நமது நாட்டின் மரபு காலத்தை நேர்க்கோடாக மட்டும் இன்றி வட்ட சுழற்சியாகவும் காண்கிறது. அவ்விதத்தில் 60 ஆண்டுகள் ஒரு முழு சுழற்சியாகக் கொள்ளப்படுகின்றன. ஒரு முழு சுழற்சி நிறைவுற்று மீண்டும் ஒரு புதிய சுழற்சி உருவாகிறது எனக் கொள்ளப்படுகிறது. எந்த இடத்தில் ஒரு துவக்கம் நிகழ்ந்ததோ அந்த இடத்துக்கு மீண்டும் வந்து அங்கிருந்து மீண்டும் ஒரு துவக்கம் நிகழ்வது என்பதை ஓர் இயல்பாக அவதானிக்கும் தன்மை நம் மரபுக்கு உண்டு. அமாவாசை, மூன்றாம் பிறை, பௌர்ணமி ஆகிய வானியல் நிகழ்வுகள் 30 நாட்களுக்கு ஒருமுறை காலசுழற்சியாக மீண்டும் மீண்டும் நிகழ்வதை அவதானித்த நம் மரபு காலத்தை 60 ஆண்டுகள் கொண்ட சுழற்சியாகவும் உருவகித்தது. அமாவாசை, மூன்றாம் பிறை, பௌர்ணமி ஆகியவற்றை அவதானித்துக் காலத்தைக் கணக்கிடும் முறை நம் மரபில் மட்டுமன்றி சீன, அராபிய, கிரேக்க மரபுகளிலும் இருந்திருக்கிறது ; இருக்கிறது.
1967ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி தி.மு.க அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸை பதவியிலிருந்து அகற்றி ஆட்சிக்கு வந்தது. இச்செயல் நிகழ்ந்தது ‘’பராபவ’’ என்னும் தமிழ் ஆண்டில். 60 ஆண்டுகளுக்குப் பின் அதே ‘’பராபவ’’ ஆண்டு நிகழும் இத்தருணத்தில் 2026ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி தேர்தல் முடிவுகளின் படி இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு புதிய கட்சி - தி.மு.க வை தன் அரசியல் எதிரியாக அறிவித்து மக்களைச் சந்தித்த புதிய கட்சி = தி.மு.க வை பதவியிலிருந்து அகற்றி ஆட்சிக்கு வந்துள்ளது.
1967ம் ஆண்டுக்கும் 2026ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 60 ஆண்டு காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் தமிழகத்தில் நம் நாட்டில் உலகில் எத்தனையோ சமூக பொருளாதார அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. தமிழக அரசியலில் இந்த 60 ஆண்டுகளில் தி.மு.க பிரதானமான ஒரு சக்தியாக இருந்திருக்கிறது. பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. சில முறை தி.மு.க கட்சி உடைந்திருக்கிறது. தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டு பின் புதிதாகக் கட்சி துவங்கிய எம்.ஜி.ஆர் 1977ம் ஆண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். 1989ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது அவர் உருவாக்கிய அ.இ.அ.தி.மு.க கட்சி. அதன் பின் தி.மு.க வும் அ.தி.மு.க வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. தி.மு.க , அ.தி.மு.க தவிர இன்னொரு கட்சி இந்த 60 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசியலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வென்றிருந்தாலும் எந்த கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு அளித்ததில்லை. 1967ம் ஆண்டில் பதவிக்கு வந்ததிலிருந்து நிகழ்ந்திருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி இப்போது ஒரு முடிவைக் கண்டிருக்கிறது. ஒரு புதிய அரசியல் கட்சி பதவிக்கு வந்திருக்கிறது.
