Monday, 21 May 2018

வான வண்ணம்


வெளியூர் பயணி
நின்று கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை
புராதான நகருக்கு
இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது
சுற்றுச் சாலையின்
எல்லைக்குள்
அடங்கி விடுகிறது
வரலாறு
வாகனங்கள்
பொதுமக்கள்
ஆடுமாடுகள்
வாழ்க்கை
எல்லைக்கு
உள்ளும் வெளியும்
பறக்கின்றன
வலசைப்பறவைகள்
கானாங்குருவி
மூழ்கி மூழ்கி
எழுகிறது
புது வெள்ளத்தில்
வெடிமருந்து கந்தகம்
காட்டும்
வண்ணங்களில்
அவ்வப்போது வெளிப்படுகிறது
ஆயிரம் ஆண்டு நிற்கும்
கோபுரம்

(நவீன விருட்சம் இதழ் 104ல் வெளியானது)

சிவப்பு நுரை


கரையில்
அலை விட்டுப் போன
நுரை
மணலில்
காற்றில் 
மிதக்கிறது
இந்த அந்திப்பொழுது
பகலையும்
இரவையும்
தொட்டுக் கொண்டிருப்பது போல

Sunday, 20 May 2018

இளவரசி நீங்கிய மாளிகை



நகர் நீங்கும் செய்தி
அறிவிக்கப்பட்டபோது
ஓய்வுக்கான
தளர்ச்சியே
வெளிப்பட்டது

பணியாளர்
ஒருக்கங்களை
மேற்கொண்டனர்

எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு
பூசலின்றி
ஒருங்கிணைந்து
வேகத்துடன்

பணிகள் எப்போதும் இப்படித்தான் நடந்தன
என
அவளை நம்பவைக்க
கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டது

மனிதக் குரல் எழாமல்
பொருட்களின் ஓசை மட்டும்
கேட்டது

யாரும் பேசத் தயாராக இல்லை
பார்வையின் மௌனத்தை
அவளுக்கு அளிக்க முயற்சி செய்தனர்

தாளிடப்பட்ட அறையிலிருந்து
அவள் எப்படி வெளிப்படப்போகிறாள்
என்பதை
என்றும் போல்
அன்றும்
காண விரும்பினர்

இளவரசி
எப்போதும் போல் அலங்கரித்துக் கொண்டாள்
ஆடி நோக்கினாள்
முழுதாய் மலர்ந்திருந்த செவிப்பூவை
மாற்றி
மொக்காய்
இருந்ததை
அணிந்து கொண்டாள்
அகம் சூடும் மாலையை
எளிமையானதாக
தேர்ந்தெடுத்தாள்
கூந்தலைப் பிரித்து
தோளின்
முன்னும்
பின்னும்
புரள விட்டாள்

தன் அறையின் 
தாள் நீங்கும் ஒலியின்
அடர்த்தியை
எப்போதையும் விட
கூடுதலாக
ஆக்கிக் கொண்டாள்

அறைக்கு வெளியே
தாழ்வாரங்களைத் தாண்டி
முற்றத்துக்கு அப்பால்
கூடியிருந்தோர் ஒலிகள்
சன்னமாக
கதவிடுக்கின் காற்றென
கேட்கத் துவங்கின

பணியாளர் அனுமதி கேட்டு உள்நுழைந்தனர்
அவளில் எந்த மாற்றத்தையும் உய்க்க இயலவில்லை
மெல்லிய குரல் சிலவற்றை விசாரித்து அறிந்தது
அதே குரல் சில குறிப்புகளையும் அளித்தது

அவள் தொழுவத்தை நோக்கிச் சென்றாள்
அது யாரும் எதிர்பாராததாக இருந்தது
அவளை தொலைவில் கண்டு கனைப்பை வெளிப்படுத்தின குதிரைகள்
பசுக்கள் மா என அழைத்தன
கன்றுகள் துள்ளல் கொண்டன

அவள் கைப்பிடியின் புல்
உண்ணப்பட்டது
பிராணிகளால்

புறப்பட்ட போது
உடன் வந்தன
அவிழ்க்கப்பட்ட சில கன்றுகள்

உப்பரிகைக்கு
படியேறி வந்த போது
அவளால் காக்கப்பட்ட சிட்டுக்குருவி
ஏதும் அறியாமல்
எப்போதும் போல் பறந்தது
இங்கும் அங்கும்

மீண்டும் ஒரு உதயம்

காலையில்
பால் கறக்கச் செல்லும் பால்காரர்
வாகனம் அவசரத்துடன் விரைகிறது
இன்றும் தாமதம்
இன்னும் நாலு வீடு பாக்கி

பாக்கெட் பால் போடுபவர்
காற்று ஒலிப்பான்
ஆர்வமின்றி
சப்திக்கிறது
மதிலின் மேல் பாக்கெட்
வைத்துவிட்டு

