Tuesday, 5 May 2026

செய்தித்தாள்

சிறுவனாக இருந்த போது காலை எழுந்தவுடன் அன்றைய செய்தித்தாளை வீட்டில் முதல் ஆளாக வாசிக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போது காலை 6.30க்கு செய்தித்தாள் வந்து விடும். வந்ததுமே வாசிப்பேன். காலையில் பாடப்புத்தகம் படிக்காமல் என்ன செய்தித்தாள் படிக்கிறாய் என வீட்டில் கேட்பார்கள். காலை எழுந்ததுமே செய்தித்தாள் எப்போது வரும் என எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் அவ்விதம் எதிர்பார்ப்பது 40 வயதுக்கு மேல் இருப்பவர்களின் இயல்பு. எனக்கும் அவ்விதம் எதிர்பார்ப்பு இருந்தது. செய்தித்தாள் போடுபவர் ஒருவர் காலை 6.30க்கு செய்தித்தாள் கொண்டு வந்து விடுவார். முகவராக இருந்த அவர் மாற்றப்பட்டு இன்னொருவர் முகவரானார். செய்தித்தாள் வரும் நேரம் காலை 8 மணி என்றாகியது. சிறுவனான நான் அந்த செய்தித்தாளுக்கு கடிதம் எழுதினேன். அதாவது எனக்கு பள்ளி காலை 10 மணிக்குத் துவங்கும் என்றும் காலை 6.30க்கு செய்தித்தாள் வந்தால் 6.45 வரை அதனை வாசித்து விட்டு அதன் பின் வானொலியில் மாநிலச் செய்திகள் கேட்டு விட்டு பின் மீண்டும் 7.20 வரை வாசித்து விட்டு வானொலி தில்லி செய்திகள்  கேட்டு விட்டு அதனைத் தொடர்ந்து வரும் தென்கச்சி சுவாமிநாதனின் ‘’இன்று ஒரு தகவல்’’ கேட்டு விட்டு அதன் பின் பள்ளிப் பாடங்களை படித்து விட்டு 8.30 மணி அளவில் குளித்து உணவருந்தி 9.30 அளவில் பள்ளிக்குக் கிளம்புவேன் என்றும் செய்தித்தாள் காலை 8 மணிக்கு வந்தால் என்னுடைய காலை வழமைகள் மாறி விடுகின்றன என்பதால் காலை 6.30க்கு செய்தித்தாள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அந்தப் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதினேன். ஒரு வாரத்தில் அந்தப் பத்திரிக்கை தபால் மூலம் எனக்கு ஒரு பதில் அனுப்பியது. நான் அந்தப் பத்திரிக்கையின் வாசகனாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கும் விஷயம் குறித்து விசாரிப்பதாகவும் காலை முன்நேரத்தில் பத்திரிக்கை கிடைப்பதை உறுதி செய்வதாகவும் இது தொடர்பாக பத்திரிக்கையின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் நேரில் சந்திப்பார் என்றும் பதில் எழுதியிருந்தனர். சிறுவனான எனது கடிதத்துக்கு அந்தப் பத்திரிக்கை அத்தனை முக்கியத்துவம் கொடுத்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. 

இப்போது செய்தித்தாள் வாசிக்க காலை 9 மணி அளவில் ஆகிறது. செய்தித்தாள் வரும் நேரமும் அதுவே. சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு முழு செய்தித்தாளையும் வாசித்து விடுவேன். 

இன்று காலை ஆங்கிலப் பத்திரிக்கையின் தேர்தல் புள்ளிவிபரங்கள் அறிக்கையைக் கண்டேன். நேற்று இரவு 10.30 நிலவரப்படி நான்கு மாநில தேர்தல் முடிவுகளை அழகுற வடிவமைத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் வெளியிட்டிருந்த விதம் மிக ச் சிறப்பாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது ஏதேனும் மாநிலத் தேர்தல் வருகிறது. அவ்விதமெனில் 700 நாளைக்கு ஒருமுறை தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட வேண்டும். பல் ஆண்டுகள் இவ்விதம் வெளியிட்டு அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று தோன்றியது. இன்று தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நிமிடத்துக்கு நிமிடம் பல செய்திகளும் விபரங்களும் குவிகின்றன. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கும் நேரம் என்பது காலை 8 மணியிலிருந்து இரவு 10.30 வரை மட்டுமே. அதற்கு மேல் அதிகபட்சம் 1 மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம். இரவு 11.30க்கு அவர்கள் தயாரித்த அட்டவணைகளும் விபரங்களும் அச்சேற வேண்டும். அதிகாலை 2 மணி அளவில் அச்சு அலுவலகத்திலிருந்து ஊர்களுக்கு வண்டிகள் செய்தித்தாளுடன் கிளம்பிட வேண்டும். இந்த வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் அவர்கள் தேர்தல் தரவுகளை சிறப்பாக அளித்திருந்தார்கள் என்று தோன்றியது. 

அட்டவணைகள் எவ்விதம் அமைய வேண்டும் எந்த விபரங்களை வாசகர் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருப்பார்கள் என்றும் தரவுகள் வர வர அவற்றை அட்டவணையில் பதிவேற்றுவார்கள் என்றும் யூகித்தேன். 

தமிழகத் தேர்தல் பக்கங்களை வாசித்த போது அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயத்தை அப்போது தான் கவனித்தேன். அதாவது, எங்கள் மாவட்டத்திலும் எங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் 3 சிறு மாவட்டங்களிலும் 2021ல் ஆளுங்கட்சியாகவும் 2021ல் எதிர்க்கட்சியாகவும் இருந்த இரு கட்சிகளே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது எனது கவனத்துக்கு வந்தது. அந்தப் பத்திரிக்கையின் தரவுகள் வடிவமைப்பு அணி திறமை மிக்கது என எண்ணினேன்.