த வகைப்பாட்டினை - இந்த வரிசைப்படுத்தலை இவ்விதம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் : அறம் என்பது விசும்பின் நியதி. ஆயிரக்கணக்கான சூரியன்களையும் வான்மீன்களையும் ஆழியையும் கோள்களையும் இணைத்திருக்கும் இயக்கம். அந்த பேரியக்கத்துடன் ஒத்திசைவதே அறம். அத்தகைய அற உணர்வால் மானுடர் உருவாக்கிக் கொள்வதே பொருள் (அர்த்த). அற உணர்வாலும் பொருள் வாழ்வாலும் மனிதர்களுக்கு வாய்க்கப் பெறுவதே வாழ்தலின் இனிமை. அந்த இனிமை மானிடரை இட்டுச் செல்லும் அந்தமே வீடுபேறு. அறமும் வீடுபேறும் ஒன்றே. வாழ்தலின் இனிமையைக் காண்பவர்கள் வீடுபேறுக்கான மார்க்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மானுட வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே தனி மனிதனை, மனிதர்களை, மனித சமூகத்தை ‘’தான்’’ எனும் எண்ணம் சூழ்ந்திருக்கிறது. அந்த எண்ணம் பெரும்பாலும் அறியாமைக்கு இட்டுச் செல்கிறது. பிரபஞ்சப் பெருநியதியைத் தனியாகவும் தன்னை தன் இருப்பைத் தனியாகவும் எண்ணும் நிலையே ‘’அறியாமை’’. மானுடரைத் துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே. புத்தர் அந்தத் துன்பத்தைக் கண் கொண்டு காணச் சொல்கிறார். மனிதர் அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ‘’நான்’’ என்னும் எண்ணம் கொள்வதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரபஞ்சப் பெருநியதியிலிருந்து விலகி இருப்பதால் துக்கம் அல்லது துக்கங்கங்கள் கோடானுகோடி விதமாய் இருக்கிறது அல்லது இருக்கின்றன. அவற்றை மானுடர் கண் கொண்டு காணும் போது துக்கத்திலிருந்து துக்கத்துக்கான காரணத்தை அறிகின்றனர். பின்னர் துக்க நிவாரணம் என்ன என்பதையும் துக்க நிவாரணத்துக்கான பாதை என்ன என்பதையும் அறிகின்றனர். மனிதனுக்கு அதுவே நிறைநிலை ; முழு விடுதலை. 

மானுட வரலாறு குறைந்தபட்சம் 15,000 ஆண்டுகள் தொன்மையானது. அதில் 6000 ஆண்டுகளாக மனித குலம் மானுட உணர்வுகளை எழுத்தில் வடிக்கிறது. இலக்கியம் குறைந்தபட்சம் 6000 ஆண்டுகளாக மானுட குலத்துடன் உடன் வந்து கொண்டிருக்கிறது. எல்லையற்ற விசும்பின் இயக்கத்துடன் மனிதப் பிரக்ஞையை இணைப்பதை இலக்கியம் தன் பணியாக எண்ணுகிறது ; செய்கிறது. 15,000 ஆண்டுகளாக மனிதர்கள் அறிவையும் அறியாமையையும் சேர்ந்தே அடைகின்றனர். மானுடர் அறிந்த அறிவைக் காட்டிலும் இன்னும் பெரிதாக இருக்கிறது அறியாமை. 

பொதுவாக நவீனத் தமிழிலக்கியத்தின் மீது ஐரோப்பாவின் இருத்தலியல் மற்றும் நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம். கவிதா சொர்ணவல்லியின் ‘’ஒரு க்ளாஸ் விஸ்கி’’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தம்மை இருத்தலியல் மற்றும் நவீனத்துவ எல்லைக்குள் பொருத்திக் கொள்ளாமல் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் உலவும் படைப்பு அகத்துடன் உலகை, மனித வாழ்வைக் காணுகின்றன. 

கவிதா சொர்ணவல்லியின் சென்னை லட்சக்கணக்கான மனிதர்கள் அறிந்த இரைச்சலுடனும் இயந்திரத்தனமையுடனும் இருக்கும் சென்னைதான் என்றாலும் கவிதா சொர்ணவல்லியின் சிருஷ்டி சென்னையை நுரை பொங்கும் அலைகள் மணல் மேடுகளைத் தொடும் நகரமாகவும் அதிகாலையின் சிறு தூரல் சென்னையெங்கும் சாரலை நிரப்பியிருக்கும் பொழுதாகவும் மருதாணியும் குல்மோகரும் மாமரங்களும் பன்னீர்ப்பூக்களும் பூத்திருக்கும் பிரதேசமாகவும் மொழியில் சென்னையை நிலைநிறுத்திச் செல்கிறது. அவரது படைப்புகளும் படைப்புச் செயல்பாடும் மிக முக்கியமானது என்பதற்கு அவரது சிறுகதைகளில் வெளிப்படும் இயற்கை குறித்த சித்தரிப்புகளே சொற்சாட்சியங்கள் ஆகும். 

கவிதா சொர்ணவல்லியின் கதாமாந்தர்கள் அனைவருமே இனியவர்கள்; இனிமை நிறைந்தவர்கள்; இனிமையை மட்டுமே தேர்ந்தெடுப்பவர்கள். இனிமையை மட்டுமே காண முடிவெடுத்தவர்கள். 

சங்கப்பாடல் ஒன்று உள்ளது. 

ஒரு வீட்டில் மங்கல இசை ஒலிக்கிறது
இன்னொரு வீட்டில்
சாவுமேளம் கேட்கிறது
துயர் மிக்கது இவ்வுலகம்
அதன் 
இயல்புணர்ந்தவர்கள்
அதன் இனிமையை மட்டுமே காண்பார்கள்

கவிதா சொர்ணவல்லியின் படைப்புலகை துயரற்ற இனிமைகளின் உலகம் என்று சொல்லலாம். மானுடர்க்கு அவர் படைப்பாளியாக ஒரு செய்தியைக் கூறுகிறார் : நாம் வாழும் உலகில் நாம் காணும் உலகில் இனிமைகளால் ஆன இனிமையின் உலகம் இருக்கிறது ; அந்த இனிமையை மானுடர் தேரட்டும். 

’’திங்களைப் போற்றுதும்’’ எனத் துவங்குகிறது துறவியான இளங்கோ படைத்த சிலப்பதிகாரம். திங்கள் பெண்மைக்கும் நீதிக்குமான குறியீடு. திங்களை முன்நிறுத்தி திங்களுக்கு முதன்மை இடம் கொடுத்து ஞாயிறை அடுத்து வைக்கிறான் இளங்கோ. நம் மரபில் படைப்போன் சொல்லரசியைத் தன் நாவில் நிலைநிறுத்திக் கொண்டான். மாயோன் அலைமகளுக்குத் தன் முழு இதயத்தையும் தந்தான். சங்கரன் உமையில் பாதியாகத் தான் ஆனான். 

கவிதா சொர்ணவல்லியின் சிறுகதைகளை ‘’திங்களைப் போற்றுதும்’’ எனப் போற்றிய தமிழ் மரபின் நிகழ்காலத் தொடர்ச்சியாக நான் காண்கிறேன்.