2026ம் ஆண்டு ஆகிய இவ்வருடத்தின் இன்றைய தரவுகளின் படி உலக மக்கள் தொகையின் 40 சதவீதம் மக்கள் மட்டுமே ஜனநாயக அரசின் கீழ் வாழ்கின்றனர். இன்னும் உலகின் 60 சதவீத மக்கள் சர்வாதிகார மற்றும் மன்னராட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அந்த நாட்டின் மக்களை இன்னும் ஜனநாயகம் சென்று சேரவில்லை. சீனா, ரஷ்யா, ஒட்டு மொத்த அரபு நாடுகள், ஈரான், ஆஃப்கானிஸ்தான் என பல நாடுகளில் ஜனநாயகமே இல்லை. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
1947ம் ஆண்டிலிருந்து இன்று வரை நாம் ஜனநாயக நாடாக இருக்கிறோம். ( இந்திரா காந்தி தனது சுயநலத்துக்காக ஜூன் 25, 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த இருண்ட காலம் மார்ச் 21 1977 வரை நீடித்து பின் அந்நிலை நீங்கி நாம் மீண்டும் ஜனநாயக நாடானோம்) நமது நாட்டின் அரசு இயங்கும் விதத்தில் குடிமக்களுக்கு மேலும் சிறப்பான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் நாம் ஜனநாயக நாடாக இயங்குவது என்பது நமது பெரும் சாதனையும் நம் நாட்டின் தனிச்சிறப்பும் ஆகும்.
தி.மு.க விலிருந்து பிரிந்த கட்சிகளைப் பொதுவாக திராவிடக் கட்சிகள் எனக் குறிப்பிடுவதுண்டு. தமிழக முன்னாள் முதல்வர் கு.காமராஜ் திராவிடக் கட்சிகளை ‘’ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’’ என வரையறுத்தார். அந்த வரையறையின் பொருத்தப்பாடு இன்று வரை தொடர்கிறது. தி.மு.க மற்றும் தி.மு.க விலிருந்து உருவாகி வந்த திராவிடக் கட்சிகளை ’’பாப்புலிசக் கட்சிகள்’’ என வகைப்படுத்தலாம். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் 1986ம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட வி.கோரஸ் என்பவரின் ‘’வளர்முக நாடுகளில் பாப்புலிசம் : நேற்றும் இன்றும்’’ என்னும் நூல் தி.மு.க வின் அரசியலை ‘’பாப்புலிச அரசியலுக்கான’’ சிறந்த உதாரணமாகக் காட்டுகிறது. பாப்புலிசக் கட்சிகளை பொதுவாக இவ்விதம் வரையறை செய்யலாம். அதாவது, பாப்புலிசக் கட்சிகளுக்கு தங்களுக்கென ஒரு அரசியல் புரிதல் இருக்காது. தங்கள் கருத்தியலை இரவலாகப் பெறுவார்கள். அதிகாரத்தில் இருப்பதற்கான விஷயங்களைச் செய்து கொண்டு அரசியல் செய்வார்கள். ஜனநாயகத்தில் எல்லா அரசியல் கட்சிகளிலும் பாப்புலிச அம்சம் கணிசமான அளவில் இருக்கவே செய்யும் என்றாலும் பாப்புலிசக் கட்சிகள் 100 சதவீதம் பாப்புலிசத்தை மட்டுமே நம்பும் ; 100 சதவீதம் பாப்புலிசத்தை மட்டுமே செயல்படுத்தும்.
பாப்புலிச அரசியலில் நிலை கொண்டிருக்கும் தி.மு.க ‘’பிரித்து ஆளும்’’ அரசியலை தன் நடைமுறையாகக் கொண்டது. மக்கள் சமூகம் என்பது பலவிதமான குழுக்களால் ஆனது. அதில் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இருக்கும் வேறுபாட்டைப் பயன்படுத்தி அவற்றுக்கு மத்தியில் தங்களை நிறுவிக் கொண்டு ஒரு குழுவின் ஆதரவைப் பெற்று தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது ‘’பிரித்து ஆளும்’’ அரசியலின் தன்மை.
