Friday, 6 April 2018

நிலம் மேல்
நீர் தேங்கா நிலத்தில்
சிலம்பிக் கொண்டிருக்கின்றன
உவர் அலைகள்
பின்னர் ஆழ்அமைதி

பறவைகள் பறக்கும்
மேகங்கள்
ஏதுமிலா வானம்

சாக்கடை ஈரம்
எஞ்சும்
நிழலில்
எப்போதும் படுத்துக் கொள்கிறது
வீதி நாய் டோலி

வெயிலின் சுவாதீனத்தில்
இருக்கின்றன
ஆளற்ற வீதிகள்

சிமெண்ட் சுவர்களுக்குள்
உணரப்படுகிறது
கருணை இன்மையின்
வெப்பம்

இந்தக் கோடையின்
வேப்பந்தளிர்களுக்குத்தான்
எவ்வளவு மென்மை
எவ்வளவு மிருது

பூக்களுக்குத்தான்
எத்தனை சந்தோஷம்
எவ்வளவு நம்பிக்கை

Thursday, 5 April 2018

தொடர்ச்சி


புதிய நாள் சுமக்கிறது
பழைய நாட்களின் சுமையை

ஒரு புதிய உறவு அளிக்கும் உற்சாகத்தில்
விரவிக் கிடக்கின்றன
எல்லா உறவுகளும் அடைந்திருக்கும் எல்லைகள்

தெய்வ சன்னிதானத்தின் கோப்பில்
ஒரு புதிய தாள் சேர்கிறது
இன்றைய பிராத்தனைகளுடன்

ஒவ்வொரு முறையும்
தனக்கு வரும் காதல் கடிதத்தால்
ரகசிய உவகை அடைகிறாள்
ஓர் இளம் பெண்

பல வருட வாடிக்கையாளர்
அளித்த பணத்தை
கல்லாவில் போட்டு விட்டு
பொருளை
கடைப்பையனை
இறுக்கமாகக் கட்டி
வாகனத்தில் ஏற்றச் சொல்கிறார்
கடைக்காரர்

இம்முறை
தென்மேற்கு பருவக்காற்றால்
தமிழகத்துக்கு
சராசரி அளவை விட
கூடுதலாக
மழை கிடைக்கும்
என்கிறது
வானொலிச்செய்தி

Wednesday, 4 April 2018

மார்க்க சகாயம்



பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாது
தனியாய்
தெய்வம் வீற்றிருந்த
புராதன திருத்தலம்

மனிதப் புழக்கம்
வருடக்கணக்கில்
மிகக் குறைவாய்
இருந்ததன்
சுவடுகள்
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு பார்வையிலும்

இல்லாமல் இருந்த
மணி
மெல்ல அதிர்ந்தெழும் ஓசையையும்
காண்டாமணியையும்
கொண்டு வந்தது
கற்பனையில்

அவ்வப்போது
சடசடத்து
பறந்தெழுந்த புறாக்கள்
ஒடுங்கிக் கொண்டன
கோபுர
சுதை சிற்பங்களின்
இடைவெளிகளில்


இரவில்
கிராமத்துச் சாலையில்
தனித்து நடப்பது போல்
பிரகாரத்தைச்
சுற்றி வந்து
தல விருட்ச நிழலில்
ஓய்வாய்
உட்கார்ந்தேன்

தெய்வத்திடம்
லௌகிக வாழ்வில்
துணையிருக்க வேண்டிக் கொண்டு
புறப்பட்டுச் சென்ற போது
வழித்துணையாய்
வந்தன
கோபுரத்துப் புறாக்களும்
தல விருட்ச நிழலும்
மண்டபத்து சிற்பங்களும்

*******

பயண நினைவுகள்



பெண் முகப் பருக்களென
திட்டு திட்டாய் சிவந்திருந்தது
விடியலின் வானம்

காதலன் உடன் இருக்க
மகிழும்
பொன் ஒளிர் காதலி
அலை எழும் சூரியன்

நிறை சூல் பெண்ணென
மௌனித்திருக்கிறது
மேகக் கரும் திரட்சி

ஈற்றுப் பொழுதின்
நிகழ்வுகளாய்
பகல் நகர்கிறது
அந்தி நோக்கி

உடைந்த வானம்
விடுவிக்கிறது
ஓயாப் பெரு மழையை

பயணியின் மனம்
குறிப்புணர்த்துகிறது
அடுத்த கட்ட நகர்வை

கமலப் பூ


ஒவ்வொன்றாய் 
துறந்து வந்த துறவி
மஞ்சள் நிற வெயில்
விடைபெறும்
அந்தியில்
நடந்து சென்று கொண்டிருந்தான்
இரவினை நோக்கி

