Tuesday, 15 May 2018

பார்வை முன்
விரிந்திருக்கும் பாறைத் திரைகளையும்
குத்திட்டிருக்கும் மரங்களையும்
கை தொடுகையில்
ஒட்டிக் கொண்டிருக்கும் மேகங்களையும்

அப்படியே விட்டு விட்டு

ஊர் திரும்ப வேண்டியிருக்கிறது
மலைப் பிரதேசத்திலிருந்து

09.05.2018
09.10

Monday, 14 May 2018

கூற நினைத்து
சொல் சேர்த்து
ஒத்திகை பலமுறை பார்த்து
எப்போதுமே
சொல்லாத சொற்கள்

ஆங்காங்கே தனித்திருக்கின்றன
பூஞ்சோலைகளாக
மலைப் பாறைகளாக
திக்குத் தெரியாத காடாக
கடற்கரை மணற்பரப்பாக

அன்னியனாக
சென்று வருவதுண்டு
அவ்வப்போது

தாயகம்


காலைப்பொழுதில் நெடுஞ்சாலையில் குடத்துடன் நடந்து கொண்டிருக்கிறாள் ஒரு பெண்
தேனீர்க்கடையின் கண்ணாடி தம்ளர்களை கழுவிக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி
தூங்கி எழுந்து அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு ரொட்டியுடன் காய்ச்சிய பால் தருகிறாள் ஓர் அன்னை
கல்லூரிக்குச் செல்ல பெட்ரோல் நிரப்ப வருகிறாள் யுவதி
முன்பகலில் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறாள் நடுவயதுப் பெண்
பனிமூட்டம் முழுதகலாத பொழுதில் தேர்வுக்குச் செல்கின்றனர் சிறுமிகள்
வங்கி பணம் செலுத்து சீட்டில் முத்திரையை சத்தமாகப் பதிக்கிறார் பெண் காசாளர்
விரைந்து செல்லும் வாகனத்தின் வயர்லெஸ்ஸில் அலுவலர்களுக்கு குறிப்பு அளிக்கிறார் பெண் அதிகாரி
பள்ளி முடிந்த பின் மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கிறார் ஆசிரியை
துர்க்கையின் ஆலயத்தில் அகல் தீபம் ஏற்றுகின்றனர் இளம்பெண்கள்
மானுடரின் பிரார்த்தனைகளை கேட்டுக் கொண்டு நடந்து கொண்டே இருக்கிறாள் கங்கை

Saturday, 12 May 2018

நாம் வாழும் உலகம்

அங்கும் இங்கும்
தாவிச் செல்லும்
சிட்டுக்குருவி

அந்தர வளையத்தில்
உள் நுழைந்து
வெளியேறும்
தூக்கணாங்குருவி

வயல் வெளி
கம்பி அமர் கரிச்சான்கள்

காலை மதியத்தில்
மாலைப்பொழுதுகளில்
கூடிக் கரையும் காகங்கள்

கோபுர இடுக்குகளில்
வாசம் புரியும் புறாக்கள்
பச்சைக் கிளிகள்

அழகானது
இந்த உலகம்
நாம் வாழும் உலகம்


பல்லாண்டுகளாய்
அலைகள் கரை தொடும்
கடல் கரையில்

பல்லாண்டுகளாய்
அலைகளில் மிதக்கும்
பழுப்பேறிய கட்டுமரங்கள்

பல்லாண்டுகளாய்
வீசும் சந்திர ஒளியின்
பொழுதில்

பல்லாண்டுகளாய்
பார்த்துக் கொண்டிருக்கிறது
கடலை
கரையை
ஒளியை

சில ஆண்டுகளாய்
அவ்வப்போது
வந்து போகும்
என்னையும்
குளக்கரை மரத்தடியில்
நூறாண்டுகளாய்
அமர்ந்திருக்கும்
பிள்ளையாருக்கு
எட்டு ஆண்டு அகவை கொண்ட
சிறுமி
அருகம்புல் மாலை சாத்துகிறாள்

சிறுமியின் கொடிவழியை
நினைவு கூர்ந்து
மலைக்கிறார்
கண ஈசர்

Thursday, 10 May 2018

மண் பூக்கும் நிலம்

வானம் கரு கொண்ட 
நாள் ஒன்றில்
காணா பிரதேசம் ஒன்றுக்கு
உடன் 
மழை வர
தரை மார்க்கமாய்
பயணித்தேன்