60 ஆண்டுகாலம் என்பது மிகவும் நீண்டது. நமது மரபுப்படி கிட்டத்தட்ட 4 தலைமுறைகளைக் குறிக்கும். திராவிடக் கட்சிகள் தமிழகத்தை இத்தனை நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள்தொகை கொண்ட மாநிலத்தை ஆட்சி செய்யும் போது மக்கள் எதிர்பார்ப்புகள் பலவிதங்களில் இருப்பது இயல்பானது. திராவிடக் கட்சிகளின் மீது நான் முன்வைக்கும் புகார்கள் என்ன என்பதைப் பதிவு செய்கிறேன்.
1. சாராய அரசியல்
சமூகத்தில் மது மிகக் குறைந்தபட்ச அனுமதியுடன் மிகக் குறைந்தபட்ச அளவில் மட்டுமே இருக்க வேண்டும். பூரண மதுவிலக்கு என்பது ஒரு லட்சியநிலை. எனினும் 99 சதவீத மதுவிலக்கை எந்த சமூகமும் நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியும். திராவிடக் கட்சிகளின் மீது வைக்கப்படும் முதன்மையான புகாரே திராவிடக் கட்சிகள் சாராயக் கட்சிகள் என்பதும் திராவிட அரசுகள் சாராய அரசுகள் என்பதுமே.
மகாத்மா காந்தியால் ‘’தனது மனசாட்சி’’ என அழைக்கப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவருமான மூதறிஞர் ராஜாஜி, கொட்டும் மழையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டு ’’நீங்கள் என்னை விட வயதில் இளையவராக இல்லையென்றால் தங்கள் காலைத் தொட்டு கேட்பேன் ; தமிழகத்தில் மதுவுக்கு அனுமதி கொடுக்காதீர்கள் ’’ என மன்றாடினார்.
அனைத்து அறங்களும் புறந்தள்ளப்பட்டு தமிழ்ச் சமூகத்தின் மீது சாராயம் திணிக்கப்பட்டது. திராவிடக் கட்சிகள் மீது இருக்கும் - இருக்கப் போகும் நிரந்தரப் பழியாகும் இது.
60 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாராயக் கடை நடத்தினார்கள். சாராயம் மூலம் கிடைத்த லாபத்தால் ரவுடித்தனத்தை வளர்த்து சமூக அமைதியைக் கெடுத்தார்கள். ரவுடிகளை அரசியலுக்குக் கொண்டு வந்தார்கள். அதை இன்னும் பலவிதங்களில் மேம்படுத்தி இப்போது திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாராய ஆலைகள் நடத்துகிறார்கள். அரசு ஊழியர்களைக் கொண்டு காவல்துறை பாதுகாப்பு கொடுத்து சாராயம் விற்கிறார்கள். அந்த சாராயக் காசைக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துகிறார்கள்.
2. வாக்கு வங்கி அரசியல்
பட்டியல் சாதியினர் மற்றும் மதச் சிறுபான்மையினரை தங்கள் வாக்கு வங்கியாக திராவிடக் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். பட்டியல் சாதியினருக்கோ அல்லது மதச் சிறுபான்மையினருக்கோ எந்த நடைமுறை அரசியல் அதிகாரமும் திராவிடக் கட்சிகள் அளித்ததில்லை.
3. பிரிவினை அரசியல்
நம் நாடு பல்வேறு சமூகங்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் இணைந்து வாழும் நாடு. நாம் பிரிட்டிஷ் ஆட்சியால் இரண்டு நூற்றாண்டுகள் இரக்கமில்லாமல் சுரண்டப்பட்டோம். கோடிக்கணக்கான மக்கள் இணைந்து முன்னேற வேண்டிய அவசியம் இருக்கும் நாடாவோம் நாம். ஒரு மொழியையும் இன்னொரு மொழியையும் எதிரியாகக் காட்டி நாட்டின் பிற பகுதிகளில் வாழ்பவர்கள் மீது வெறுப்பைத் தூண்டி விட்டு செய்யும் பிரிவினை அரசியல் திராவிடக் கட்சிகளில் தி.மு.க விற்கு முழுமையாக உரியது.