நிலவின் ஒளிக்கு தாகித்திருந்த
அவனது மனம்
சந்தனமாய்
மணந்தது 
பாதையெங்கும்

வாசம் தீண்டிய தாவரங்கள்
பூக்கத் துவங்கின
ரோஜாக்களாய்

உடல் குழையும்
குக்கல்கள்
தீனமாய் அரற்றி
உடன் வந்தன

கண்ணீரையும்
வலிகளையும்
ஏற்றுக் கொண்டு
பாரம் நீக்கச் சொன்னார்கள்
ஊர் மக்கள்

அலைகடல் ஓசை 
சுருதி மீட்டும்
இரவில்
விண் நோக்கி 
அமர்ந்து
மலர்ந்தான்
நாடோடித் துறவி

எப்போதாவது
வாய்க்கும் தருணத்தில்
மலர் வாசம் உணர்ந்தனர்
எப்போதும் பாரம் சுமக்கும் 
ஊர் மக்கள்

Tuesday, 3 April 2018

பற்றி எரிகிறது
மிதக்கும் கானல் ஆவி எழும்
கோடையின் நாட்கள்
நீறு பூத்து
எதுவும் இல்லாமல் இருக்கின்றன
தற்காலிகமாக கைவிடப்பட்ட வீதிகள்
துளி நீரைத் தேடுகின்றன
வானத்துப் புட்கள்
பெய்யும்
என அறுதியிட முடியாத
மேகம்
பொழிகிறது
எங்கும் நம்பிக்கையின் நீர்மையை

03.04.2018
11.00

தனி அகம்

இந்த பெரிய வீட்டின்
ஓசையின்மைகளிலும்
அவ்வப்போது கேட்கும்
சிறு சத்தங்களிலும்
ஞாபகப்படுத்தப்படுகிறது
உனது இன்மையின் தடயங்கள்
உனது இருப்பின் நினைவுகள்

சிரித்துப் பேசி மகிழ்ந்த நாட்கள்
பரிசளிப்பதையும் அளிக்கப்பட்ட பரிசுகளையும்
நினைவில் மீட்டிக் கொண்ட பொழுதுகள்
இடைவெளி இன்றி இருந்த தருணங்கள்

அன்றைய இரவின்
தீச்சுடரில்
உருகிய மெழுகு
இப்போது குளிர்ந்திருக்கிறது
அவ்வளவு இதமாக

நாம் அன்னியப்பட்டிருக்கிறோம்
மீள முடியாமல்

01.04.2018
17.05

Monday, 2 April 2018


மழையோசையில் கேட்கின்றன
உறங்கும் குழந்தையின் சிரிப்பு
அன்னைத் தாலாட்டு
மைதானத்தின் உற்சாக ஆர்ப்பரிப்பு
இளம் பெண்கள் கூட்டத்தின் துள்ளல்
அலையோசை
ஆனைப் பிளிறல்
சிம்ம கர்ஜனை
காதலி குரல்
தோழியின் அழுகை
கொல்லுப் பட்டறையின் துருத்தி
உலை கொதித்தல்

தவிட்டுக் குருவி சிலுப்பிக் கொள்கிறது
தன் உடலை
உதறி துண்டு காய வைப்பது போல்

Sunday, 1 April 2018



’என்ன அப்டி பாக்கற’
உனது முகத்தின் ஒரு பாதி
பணிந்திருக்கும் கருங்கூந்தல்
மென் கன்னங்கள்
நீள் கழுத்து
உன் காதார் குழை
மகிழுந்தின் பொம்மை போல் அலைவுறுகிறது
காட்சிகள் மாறும் பயணத்தில்
மாறும் உன் முகம்

’என்ன யோசிக்கற’
உனது ஆர்வங்கள்
உனது குதூகலங்கள்
உனது ஐயங்கள்
உனது முன்னெடுப்புகள்
உனது நம்பிக்கைகள்
உனது எளிமை

’சேர்ந்து நட’
காற்று நீர்மை சுமக்கும்
ஆற்றை அடுத்த தெருவில்
உற்சாகமாய் உரையாடி
நெருங்கி விலகி
நடந்து கொண்டிருக்கும் போது
அவ்வப்போது
என் மனம் செல்லும் தூரம்
எத்தனை கிலோ மீட்டர்?
வானாகி
காற்றில் அலையும்
கூந்தல் பரப்பில் விரல் கோதி
முகம் ஒளிரும் இரு சுடர் கண்டு
மென் தோளில் அதீத கால முகம் புதைத்து
எல்லையற்ற கடலில்
ஆதி விடாய் தீர்த்து
எழுகிறது
ஒரு கணம்
ஒரு சூரியன்
ஒரு மதி