வேலைக்குச் செல்லும் பெண்ணின்
சமையலறை
வாணலியில்
கரண்டி புழங்கும் சத்தமும்
குக்கர் விசிலும்
பொருந்தாமல் ஒலிக்கிறது
ஒரே நேரத்தில்

இன்னும்
முழுதாகத் தூக்கம் கலையா பிள்ளைகள்
தெருமுக்கில்
காத்திருக்கின்றன
பள்ளிப் பேருந்துக்கு 

அவசரம்
சிகர உச்சம் கொள்ளும்
காலையில்
வாகனங்கள் விரைகின்றன
அங்கும் இங்கும்

பெரும்பாலானோர்
கவனத்தில் இல்லாமல்
இன்று வெள்ளி முளைத்து
நூறு ஆயிரம் நட்சத்திரம் உதிர்ந்து
சிவந்த வானில்
மெல்ல
மிக மெல்ல
உதித்தது
உதயசூரியன்

Saturday, 19 May 2018

மாயச்சதுரம்


சதுரங்க ஆட்டத்தின்
காய்நகர்த்தல்களில்
உன்னிடம் 
ஒரு மாயச்சதுரம்
எப்போதுமே
கூடுதலாக
இருந்தது
எதையும் போலல்லாது
எனது தோல்விகள்
கூட
மகிழ்வளித்தன
உன் முகம்
வெற்றியின் களிப்பையும்
என் தோல்விக்கான
வருத்தத்தையும்
ஒரு சேரக் கொண்டிருந்தது
அவசரமாய்
நீ கலைத்த களங்கள்
மேகங்களாய்
வெண்மையும்
கருமையும்
கொண்டிருந்தன
களம் ஒருகி
எனது ஆட்டம் துவங்கியதும்
அங்கே
சிறு தூறல்
பெய்தது
மேகத்திலிருந்து
மண் தொடும் தூறல்

நினைவுகள்


தாழ்வாரங்களில் கேட்கிறது மழையின் கீதம்
தளிரின் இளம் பச்சை அளிக்கும் நம்பிக்கை
விபத்தால் வெளியேறிய ஆட்டின் குடலென மண்ணின் குழைவு
தலையால் வாங்கி கால்வரை கசிய விடும் பழு மரம்
வேடிக்கை வெறுமனே பார்க்கும் விலங்குகள்
அவ்வப்போது இருளும் பகலில்
பதறி மீளும் பறவைகள்
அன்னை முகம் நோக்கி மகவுகள்
படுக்கை ரணமாகி மரண விஸ்வரூபம் காண 
காத்திருக்கும் முதியோர்
இனிமையும்
காதலும்
காமமும்
அலைக்கழிக்கும் 
ஆண்களும் பெண்களும்

தூவானம் விடவில்லை

(நவீன விருட்சம் இதழில் பிரசுரமானது)

Friday, 18 May 2018

கை தொடும் தொலைவு

பெருவெள்ளம்
பாய்ந்து கொண்டிருந்தது
மணல் நிரம்பிய நதியில்
வானொலிப் பெட்டி
அறிவித்தது
நீர் அளவை
அபாயம் என்று
சாய்ந்த மரங்கள்
மிதந்தன
ஆங்காங்கே
சேற்றுடன் கலங்கிய நதியில்
சுழன்றன
சில நீர்ச்சுழல்கள்
மெலிதாகத் திறந்திருக்கும்
பாய்ச்சல் மதகில்
பீரிடுகிறது
வெள்ளநீர்
மதகின் மேலிருந்து தொடுகிறேன்
பெருவெள்ளத்தை
கை தொடும் தொலைவில் உள்ள
பெருவெள்ளத்தை

Thursday, 17 May 2018

முன் நிற்றல்

வெளியில்
தென்றலை உணரும் இப்பொழுதில்
ஆயிரம் ஆயிரம் விண்மீன்களின்
முன் நிற்கிறேன்
ஒரு பெருங்கூட்டமாக

மீட்பு



ஒரு மனம் தொடும் பிராத்தனையின்
கைவிடப்பட்ட பின்னும் எஞ்சும் ஒரு நம்பிக்கையின்
நிறைந்திருக்கும் ஒரு துயரின்
அந்நேர இயலாமையின்
இறைஞ்சும் ஒரு தருணத்தின் 
ஒரு முழுத் தோல்வியின் உணர்வின்
ஓர் உன்னதமான நெகிழ்வின்

கண்ணீரில்

நான்
எப்போதுமே
தூய்மைப்படுத்திக் கொண்டு
மீள்கிறேன்
மலை உயரங்களின் குளிர்
சமவெளியில்
பின் தொடர்கிறது

நல் நினைவாய்
இனிமையாய்

ஒரு துளி இருப்பாய்