4. கலைப் பொக்கிஷங்களின் அழிவு
எந்த ஜனநாயக அரசாங்கமும் தங்கள் பிராந்தியத்தின் கலைப் பொக்கிஷங்களைக் காக்க முயலும். திராவிடக் கட்சிகள் ஆலயக்கலையை அழித்தன ; அழிக்கின்றன.
5. ஊழல்
பாப்புலிசக் கட்சிகளின் இயல்புகளில் பிரதானமானது அவர்கள் அரசு ஊழியர்களை தங்கள் மானசீகக் கூட்டாளிகளாகக் கொள்கிறார்கள் என்பதே. எனவே நிர்வாகத்தில் நிகழும் ஊழலை பாப்புலிசக் கட்சிகள் முழுமையாக அனுமதிக்கும். 60 ஆண்டு தமிழக அரசு நிர்வாகம் என்பது ஊழல் நிர்வாகமே.
ஒரு ஜனநாயக அரசு கோடிக்கணக்கான மக்களால் வாக்கு செலுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு பல கோடி எதிர்பார்ப்புகள் இருக்கும். திராவிடக் கட்சிகளை வீழ்த்தி புதிதாக வந்திருக்கும் கட்சியிடம் சாமானிய மக்கள் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும் என்பதைப் பட்டியலிடுகிறேன்.
சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்பு
1. தி.மு.க முதலில் சாராயக் கடை நடத்தியது ; பிராந்தி ஷாப் ஏலம் எடுத்து நடத்தியது ; சாராய ஆலை நடத்தியது ; கள்ளச்சாராய வியாபாரமும் செய்தது. 2021ம் ஆண்டிலிருந்து 2026ம் ஆண்டு வரை போதைப் பொருள் வியாபாரமும் செய்தது. பள்ளி மாணவர்கள் கஞ்சாவும் போதை சாக்லெட்டும் பயன்படுத்துவதை கடந்த 5 ஆண்டுகளில் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புதிய அரசு போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
2. புதிய அரசு, தமிழகத்தில் இருக்கும் வழக்கமான, அரசே குடிமக்களுக்கு மது விற்கும் முறையை நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.
3. பட்டியல் சாதியினரின் பொருளியல் மேம்பாடு நிகழ்வதை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
4. பிரித்து ஆளும் அரசியல் திராவிடக் கட்சிகளின் பாணி. அது 60 ஆண்டுகள் சுழன்று ஒரு முடிவை எட்டியுள்ளது. புதிய அரசு திராவிடக் கட்சிகளின் பிரிதாளும் பாணிக்குப் பதிலாக மக்களை ஒற்றுமைப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். மொழி , பிராந்தியம், சாதி இவற்றைக் கொண்டு பிரித்தாளும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.
5. 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியல் என்பதில் பிரதான இடம் வகிப்பது ஆலயங்களைச் சூறையாடி ஆலயச் சொத்துக்களை கொள்ளையடித்ததே. வறிய நிலையிலும் ஆலயத்தை விட்டு அகலாமல் இருக்கும் அர்ச்சகர்களுக்க்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆலயப் பராமரிப்பு அரசின் பணியல்ல ; அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும்.
6. தமிழக அரசு நிர்வாகத்தில் லஞ்சம் தன் அதி உச்சத்தைத் தொட்டிருக்கும் காலகட்டம் இது. ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சாதாரண வேலைகளுக்கு - அதாவது சொத்துக்கு பட்டா வாங்குவது , ரேஷன் கார்டு வாங்குவது = கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. சாமானிய குடிமக்கள் இந்த லஞ்ச பயங்கரவாதத்திலிருந்து காக்கப்பட வேண்டும்.