மண் நின்ற
கிளைகளில்
பொற்கதிர்
மண் சாய்ந்த நிலம்
கடந்து போனேன்

அதலம்
கொதி குழம்பாய்
லட்சம்
ஆண்டுகளுக்கு
முன்னால்
பொங்கி வந்த
மண்ணில்
இப்போது
மீன்கள் நீந்திய சுனையில்
ஆடையற்ற குழந்தைகள்
குதித்துக் கும்மாளம் போட்டன
எப்போதோ பூக்கும் பல்லாண்டு
மரத்தோப்பு
மத் திய நேரத்தில்
ஆசுவாசமாய் வேடிக்கை பார்த்தது
சூழலையும் சுற்றத்தையும்

மலை உடைந்து
கூழாங் கல் ஆன நிலத்தில்
மஞ்சள் மலர்
கதிர்
பார்த்து
சிரித்தது







Wednesday, 9 May 2018

மேல் கூரை

என் வாழிடத்தின்
கூரை
பெரிதாய் இருந்தது
மிகப் பெரிதாய்

பாதி நேரம்
எண்ணற்ற துளைகளுடன்
மிகக் குறைந்த சலனங்களுடன்
முழுக் கருமையிலிருந்து
முழு வெண்மைக்கும்
முழு வெண்மையிலிருந்து
முழுக் கருமைக்கும்
நிறபேதம் கொண்டு

மீதி நேரம்
மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தது
அனலும்
குளிரும்

கூரையை
மாற்ற விரும்பினேன்
என் எண்ணப்படி
பொருந்திக் கொண்டன
தாவர பாகங்கள்

நிழல் குளுமை
ஆசுவாசமளித்தது
நாளெல்லாம்

அடிக்கடி பார்ப்பதுண்டு
முன்பிருந்த
மேல் கூரையை

07.05.2018
20.10

Tuesday, 8 May 2018

வசுதைவ குடும்பம்


நிலங்களில் சஞ்சரிக்கும்
பயணி
விளையாட்டு
மைதானத்தில்
முதலில்
கேட்டான்
‘உலகம் ஒரு குடும்பம்’

மன மண்ணில்
விதையாய்
விருட்சமாய்
எழுந்தது
அச்சொல்

டிராக்டர் உழும் வயல்கள்
நீர் பீறிடும் மோட்டார் கொட்டகைகள்
குவித்துப் போட்டு உருளைக்கிழங்கு ஏற்றும் லாரிகள்
மூடை வெங்காய மண்டிகள்
முள்ளங்கி வயல்கள்
உப்பளங்கள்
மோட்டார் படகுகள்
விமான நிலையங்கள்
எஸ்கலேட்டர்கள்
என்ஜின் லோகோக்கள்
சுங்க சாவடிகள்
டூ வீலர் ஒர்க் ஷாப்கள்
ஷாப்பிங் மால்கள்
செருப்புக் கடைகள்
பொக்கே ஷாப்கள்
பத்திரிக்கை கட்டு ஏற்றும் லோடு வண்டிகள்
ராணுவ சோதனைச் சாவடிகள்
பதுங்கு குழிகள்
கசாப்புக் கடைகள்
ஆயுதபாணிகளின் பயிற்சி முகாம்கள்
சிறைச்சாலைகள்
ராக்கெட் ஏவுதளங்கள்
வேதி ஆலைகள்

எங்கும் பயணித்து

மைதானம் மீண்டான்

பெரு விரி வெளியில்
நடை பயிலா குழந்தை
மானுடரையும்
கோள்களையும்
மதியையும்
ஞாயிறையும்
சக ஆட்டக்காரர்களாய் கொண்டு
துவங்கியது
ஓர் ஆட்டத்தை

Monday, 7 May 2018

நான் எழுதுவேன்

நான் எழுதுவேன்
தன்னல மறுப்புகளிலிருந்து
மறுக்கப்பட்ட நீதியிலிருந்து
செலுத்தப்பட்ட படைக்கலன்களிலிருந்து
பூட்டிய அறைகளிலிருந்து
வீச்சம் அடிக்கும்
இன்னும் உலராத குருதியிலிருந்து
ஓயாத வதையிலிருந்து

பெருகும் கண்ணீரை
ஓயாமல் பெருகும் கண்ணீரை

நான் எழுதுவேன்
நான் இன்னும் எழுதுவேன்